ஜூன் 11-ம் தேதி லார்ட்ஸில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கான தயாரிப்புகள் மும்முரமாக இருக்கும் நிலையில், பாதுகாப்புச் சிக்கல்களுக்கிடையே IPL தொடருக்குத் திரும்பும் ஆஸ்திரேலிய வீரர்களின் முடிவை கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA) ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது. பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் தர்மசாலா மைதானத்தில் வான்வழி எச்சரிக்கை ஒலித்ததையடுத்து IPL இடைநிறுத்தப்பட்டது. மே 17-ம் தேதி IPL மீண்டும் தொடங்க உள்ள நிலையில், WTC இறுதிக்குப் பிறகு விளையாடவுள்ள வீரர்கள் தங்களது பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள முடியும் என CA வலியுறுத்தியுள்ளது.
CA வெளியிட்ட அறிக்கையில், வீரர்கள் IPL-க்கு திரும்பும் முடிவு அவர்களது சொந்த விருப்பம் என்பதையும், அதற்கு நிர்வாகம் முழுமையான ஆதரவு தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் இங்கிலிஸ், மார்ஷ், ஹேசில்வுட் உள்ளிட்டோர் IPL-ல் பங்கேற்கின்ற நிலையில் WTC-க்கும் தயாராக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். BCCI மற்றும் ஆஸ்திரேலிய அரசுடன் பாதுகாப்பு தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடைபெறுவதாகவும் CA தெரிவித்துள்ளது. பயிற்சியாளர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் இரட்டை பொறுப்பைச் சமநிலைப்படுத்த கடின சூழ்நிலையில் உள்ளனர். மேலும் ஐபிஎல் போட்டிக்கு மீண்டும் வெளிநாட்டு வீரர்களை திரும்ப கட்டாயப்படுத்தி அழைக்கும் முடிவு இல்லை என பிசிசிஐ தரப்பிலிருந்தும் செய்திகள் வெளியாகியுள்ளது.