எதிரிக்கு அறிவை புகட்டவே விமான தளங்களை தாக்கினோம்... விமான படை தளபதி பேட்டி!
Dinamaalai May 12, 2025 12:48 AM

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை குறி வைத்து, இந்தியா கடந்த 6ம் தேதி அதிகாலையில் வான்வழி தாக்குதல் நடத்தியது. ஆனால் உடனடியாக, அந்நாட்டில் இருந்து இந்தியாவின் ராணுவ உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. எனினும், அவற்றை இந்திய ஆயுத படைகள் முறியடித்து வெற்றி கண்டன.

இதனை தொடர்ந்து, பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டது. இதுபற்றி விமான படை தளபதி பாரதி செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, இந்திய தரப்பில் 7-ந்தேதி ராணுவ நடவடிக்கைகள் தொடங்கின. 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நம்முடைய எல்லைகளின் மீது அவர்களுடைய டிரோன்கள் பறந்தன.

எனினும், நம்முடைய ராணுவ உட்கட்டமைப்பை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்த முயன்ற அவர்களுடைய முயற்சி முறியடிக்கப்பட்டது. நமக்கு எந்த பாதிப்பும் இல்லை என நாம் உறுதி செய்தோம்.

நாம் அவர்களுடைய பயங்கரவாத இலக்குகளையே குறி வைத்தோம். அந்நாட்டு ராணுவ தளங்களை அல்ல. ஆனால், பாகிஸ்தானின் இந்த தாக்குதலை தொடர்ந்து, நம்முடைய எதிரிக்கு ஒரு செய்தியை கூற வேண்டிய தருணம் வந்து விட்டது என உணர்ந்தோம்.

அதனால், எந்த இடத்தில் தாக்கினால் அவர்களை அது புண்படுத்தும் என முடிவு செய்து, விரைவான தாக்குதலை தொடுத்தோம். விமான தளங்கள், கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் ராணுவ உட்கட்டமைப்பை குறி வைத்து தாக்கினோம்.

இந்த தளங்களில் உள்ள ஒவ்வோர் அமைப்பையும் இலக்காக கொண்டு தாக்கும் திறன் நம்மிடம் உள்ளது. எனினும், அளவிடப்பட்ட நிலையிலேயே நம்முடைய பதிலடி இருந்தது. எதிரிக்கு அறிவை புகட்ட வேண்டும் என்ற நோக்கமே நம்மிடையே இருந்தது என கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.