அல்சைமர் முதல் புற்றுநோய் வரை ஒருவரின் ஆரோக்கியம் குறித்த அனைத்து முக்கியமான அறிகுறிகள் காதில் படியும் அழுக்கு (earwax) மூலம் அறிந்து கொள்ளலாம். காதில் படியும் அழுக்கில் உள்ள வேதிப் பொருட்களை பகுப்பாய்வு செய்வதன் மூலமாக புதிய நோய் அறியும் முறைகளை கண்டுபிடிக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
சாம்பல் நிறத்தில் இருக்கும் இதைப் பற்றி நீங்கள் எந்த ஒரு உரையாடலிலும் பேச விரும்பமாட்டீர்கள். ஆனாலும், ஆராய்ச்சியாளர்கள் இதைப் பயன்படுத்தி புற்றுநோய், இதய நோய், டைப்-2 நீரிழிவு நோய் மற்றும் வளர்சிதை மாற்றக் குறைபாடுகளை கண்டறிவதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
சாம்பல் நிறத்தில் இருக்கும் அந்த பொருளுக்கு செருமென் (cerumen) என்று பெயர். செவிக்குழாயில் உள்ள செருமினஸ் மற்றும் செபாசியஸ் சுரப்பிகளில் இருந்து வெளியேறும் சுரப்புகளின் கலவையே இது. முடி, இறந்த செல்கள், மற்றும் இதர உடல் கழிவுகளோடு ஒன்று சேர்ந்து மெழுகு போன்ற பதத்தை இது அடைகிறது.
செவிக்குழாயில் இது உருவான உடன், கன்வேயர் பெல்ட் பொறிமுறையில், தோலின் செல்களோடு ஒட்டிக் கொள்ளும் இந்த அழுக்கானது காதின் உட்புறத்தில் இருந்து வெளிப்புறத்துக்கு வருகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு மில்லிமீட்டரில் 20-ல் ஒரு பங்கு என்ற அளவில் இது நகர்கிறது.
இவ்வாறு அடையும் அழுக்கின் முதன்மை பணி என்ன என்பது விவாதத்துக்குரியது, ஆனால் பெரும்பாலும் இது செவிக்குழாயை சுத்தமாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பூச்சிகள் போன்றவை நம்முடைய தலைக்குள் நுழைவதை தடுக்கும் ஒரு பொறிமுறையாக இது செயல்படுகிறது. விரும்பத்தகாத தோற்றம் காரணமாக உடலில் உள்ள சுரப்புகளில் காதுகளில் சுரக்கும் இந்த சுரப்பு ஆராய்ச்சியாளர்களால் அதிகம் கவனிக்கப்படவில்லை.
ஆனால், தற்போது இது மாறத் தொடங்கியுள்ளது. பல ஆச்சர்யமான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு நன்றி. காதில் அடையும் மெழுகு போன்ற பொருட்களை வைத்து ஒரு நபரின் சாதாரணமான மற்றும் முக்கியமான தகவல்களை தெரிந்து கொள்ள இயலும்.
எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய அல்லது ஆப்பிரிக்க மரபைச் சேர்ந்தவர்களில் பெரும்பான்மையானோர் காதுகளில் சேரும் மெழுகு ஈரத்தன்மை கொண்டது. மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்திலும் ஒட்டும் தன்மையுடனும் இருக்கும். ஆனால், கிழக்காசிய மக்களில் 95% பேர் காதில் உலர் தன்மையுடைய சுரப்பைக் கொண்டிருக்கின்றனர். இது சாம்பல் நிறத்திலும் ஒட்டாத வகையிலும் இருக்கிறது.
ஈரமான அல்லது உலர்ந்த காது மெழுகை உற்பத்தி செய்வதற்குப் பொறுப்பான மரபணு ABCC11 என்பதாகும். இது ஒருவரின் அக்குள்களில் துர்நாற்றம் வீசுகிறதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் காரணியாகவும் இருக்கிறது. சுமார் 2% பேர், பெரும்பாலும் உலர்ந்த காது மெழுகைக் கொண்டவர்கள் - இந்த மரபணுவின் பதிப்பைக் கொண்டுள்ளனர். அவர்களின் அக்குள்களில் துர்நாற்றம் வீசுவதில்லை.
நம் காதுகளில் சுரக்கும் இவை நம்முடைய ஆரோக்கியத்தைப் பற்றி கூறுவது என்ன என்பதே இது குறித்த கண்டுபிடிப்புகளில் பயனுள்ளதாக இருக்கும்.
1971ஆம் ஆண்டில், சான் பிரான்சிஸ்கோவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியரான நிக்கோலஸ் எல் பெட்ராகிஸ், அமெரிக்காவில் "ஈரமான" காது அழுக்கைக் கொண்ட ஐரோப்பிய வம்சாவளியினர், ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் மற்றும் ஜெர்மன் பெண்கள் மார்பக புற்றுநோயால் இறப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதைக் கண்டறிந்தார். "உலர்ந்த" காது அழுக்கைக் கொண்ட ஜப்பானிய மற்றும் தைவானிய பெண்களை விட மேலே கூறிய மக்களுக்கு தோராயமாக நான்கு மடங்கு ஆபத்து அதிகம் இருப்பதாகவும் அவர் கண்டறிந்தார்.
2010ஆம் ஆண்டில், டோக்கியோ தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், மார்பக புற்றுநோயால் (invasive breast cancer) பாதிக்கப்பட்ட 270 பெண்கள் மற்றும் ஆரோக்கியமான 273 பெண் தன்னார்வலர்களிடமிருந்தும் இரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.
மார்பக புற்றுநோயால் அவதிப்படும் ஜப்பானிய பெண்கள், ஆரோக்கியமான தன்னார்வலர்களை விட ஈரமான காது 'மெழுகுக்கான' மரபணு குறியீட்டைப் பெற்றிருக்க 77% வரை வாய்ப்புகள் அதிகமாக இருப்பது ஆய்வு முடிவில் தெரிய வந்தது.
இந்த ஆய்வு முடிவுகள் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலியில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வு முடிவுகள் ஈரமான மற்றும் உலர்ந்த காது அழுக்கைக் கொண்டவர்களிடையே நிலவும் மார்பக புற்றுநோய் அபாயத்தில் எந்த வித்தியாசமும் இல்லை என்று உறுதி செய்தது. இருப்பினும், இந்த நாடுகளில் உலர்ந்த காது அழுக்கைக் கொண்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.
ஆனால், சில நோய்களுக்கும் காது மெழுகில் காணப்படும் பொருட்களுக்கும் இடையிலான தொடர்பு விரிவாக நிறுவப்பட்டுள்ளது. உணவில் காணப்படும் சில அமினோ அமிலங்களை உடைப்பதைத் தடுக்கும் ஒரு அரிய மரபணு கோளாறான 'மேப்பிள் சிரப் சிறுநீர்' (maple syrup urine disease) நோயை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்வோம். இதனால் இரத்தத்திலும் சிறுநீரிலும் மோசமான சேர்மங்கள் அதிகரிக்கும். இதனால் சிறுநீருக்கு மேப்பிள் சிரப்பின் நாற்றம் ஏற்படும்.
இனிப்பு மணம் கொண்ட சிறுநீருக்கு காரணமான மூலக்கூறு சோடோலோன் என்று அழைக்கப்படுகிறது. இந்த நோயைக் கொண்டிருக்கும் மக்களின் காதுகளில் சேரும் அழுக்கிலும் இந்த மூலக்கூறு காணப்படும். சோதனையே தேவையில்லை என்றாலும், இந்த நோய் இருப்பதை அறிந்து கொள்ள ஒரு காதில் இருந்து ஒரு சிறிய அளவு அழுக்கை பரிசோதிப்பது, மரபணு சோதனைகளை மேற்கொள்வதைக் காட்டிலும் எளிமையானது, மலிவானது.
"மேப்பிள் சிரப் போன்ற வாசனை காது அழுக்கில் இருந்து வீசுகிறது என்று வைத்துக் கொள்வோம். குழந்தை பிறந்து வெறும் 12 மணி நேரத்தில் அவரிடம் இருந்து வெளிப்படும் இப்படியான தனித்துவமான வாசனை, அவர் பிறக்கும் போதே இத்தகைய வளர்சிதை மாற்ற குறைபாட்டுடன் பிறந்திருக்கிறார் என்பதை கூறுகிறது," என்று லூசியானா மாகாண பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் வேதியியலாளர் ரபி ஆன் முசா கூறுகிறார்.
கோவிட்-19 சில நேரங்களில் காது அழுக்கில் இருந்தும் கண்டறியப்படலாம், மேலும் ஒரு நபரின் காதில் அடையும் அழுக்கைக் கொண்டு அவர்களுக்கு டைப்-1 அல்லது டைப்-2 நீரிழிவு நோய் உள்ளதா என்பதையும் உங்களால் கூற இயலும். இரத்தப் பரிசோதனைகள் மூலமாக ஒருவருக்கு இதய நோய் இருக்கிறதா என்பதை அறிய முடியும் என்றாலும் கூட, காதில் அடையும் அழுக்கைக் கொண்டு குறிப்பிட்ட வகையான இதய நோய் ஒருவருக்கு இருக்கிறதா என்பதை அறிய முடியும் என்பதை ஆரம்ப கால ஆய்வு முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
மெனியர்ஸ் என்பது ஒரு காதின் உட்பகுதியில் ஏற்படும் நோயாகும். இது மக்களை தலைச்சுற்றல் மற்றும் கேட்கும் திறனை இழக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. "இந்த நோயின் அறிகுறிகள் ஒருவரை மிகவும் பலவீனப்படுத்தும்," என்று முசா கூறுகிறார். "கடுமையான குமட்டல், தலைச்சுற்றல் போன்றவை ஏற்படும். வாகனம் ஓட்டுவதும் சவாலாகிவிடும். இறுதியாக பாதிக்கப்பட்ட காது முழுமையாக கேட்கும் திறனை இழக்கும்," என்று அவர் கூறுகிறார்.
ஆரோக்கியமானவர்களைக் காட்டிலும் மெனியர்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் காதில் அடையும் அழுக்கில் 3 கொழுப்பு அமிலங்கள் குறைவாக இருப்பதை முசாவின் குழு ஆய்வில் கண்டறிந்துள்ளது. இந்த நிலைக்கு ஒரு உயிரியக்கக் குறிப்பானையைக் (biomarker) கண்டுபிடிப்பது இதுவே முதல்முறையாகும். அனைத்தையும் தவிர்த்துவிட்டு இந்த நோயைக் கண்டறிய பல ஆண்டுகள் தேவைப்படும். எதிர்காலத்தில் இந்த நிலையை விரைவாகக் கண்டறிய மருத்துவர்கள் காதில் அடையும் அழுக்கை பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது முசா குழுவின் கண்டுபிடிப்பு.
"வழக்கமான உயிரியல் திரவங்களான இரத்தம், சிறுநீர், மூளை தண்டுவட திரவம் கொண்டு கண்டறிவதற்கு கடினமாகவும், நீண்ட காலத்தையும் எடுத்துக் கொள்ளும் நோய்களை கண்டறிய காதில் அடையும் அழுக்கை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதில் தான் எங்களின் ஆர்வம் இருக்கிறது," என்று முசா தெரிவிக்கிறார்.
ஆனால் அவ்வாறு காதில் அடையும் அழுக்கில் எந்த அம்சம், ஒருவரின் ஆரோக்கியம் பற்றிய தகவலை வெளிப்படுத்தும் புதையலாக செயல்படுகிறது? ஒரு நபரின் வளர்சிதை மாற்றமான, உடலுக்குள் நடக்கும் உள் வேதியியல் எதிர்வினைகளை பிரதிபலிக்கும் சுரப்புகளின் திறனே அது.
புற்றுநோயைக் கண்டறிய காது மெழுகில் உள்ள 27 சேர்மங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
"உயிரினங்களில் உள்ள பல நோய்கள் வளர்சிதை மாற்றத்துக்கு உட்பட்டவை" என்று பிரேசிலில் உள்ள கோயாஸ் ஃபெடரல் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் நெல்சன் ராபர்டோ அன்டோனியோசி பில்ஹோ கூறுகிறார்.
நீரிழிவு, புற்றுநோய், பார்கின்சன் மற்றும் அல்சைமர் போன்ற நோய்களை அதற்கு எடுத்துக்காட்டுகளாக பட்டியலிடுகிறார். "இந்த சந்தர்ப்பங்களில், லிப்பிடுகள், மாவுச்சத்து மற்றும் புரதங்களை ஆற்றலாக மாற்றுவதற்குப் பொறுப்பேற்றுள்ள மைட்டோகாண்ட்ரியா ஆரோக்கியமான செல்களில் செயல்படுவதைக் காட்டிலும் வித்தியாசமாக செயல்படத் தொடங்குகின்றன. அவை வெவ்வேறு வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்குகின்றன, சில நேரங்களில் மற்றவற்றை உற்பத்தி செய்வதை கூட நிறுத்தக்கூடும்," என்று கூறுகிறார்.
அவருடைய ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் வழக்கமான உயிரியல் திரவங்களான இரத்தம், சிறுநீரகம், வியர்வை மற்றும் கண்ணீரைக் காட்டிலும் பன்முகத்தன்மை கொண்ட பொருட்களை காதில் அடையும் அழுக்கு கொண்டிருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.
உண்மையில் இது குவிந்து வருகிறது. எனவே நீண்ட காலமாக ஒருவரின் வளர்சிதை மாற்றங்களில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிய இது சரியானதாக இருக்கும் என்பதை நம்ப காரணம் இருக்கிறது என்று கூறுகிறார் ப்ரூஸ் கிம்பால். அவர் மொனல் கெமிக்கல் சென்சஸ் மையத்தில் வேதியியல் சூழலியல் நிபுணராக பணியாற்றுகிறார்.
இதனை மனதில் வைத்துக் கொண்டு அன்டோனியோசியும் அவருடைய குழுவினரும் செறுமனோகிராமை (cerumenogram) உருவாக்கி வருகின்றனர். காதில் சேரும் அழுக்கை வைத்து ஒருவருக்கு குறிப்பிட்ட வகையிலான புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள இந்த கருவி உதவும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 52 நோயாளிகளின் காது அழுக்குகளை சேகரித்தது அவரின் குழு. அவர்கள் லிம்போமா என்ற ஒரு வகை புற்றுநோய் (Lymphoma), கார்சினோமா அல்லது இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். காற்றில் எளிதில் ஆவியாகும் கரிம சேர்மங்கள் இருப்பதை துல்லியமாகக் கண்டறியும் ஒரு முறையைப் பயன்படுத்தி ஆய்வை மேற்கொண்டனர்.
அதில் புற்றுநோயைக் கண்டறிவதற்கான ஒரு பொறிமுறையாக 27 சேர்மங்கள் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இந்த 27 மூலக்கூறுகளின் சேர்மங்களின் அடர்த்தியை அடிப்படையாகக் கொண்டு ஒருவருக்கு லிம்போமா, கார்சினோமா அல்லது இரத்தப்புற்று நோய் இருக்கிறதா என்பதை 100% அவர்களால் அனுமானிக்க முடிந்தது.
சுவாரஸ்யமாக, புற்று நோய்களில் வேறுபாட்டை சோதனையால் உறுதி செய்ய இயலவில்லை. இந்த மூலக்கூறுகள் இந்த புற்றுநோய் செல்களுக்கு எதிர்வினையாற்றும் வகையில் உருவாகியிருக்கலாம் என்பதை சோதனை முடிவு உறுதி செய்தது.
"நூற்றுக்கணக்கான புற்றுநோய் வகைகள் இருக்கலாம். ஆனால் வளர்சிதை பார்வையில் இருந்து பார்க்கும் போது, புற்றுநோய் என்பது ஒரு ஒற்றை உயிர்வேதியல் நிகழ்வாகும். புற்றுநோயின் எந்த நிலையிலும் எளிதில் காற்றில் ஆவியாகக் கூடிய குறிப்பிட்ட கரிம சேர்மங்களின் (VOC) பகுப்பாய்வு மூலமாக அறிய இயலும்," என்று அன்டோனியோசி கூறுகிறார்.
2019-ஆம் ஆண்டில் அவர்கள் 27 வகையான கரிம சேர்மங்களைக் கண்டறிந்தனர். தற்போது தனித்துவமான வளர்சிதை மாற்றத்தின் ஒரு பகுதியாக புற்றுநோய் செல்களால் உருவாக்கப்பட்ட சிறிய அளவிலான கரிம சேர்மங்களை ஆய்வுக்குட்படுத்தி வருகின்றனர். புற்றுநோய் ஏற்படுவதற்கு முன்பு ஏற்படும் வளர்சிதை மாற்ற தொந்தரவுகளை அவர்கள் கண்டறிந்த செருமெனோகிராம் மூலமாக அறிய முடியும் என்பதை, இன்னும் வெளியிடப்படாத ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக அன்டோனியோசி கூறுகிறார். புற்றுநோய் ஏற்படுவதற்கு முந்தைய கட்டத்தில் செல்கள் அசாதாரண மாற்றத்தை சந்திக்கும். அவை புற்றுநோய்க்கு வழிவகை செய்யும். ஆனால் புற்றுநோய் செல்களாக அவை அப்போது இருப்பதில்லை.
"புற்றுநோயின் ஆரம்ப கட்டத்திலேயே புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால் அதனை குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் 90% ஆக இருக்கிறது என்ற நிலையில், புற்றுநோய் ஏற்படுவதற்கு முந்தைய கட்டத்தைக் கண்டறியும் போது, சிகிச்சையின் வெற்றி விகிதம் இன்னும் அதிகமாக இருக்கும்," என்று அன்டோனியோசி தெரிவிக்கிறார்.
நரம்புச் சிதைவு நோய்களான பார்கின்சன் மற்றும் அல்சைமர் போன்ற நோய்களையும், ஆரம்ப கட்ட வளர்சிதை மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கருவியின் மூலம் கண்டறிய இயலுமா என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இருப்பினும் அதற்கான பணிகள் ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறது.
வருங்காலத்தில் செருமெனோகிராம் வழக்கமான மருத்துவ ஆய்வு செயல்முறையாக மாறும் என்று நாங்கள் நம்புகிறோம். ஒவ்வொரு ஆறு மாதத்துக்கும் ஒரு முறை சிறிய அளவில் காதில் சேரும் அழுக்கை வைத்து நீரிழிவு, புற்றுநோய், பார்கின்சன்ஸ் மற்றும் அல்சைமர் போன்ற நோய்களைக் கண்டறியவும், மற்ற ஆரோக்கிய சீர்கேட்டினால் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் மாற்றங்களை மதிப்பிடவும் இந்த கருவி பயன்படலாம்," என்று அன்டோனியோசி தெரிவிக்கிறார்.
பிரேசிலில் அமைந்துள்ள அமரல் கர்வல்ஹோ மருத்துவமனையில் செருமெனோகிராம் நோய் கண்டறிதல் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கான மேற்பார்வை பொறிமுறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று கூறுகிறார் அன்டோனியோசி.
தற்போது சிகிச்சை முறை ஏதும் இல்லாமல் இருக்கும் மெனியர்ஸ் என்ற உள்காது பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு தன்னுடைய ஆராய்ச்சி வருங்காலத்தில் உதவிகரமாக இருக்கும் என்று முசா நம்புகிறார்.
முதலில் அதிக அளவில் நோயாளிகள் மத்தியில் தன்னுடைய பரிசோதனை முறையை பயன்படுத்தி, முடிவுகள் சரிபார்க்கப்பட்ட பிறகு, மருத்துவர்கள் பயன்படுத்தும் வகையில் நோயறிதல் பரிசோதனையை அறிமுகம் செய்ய அவர் விரும்புகிறார்.
கோவிட்-19 நோய் கண்டறியும் கருவிகளை எப்படி கடைகளில் வாங்கி பயன்படுத்தினார்களோ அதேபோன்ற கருவிகளை உருவாக்க தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது என்று முசா தெரிவித்தார்.
இயல்பாக காது மெழுகில் காணப்படும் மூன்று கொழுப்பு அமிலங்களின் அளவு குறைவாக இருப்பதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று முசா தெரிவிக்கிறார். "எதனால் இந்த நோய் ஏற்படுகிறது அல்லது அதற்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்பதை அறிந்து கொள்ள இது உதவும்," என்று முசா கூறுகிறார்.
இயல்பான, ஆரோக்கியமான காது மெழுகில் உள்ள ரசாயனங்கள் மற்றும் நோயின் பல்வேறு கட்டங்களில் அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் புரிந்து கொள்ள நிறைய பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முசா கூறுகிறார். இன்று இரத்த மாதிரிகள் எவ்வாறு நோய் அறிதல் சோதனைகளில் பயன்படுத்தப்படுகிறதோ அது போன்று ஒரு நாள் காது மெழுகும் பயன்படுத்தப்படும் என்று அவர் நம்புகிறார்.
"லிபிட் வளர்சிதை மாற்றத்தால் நிறைய நோய்கள் ஏற்படுகின்றன. அதே நேரத்தில், காது மெழுகில் அதிக அளவில் லிபிடுகள் இருப்பதால் இது ஒரு சிறப்பான பொருளாக நோய் அறிதல் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தலாம்," என்று கூறுகிறார் முசா.
பிரிட்டனின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி பேராசிரியராகவும், வேதியிலாளராகவும் பணியாற்றி வரும் பெர்டிதா பாரேன், காது மெழுகு குறித்து தனியாக ஆய்வு மேற்கொள்ளவில்லை. ஆனால், உயிர் மூலக்கூறுகளை பகுப்பாய்வு செய்து அதனை நோய் கண்டறிதலில் எப்படி பயன்படுத்த இயலும் என்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கோட்பாட்டளவில், காது மெழுகு என்பது நோய்களின் அறிகுறிகளைக் கண்டறியும் சிறப்பான பொருளாக இருக்கலாம் என்று ஒப்புக் கொண்டார்.
"இரத்தத்தில் காணப்படும் சேர்மங்கள் நீரில் கரையக் கூடியவை. ஆனால் காது மெழுகு கொழுப்புகளால் ஆனது. தண்ணீரோடு பொருந்தாதது. இரத்தம் குறித்து மட்டும் ஆய்வுகளை மேற்கொண்டால், உங்களுக்கு முழுமையான தகவல்கள் கிடைக்காது. ஆனால் கொழுப்புகளில் தான் மாற்றங்கள் தொடங்குகிறது," என்று அவர் தெரிவித்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு