பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தை பகுதியில் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து உள்ளனர்.
மாநாட்டு மேடையில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வரிசையில் பாமக பொருளாளர் திலகபாமாவிற்கும் இடம் ஒதுக்கப்படும் தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் பாமக பொருளாளர் திலகபாமாவுக்கு மேடையில் இடம் வழங்கப்படாமல் கீழே பிற பாமக நிர்வாகிகளோடு அமர வைக்கப்பட்டுள்ளார். இது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் பாமக உட்கட்சி மோதல் வெடித்த நிலையில், கட்சியில் யாருக்கு அதிகாரம் உள்ளது? யார் தலைவர் என்பது தொடர்பாக பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. மேடையிலேயே அன்புமணி, மைக்கைத் தூக்கி எறிந்து விட்டு சென்ற காட்சிகள் வைரலானது. ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் வெடித்தது.
பாமகவின் தலைவர் பொறுப்பையும் தானே ஏற்பதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். கட்சியின் நிர்வாகிகள் யாரையும் கலந்தாலோசிக்காமல் ராமதாஸ் எடுத்த இந்த முடிவு கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராமதாஸ் இப்படி அறிவித்ததுமே, அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா, பாமகவில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் ராமதாஸ் தவறான முடிவை எடுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த பதிவு கட்சியினர் இடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து ராமதாஸை சந்திக்க தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றார் திலகபாமா. ஆனால் அவரை சந்திக்க மறுத்து விட்டார் ராமதாஸ். இதையடுத்து 3 மணி நேரம் காத்திருந்த திலகபாமா ராமதாஸை சந்திக்காமலேயே திரும்பினார். இதையடுத்து பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பாமக பொருளாளர் திலகபாமாவை நோய்க்கிருமி என்றும் நன்றி இல்லாதவர் என்றும் கடுமையாக விமர்சித்ததோடு அவர் கட்சியை விட்டு விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
பின்னர் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலையிட்டு பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணனுக்கும், பொருளாளர் திலகபாமாவிற்கும் இடையே சமாதானம் செய்து வைத்தார். இதையடுத்து பாமக பொருளாளர் திலகபாமா வழக்கம் போல் தனது கட்சிப் பணிகளை கவனித்து வந்தார். மாநாட்டுக்கான பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் தான் இன்றைய பாமக மாநாட்டின் மேடையில் திலகபாமாவுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை. திலகபாமா, ராமதாஸை எதிர்த்துக் கருத்துத் தெரிவித்ததால் அவர் புறக்கணிக்கப்படுவதாக பாமகவிற்குள் சலசலப்புகள் எழுந்துள்ளன.