தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருப்பவர் ஜி.பி முத்து. இவர் டிக் டாக் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நிலையில் அதன் தடைக்கு பிறகு யூடியூபில் வீடியோ வெளியிட்டு பிரபலமானார். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி. இவர் பல தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பாதியில் வெளியேறினார். இவருக்கு ஏராளமான பாலோவர்ஸ் இருக்கும் நிலையில் தற்போது மிகவும் பிரபலமாக இருக்கிறார். இந்நிலையில் நடிகர் ஜி.பி முத்து நேற்று தன்னுடைய மனைவியுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று இருந்தார். அவர் ஒரு மனு கொடுத்த நிலையில் அந்த மனுவில் தெருவை காணும் என புகார் இருந்தது.
அதாவது உடன்குடி பெருமாள்புரம் பகுதியில் நத்தம் சர்வே எண் 233-ன் கீழ் கீழத்தெரு இருந்தது. இது அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலமாக இருந்த நிலையில் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த 20 வருடத்தில் அந்த தெரு காணாமல் போய்விட்டது. அந்த இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து விட்டதால் உரிய முறையில் அளந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணாவிட்டால் கலெக்டர் ஆபீஸ் முன்பாக தீக்குளிப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் நடிகர் அஜித்தின் படத்தில் அத்திப்பட்டி என்ற கிராமம் காணாமல் போனது போன்று இங்கு ஒரு தெரு காணாமல் போனதாக அவர் கூறியுள்ளார்.