பழங்கால பாரம்பரியமான டேசியோகிராஃபி மற்றும் இன்றைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இணைந்திருக்கும் ஒரு விசித்திர சம்பவம் கிரீக்கில் ஏற்பட்டுள்ளது. அதாவது 12 வருடங்களாக திருமண வாழ்கை நடத்தி வந்த இரு குழந்தைகளின் தாயான ஒருபெண், தனது கணவர் குடித்த கிரீக் காபி கோப்பை புகைப்படமாக எடுத்து சாட்ஜிபிடி (ChatGPT) என்ற ஏஐக்கு அனுப்பி, அதன் அடிப்படையில் கணவர் துரோகம் செய்கிறாரா என்பதை ‘கணிக்க’ கேட்டார்.
சாட்ஜிபிடி பதிலளித்தபோது, அவரது கணவர் ஒரு இளம்பெண் மீது ஆசை கொண்டிருப்பதாகவும், அந்த இளம் பெண்ணின் பெயர் ‘E’ என்ற எழுத்தில் தொடங்கும் என்றும் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அந்த பெண் இவர்களது குடும்பத்தைத் தகர்க்க முயல்கிறார் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பதிலை மிகுந்த நம்பிக்கையுடன் எடுத்துக்கொண்ட அந்தப் பெண், உடனே விவாகரத்திற்கான நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டார். இந்த சம்பவத்தை “To Proino” என்ற கிரீக் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவரது கணவர் பகிர்ந்துள்ளார்.
“அவர் எப்போதும் ட்ரெண்டி விஷயங்களை நம்புவார். ஒருநாள் கிரீக் காபி தயாரித்து, கோப்பைகளின் புகைப்படங்களை எடுத்து சாட்ஜிபிடியிடம் அனுப்புவது வேடிக்கையாக இருக்கும் என நினைத்தார்” என அவர் கூறினார். ஆனால், சாட்ஜிபிடியின் பதிலை கேள்வியில்லாமல் நம்பிய மனைவி, அவரை வீட்டைவிட்டு வெளியேறச் சொல்லி, பிள்ளைகளிடமும் விவாகரத்துக்கு செல்லப்போகிறோம் என அறிவித்துவிட்டார்.
மூன்றே நாளில் சட்ட வழக்கும் தொடங்கியது. “இது ஒரு கோமாளித்தனமான தவறு. ஆனால் என் வாழ்க்கையை சிதைத்துவிட்டது” என கணவர் வருத்தம் தெரிவித்தார். வழக்கறிஞர்களும், ஏஐ கூறிய விஷயங்கள் சட்டப்படி நிரூபணமாக கருதப்பட முடியாது என வலியுறுத்தியுள்ளனர். அனுபவசாலியான டேசியோகிராஃபி நிபுணர்களும், உண்மையான காபி வாசிப்பில் காபி பூசி, நுரை மற்றும் சாஸர் வரை ஆராயப்படும் என்பதை நினைவூட்டியுள்ளனர்.