1971 போர்: நள்ளிரவில் முன்னேறிய பாகிஸ்தான் படையை சில மணி நேரத்தில் உருக்குலைத்த இந்திய விமானப்படை
BBC Tamil May 12, 2025 10:48 AM
IMR media publication இந்திய ராணுவ வரலாற்றில் டிசம்பர் 5, 1971 மிக முக்கிய நாளாக கருதப்படுகிறது.

விமானப்படை உதவியுடன் நீங்கள் ஒரு யுத்தத்தை வெல்லலாம் அல்லது அதில் தோல்வி அடையலாம். ஆனால் உங்களிடம் விமானப்படை இல்லை என்றால் நிச்சயமாக அந்த யுத்தத்தில் தோல்வி அடைவீர்கள் என்று பலரும் கூறுவதுண்டு.

1971-ஆம் ஆண்டு யுத்தத்தின் போது, ராம்கர் மற்றும் ஜெய்சால்மரை திடீர் தாக்குதல் மூலம் கைப்பற்றும் முனைப்புடன் 2000 படை வீரர்களை ஜெய்சால்மர் பகுதிக்கு பீரங்கிகளுடன் அனுப்பியது பாகிஸ்தான்.

டிசம்பர் மாதத்தின் துவக்கம் அது. டிசம்பர் நான்காம் தேதி காலைச் சிற்றுண்டியை பாகிஸ்தானியர்கள் ஜெய்சால்மரில் உண்பார்கள் என்று கப்பார் பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில் வதந்தி பரவிக் கொண்டிருந்தது.

டிசம்பர் 3-ஆம் தேதி இந்திய விமானப் படை தளங்களைக் குறிவைத்து 'ஆபரேஷன் கெங்கிஸ் கான்' என்ற தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான். இந்திய ராணுவ வரலாற்றில் டிசம்பர் 5, 1971 மிக முக்கிய நாளாக கருதப்படுகிறது.

டிசம்பர் 4 மற்றும் 5-க்கு இடையேயான நிலவொளி நிரம்பிய நள்ளிரவு அது. லோங்கேவாலாவில் இளம் தென்றல் தவழ்ந்து கொண்டிருந்தது. அந்த பகுதியில் 23 பஞ்சாபின் ஆல்பா கம்பெனியின் படை பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தது.

ஜெய்சால்மரில் இருந்து 120 கி.மீ தொலைவிலும், ராம்கரில் இருந்து 55 கி.மீ தொலைவிலும், சர்வதேச எல்லையில் இருந்து 20 கி.மீ தொலைவிலும் அமைந்திருக்கிறது இந்த லோங்கேவாலா முகாம்.

லோங்கேவாலாவில் இருந்து ராம்கருக்கு செல்லும் சாலையை ஒட்டியுள்ள ஒரு பகுதியில் ஹெலிகாப்டர் ஓடுதளம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அது முகாமில் இருந்து வெறும் 700 மீட்டர் தொலைவில் அமைந்திருந்தது.

பீரங்கித் தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்திய ராணுவத்தினரிடம் இரண்டு நடுத்தர அளவிலான இயந்திர துப்பாக்கிகள், இரண்டு 81 எம்.எம். மோர்டர்கள், தோள் மீது வைத்து தாக்குதலை நடத்தும் 4 ராக்கெட் லாஞ்சர்கள் மட்டுமே இருந்தன.

அவர்களிடம் கண்ணிவெடிகள் இருந்தன. ஆனால் அப்போது அவை நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருக்கவில்லை.

IMR media publication பீரங்கிகளின் நகரும் சத்தத்தைக் கேட்டனர் இந்திய ராணுவ வீரர்கள் பீரங்கிகளின் சத்தத்தை கேட்ட ரோந்து படையினர்

முகாமிற்குப் பொறுப்பேற்றிருந்த மேஜர் குல்தீப் சிங் சந்த்பூரி, கேப்டன் தரம்வீர் பான் தலைமையில் சில வீரர்களை ரோந்து பணிகளுக்காக அனுப்பியிருந்தார்.

"பீரங்கிகளின் என்ஜின்கள் எழுப்பிய மெல்லிய ஒலி அந்த இரவின் நிசப்தத்தை உடைத்தது. அந்த பீரங்கிகள் மெதுவாக முன்னோக்கி வந்து கொண்டிருந்தன. ஆரம்பத்தில் எங்கிருந்து அந்த சத்தம் வருகிறது என்று எங்களுக்கு தெரியவில்லை.

எங்களின் மொத்த குழுவும் அந்த சத்தத்தைக் கேட்டது. ஆனால் நேரமாக ஆக அந்த சத்தம் அதிகரிக்க துவங்கியது. நான் உடனே மேஜர் குல்தீப்பை 'வயர்லெஸ்' மூலம் தொடர்பு கொண்டேன். ஏதேனும் வாகனம் மண்ணில் சிக்கியிருக்கலாம். நீங்கள் பயப்பட வேண்டாம். போய் தூங்குங்கள் என்று கூறினார்," என்று பின்னொரு நாளில் தரம்வீர் பான் ஏர் மார்ஷல் பரத் குமாருக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.

Bharat-Rakshak.com மேஜர் குல்தீப் சிங் சந்த்பூரி மெதுவாக நகர்ந்து வந்த பாகிஸ்தான் பீரங்கிகள்

நள்ளிரவு 12 மணியைத் தாண்டிய பிறகு, பாகிஸ்தானின் பீரங்கிகள் தரம்வீரின் கண்களில் பட்டன. அவற்றின் விளக்குகள் அணைக்கப்பட்டு, மிகவும் மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தன. சாலை இல்லாமல் கரடுமுரடான பாதையில் வந்து கொண்டிருந்ததால் மிகவும் மெதுவாக அவை நகர்ந்து கொண்டிருந்தன. ஆரம்பத்தில் தரம்வீர் அவரின் கமாண்டருக்கு இந்த தகவலை அனுப்ப முயற்சித்தார். ஆனால் அதில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.

அதிகாலை 4 மணி அளவில் அவருடைய படை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இந்திய பகுதிக்குள் பாகிஸ்தானின் பீரங்கிகள் வந்துள்ளன என்பதையும் அவை, லோங்கேவாலா முகாமை நோக்கி நகருகின்றன என்ற தகவலையும் கொடுத்தார்.

சந்த்பூரி தன்னுடைய தலைமையகத்திற்கு அழைப்புவிடுத்து ராணுவ வீரர்களையும் ஆயுதங்களையும் கோரினார்.

நள்ளிரவு 12.30 மணி அளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தங்களின் தாக்குதலை ஆரம்பித்தனர். முள்கம்பி வேலி அமைத்திருந்த இடத்தில் தங்களின் பீரங்கிகளை நிறுத்தி வைத்தனர். அங்கே கண்ணிவெடிகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் நினைத்தார்கள்.

'தி 1971 வார் ஆன் இலுஸ்ட்ரேட்டட் ஹிஸ்டரி' என்ற புத்தகத்தை எழுதிய டாக்டர் யு.பி. தப்லியால், "இந்த தருணத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இந்திய வீரர்கள் அவர்களின் நிலையை பலப்படுத்திக் கொண்டனர். சூரிய வெளிச்சம் பரவ ஆரம்பித்த சில நொடிகளில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய முகாமை தாக்கத் துவங்கியது," என்று குறிப்பிட்டார்.

IMR media publication சந்த்பூரி தன்னுடைய தலைமையகத்திற்கு அழைப்பு விடுத்து ராணுவ வீரர்களையும் ஆயுதங்களையும் கோரினார். இந்திய விமானப்படையின் உதவியை நாட முடிவு

திடீரென நடத்தப்பட்ட தாக்குதலைப் பற்றி கேள்விப்பட்ட மேஜர் ஜெனரல் ஆர்.எஃப். கம்பட்டா ஆச்சர்யம் அடைந்தார். அந்த சூழலின் தீவிரத்தை அவர் உடனடியாக உணர்ந்தார். ஆனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தேவையான வளங்கள் அவரிடம் இல்லை.

அவருக்கு நம்பிக்கை தரும் ஒன்றாக இருந்தது இந்திய விமானப்படை மட்டுமே. அதிகாலை 2 மணி அளவில் அவர் ஜெய்சால்மரில் அமைந்துள்ள இந்தியா விமானப்படைத் தளத்தின் விங் கமாண்டர் எம்.எஸ். பாவாவை வயர்லஸ் ரேடியோ மூலமாக தொடர்பு கொண்டு பேசினார்.

ஏர் மார்ஷல் பரத் குமார் அவர் எழுதிய 'தி எபிக் பாட்டில் ஆஃப் லோங்கேவாலா'வில், "அப்போது விமானப்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹண்டர் போர் விமானத்தை இரவில் பயன்படுத்த இயலாது. எனவே அவர்கள் காலை வரை காத்திருந்தனர்.

மேஜர் ஜெனரல் கம்பட்டாவிடம் பேசிய விமானப்படை தளத்தின் தளபதி, அதிகாலை ஹண்டர் போர் விமானம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாகிஸ்தான் ராணுவத்தின் பீரங்கிகளை கண்டறிந்து, அச்சுறுத்தலை முறியடிக்கும் என்று உத்தரவாதம் அளித்தார். அதிகாலை நான்கு மணி அளவில், ஸ்குவாட்ரன் தலைவர் ஆர்.என். பாலியிடம் பாவா பேசினார்," என்று குறிப்பிட்டிருக்கிறார்.

IMR media publication ஜெய்சால்மரில் அமைந்திருந்த இந்தியா விமானப்படைத் தளத்தின் விங் கமாண்டர் எம்.எஸ். பாவா பீரங்கிகள் மீது தாக்குதல்

அதே சமயத்தில் காலை 5.15 மணி அளவில் மேஜர் சந்த்பூரி, ப்ரிகேடியர் ராம்தாஸை தொடர்பு கொண்டு பேசினார்.

"பாகிஸ்தான் ராணுவத்தின் பீரங்கிகள் அணிவகுப்பின் முன்பக்கத்தில் இடம் பெற்றிருந்த பீரங்கி, லோங்கேவாலா முகாமின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கொதாரூ சாலைக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வந்து கொண்டிருந்தது.

அப்போது, சந்த்பூரி அவர் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார். அந்த இலக்கு துல்லியமாக இல்லை. பதில் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தானின் பீரங்கி, முகாமின் கட்டுமானத்தை உருக்குலைத்தது. அதன் அருகே அமைந்திருந்த ஒரு கோவிலின் கட்டடம் மட்டுமே மிஞ்சியிருந்தது. அதன் பிறகு ஒட்டகங்களுக்காக வைக்கப்பட்டிருந்த தீவனத்தில் பாகிஸ்தான் வீரர்கள் நெருப்பைப் பற்ற வைத்தனர்," என்று அன்று அதிகாலை நிகழ்ந்த நிகழ்வுகளை விளக்குகிறார் ராம்தாஸ்.

எல்லையில் இருந்து இந்தியாவுக்குள் 16 கி.மீ ஊடுருவ பாகிஸ்தான் பீரங்கி தாங்கிகளுக்கு 6 மணி நேரம் ஆனது.

பாகிஸ்தானின் 18வது குதிரைப்படைப் பிரிவின் ரெஜிமெண்டல் கமாண்டர் ப்ரிகேடியர் இசட்.ஏ. கான் அவருடைய, 'தி வே இட் வாஸ், இன்சைட் தி பாகிஸ்தானி ஆர்மி,' என்ற புத்தகத்தில், "நான் ஜீப் மூலமாக லோங்கேவாலா முகாமின் தெற்கு எல்லையை அடைந்தேன். காலை 7.30 மணி அளவில் லோங்கேவாலா முகாம் அமைந்திருந்த திசையில் இருந்து வெடிப்புச் சத்தத்தைக் கேட்டேன். அங்கே புகைமூட்டமாக இருந்தது," என்று குறிப்பிட்டிருந்தார்.

Natraj Publications பாகிஸ்தானின் 18வது குதிரைப்படைப் பிரிவின் ரெஜிமெண்டல் கமாண்டர் பிரிகேடியர் இசட்.ஏ. கான் எழுதிய தி வே இட் வாஸ், இன்சைட் தி பாகிஸ்தானி ஆர்மி புத்தகத்தின் முகப்பு தாக்குதல் நடத்திய ஹண்டர் விமானம்

லோங்கேவாலா முகாம் மீது அடுத்தக் கட்ட தாக்குதலை நடத்த பாகிஸ்தான் ராணுவம் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் ஜெய்சால்மரில் இருந்து இந்தியாவின் ஹண்டர் விமானங்கள் சம்பவ இடத்திற்கு வந்தன.

அந்த சமயத்தில் பாகிஸ்தானின் பீரங்கி அணிவகுப்பிற்கு தலைமை தாங்கிய பீரங்கி, லோங்கேவாலா முகாமில் இருந்து வெறும் 1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. ஹண்டர் விமானங்களை வானில் பார்த்த பாகிஸ்தான் ராணுவத்தின் பீரங்கிகள் வட்டமிட்டு தூசு மண்டலத்தையும் புகையையும் கிளப்பின. இந்தியாவின் அந்த போர் விமானங்களை ஸ்குவாட்ரன் தலைவர் டி.கே. தாஸ் மற்றும் லெஃப்டினண்ட் ரமேஷ் கோசாயின் உள்ளிட்டோர் இயக்கினார்கள்.

"சம்பவ இடத்திற்கு சென்ற போது, நான் கீழே கண்ட காட்சியை ஒரு போதும் மறக்கமாட்டேன். தரையில் இருந்த பீரங்கிகள் பார்ப்பதற்கு கருப்பு நிற தீப்பெட்டிகள் போன்று தோற்றம் அளித்தன. சில பீரங்கிகள் நின்று கொண்டிருந்தன. சில முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. நம் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் தடயங்களை அங்கே பார்த்தேன்," என்று நேர்காணல் ஒன்றில் பேசிய டி.கே. தாஸ் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து போர் விமானங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் இருந்து தப்பிக்க விமானத்தின் உயரத்தை அதிகரித்தேன் என்று கூறிய தாஸ், பிறகு உடனடியாக திசையை மாற்றி தாக்குதல் நடத்த முடிவெடுத்ததாக தெரிவித்தார்.

"என்னுடைய ஏவுகணைகள், பாகிஸ்தானின் பீரங்கியை தாக்கியவுடன் மற்ற பீரங்கிகள் முன்னோக்கி நகர்வதை நிறுத்தின. அதன் பிறகு ரமேஷும் அவருடைய விமானத்தை கீழ் நோக்கி இயக்கி மற்றொரு பீரங்கியை அழித்தார்," என்று தாஸ் நினைவு கூறுகிறார்.

IMR media publication போர் விமானத்தை இயக்கிய ஸ்குவாட்ரன் தலைவர் டி.கே. தாஸ் தொடர் தாக்குதல் நடத்திய ஹண்டர் விமானம்

இதன் பிறகு தாஸும் ரமேஷும் மேலும் இரண்டு முறை பாகிஸ்தான் பீரங்கிகளை தாக்கினார்கள். தாக்குதலை தவிர்ப்பதற்காக பீரங்கிகள் வட்டமிடத் துவங்கின. அது புகை மண்டலத்தை எழுப்பவே, இலக்கை நிர்ணயிப்பதில் இந்திய விமானிகளுக்கு சிக்கல்கள் எழுந்தன.

ஏவுகணைகள் தீர்ந்த பிறகு தாஸ், 30 எம்.எம். ஆடம் துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்தினார். இதில் பீரங்கி ஒன்று தீப்பிடித்தது. அதனைத் தொடர்ந்து இந்திய விமானப்படை விமானங்கள் அன்று மாலை வரை தாக்குதலை தொடர்ந்தன.

நண்பகலுக்குள் இந்திய விமானப்படை பாகிஸ்தானின் 17 பீரங்கிகளையும் 23 இதர வாகனங்களையும் தாக்கி அழித்தது.

பாகிஸ்தான் பிரிகேடியர் இசட்.ஏ. கான், "காலை 7 மணி முதல் நான்கு ஹண்டர் விமானங்கள் எங்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தின. இருட்ட தொடங்கிய போது வான்வழி தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று எல்லைக்கு திரும்புவது. மற்றொன்று ராம்கர் மற்றும் ஜெய்சால்மரை கைப்பற்றும் தன்னுடைய இலக்கை நோக்கி முன்னேறுவது," என்று தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Getty Images நண்பகலுக்குள் இந்திய விமானப்படை பாகிஸ்தானின் 17 பீரங்கிகளையும் 23 இதர வாகனங்களையும் தாக்கி அழித்தது பாலைவனத்தில் செயலிழந்த பீரங்கிகளின் என்ஜின்கள்

ராம்கர் மற்றும் ஜெய்சால்மரை கைப்பற்றும் நோக்கத்தை பாகிஸ்தான் படையினர் கைவிட்டது போன்று தோன்றியது. அதே இரவில் பாகிஸ்தானின் 22வது குதிரைப்படை வீரர்கள் மஸ்திவாரி பித் மற்றும் கப்பார் பகுதிக்கு திரும்பிச் சென்றனர். ஆனால் லோங்கேவாலாவை கைப்பற்றும் எண்ணம் அவர்களிடம் அப்போதும் இருந்தது.

ப்ரிகேடியர் ஜஹான்செப் அராப் வழிநடத்திச் சென்ற படைப்பிரிவு அடுத்த நாள் காலை லோங்கேவாலாவை தாக்க திட்டமிட்டது. பாலோச்சின் 28வது படைப்பிரிவும் லோங்கேவாலா - ஜெய்சால்மர் சாலையில் முன்னேறி வந்து கொதாரூவைக் கைப்பற்ற உத்தரவிடப்பட்டிருந்தது.

மாலைக்குள் லோங்கேவாலா யுத்தம் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் வீரர்களின் தோல்விக்குக் காரணம் அவர்கள் பயன்படுத்திய ஷெர்மான் மற்றும் டி - 59 சீன பீரங்கிகளை பாலைவனத்தில் மிகவும் மெதுவாக இயக்கியது தான்.

அதீத வெப்பத்தினால் அவர்கள் கொண்டு வந்த பீரங்கிகளின் என்ஜின்கள் செயலிழந்தன. எனவே பாகிஸ்தான் வீரர்கள் பீரங்கிகளை அங்கேயே விட்டுச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பாலைவனத்தில் அவற்றை மறைக்க இடம் ஏதும் இல்லை.

இவ்வளவு பெரிய தாக்குதலை திட்டமிட்ட பாகிஸ்தான் படையினருக்கு வான்வழி பாதுகாப்பை வழங்க எந்தவிதமான திட்டமும் அவர்களிடம் இல்லை. எனவே இந்திய விமானங்கள் அவர்களை தாக்கிய போது அவர்கள் செய்வதறியாது தவித்தனர்.

இந்த தாக்குதலில் பாகிஸ்தானியர்களின் 45 பீரங்கிகளில் 36 பீரங்கிகள் அழிக்கப்பட்டன. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு எந்த நாடும் ஒரே நாளில் இப்படியான இழப்பை சந்திக்கவில்லை.

ப்ரிகேடியர் இசட்.ஏ.கான், "பழுதடைந்த இயந்திர துப்பாக்கிகளை கால்களால் இயக்க முயன்ற எங்களின் 5 கமாண்டர்கள் உயிரிழந்தனர். இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட 12.7 எம்.எம். போர் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை வைத்து நவீன போர் விமானங்களை தாக்க இயலவில்லை," என்று அவருடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

IMR media publication பாகிஸ்தான் பீரங்கியின் மீது இந்திய வீரர்கள்

இந்த தாக்குதலின் முடிவில் இந்தியா தன்னுடைய மொத்த ராணுவ பலத்தையும் மேற்கு எல்லையில் நிறுத்தியது.

பாகிஸ்தானின் பீரங்கிகள் தாக்கி அழிக்கப்பட்டது மட்டுமின்றி, பாகிஸ்தானின் மன உறுதியை குலைத்ததற்காக இந்த யுத்தம் இன்றும் நினைவு கூறப்படுகிறது.

இதன் வெற்றியைத் தொடர்ந்து, குல்தீப் சிங் சந்த்பூரிக்கு வீரதீர செயல்கள் புரிந்தமைக்காக வழங்கப்படும் இரண்டாவது மிக உயரிய விருதான மஹாவீர் சக்ரா வழங்கப்பட்டது. அதே நேரத்தில் பாகிஸ்தானின் டிவிசனல் கமாண்டர் மேஜர் ஜெனரல் பி.எம். முஸ்தஃபா, விசாரணைக்குப் பிறகு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

IMR media publication பாகிஸ்தானின் பீரங்கிகள் தாக்கி அழிக்கப்பட்டது மட்டுமின்றி, பாகிஸ்தானின் மன உறுதியை குலைத்ததற்காக இந்த யுத்தம் நினைவு கூறப்படும். சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்

இந்திய விமானப்படை இந்த வெற்றியில் மிக முக்கிய பங்காற்றியது.

இந்த சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட 'பார்டர்' படம் 1997-ஆம் ஆண்டு வெளியானது. இருப்பினும், அதில் இந்த வெற்றி முழுக்க முழுக்க இந்திய தரைப்படையினரால் மட்டுமே அடைந்ததாகவும், அதில் இந்திய விமானப்படை சிறிய பங்காற்றியது போன்றும் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.

ஏர் மார்ஷல் பரத் குமார், "பார்டர் படத்தில் இந்த யுத்தம் குறித்து எப்படி காட்டப்பட்டிருந்தாலும், உண்மையில் இந்திய விமானப் படையின் வரலாற்றில் இது முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது. வெறும் 4 ஹண்டர் போர் விமானங்களை வைத்து 2000 பாகிஸ்தான் ராணுவத்தினரையும் 45 பீரங்கி தாங்கிகளையும் அடிபணிய வைத்தது இந்திய விமானப்படை," என்று கூறுகிறார்.

இந்த சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் கழித்து, அங்கே வெற்றிச் சின்னம் ஒன்று உருவாக்கப்பட்டு, யுத்தத்தின் போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜெகஜீவன் ராம் அதனை திறந்து வைத்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.