டெல்லியில் இருந்து புவனேஸ்வருக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (விமான எண் IX-1128) சென்றபோது, விமானத்துக்குள் குளிரூட்டும் அமைப்பு (ஏசி) வேலை செய்யவில்லை என்ற காரணத்தால் பயணிகள் கடும் அவல நிலைக்கு உள்ளான சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து குருகிராமை சேர்ந்த பயணி துஷார்காந்த் ரவுட் தனது லிங்க்ட்இன் பதிவில் பகிர்ந்துள்ளார். விமானம் பிற்பகல் 3.55 மணிக்கு புறப்பட்டதாகவும், அதற்குப் பிறகு இரண்டு மணி நேரம் வரை ஏசி செயலிழந்ததாகவும் கூறியுள்ளார். “விமானத்துக்குள் வெப்பம் தாங்கமுடியாத அளவிற்கு இருந்தது. ஒருவர் உடல்நிலை மோசமடைந்தார்” எனவும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் பதிலளித்து, புறப்பட்டு செல்லும் முன் மற்றும் தரையிலிருக்கும் போது திறந்த கதவுகள் மற்றும் மின்சார வரையறைகள் காரணமாக ஏசி தாமதமாக செயல்படலாம் என தெரிவித்துள்ளது. ஆனால் புறப்பட்டவுடன் ஏசி இயல்பாக வேலை செய்யும் என்றும் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
பயணிகள் புகார்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிய நிலையில், லிங்க்ட்இனில் பல பயணிகள் விமான சேவைகளின் தரம் குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “புறப்படும் முன் சரிவர ஆய்வு செய்யப்படுகிறதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். மற்றொரு பயணி, “எனது சமீபத்திய பயணமும் மோசமான அனுபவம்தான். முன்பதிவான உணவு குளிர்ச்சியுடன் வழங்கப்பட்டது” என பகிர்ந்துள்ளார்.