(இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)
கடந்த 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்த கோவை மகளிர் நீதிமன்றம், அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
9 பேரும் குற்றவாளிகள் என்று இன்று காலை 10.45 மணியளவில் தீர்ப்பளித்த நீதிபதி நந்தினி தேவி, தண்டனை விவரத்தை தற்போது அறிவிக்கிறார். அதன்படி, 9 பேருக்குமே சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளிச்சத்துக்கு வந்த இந்த பாலியல் வழக்கு காரணமாக, அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.
இந்த பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிமுக பின்புலம் இருப்பதாக தொடர்ந்து திமுக குற்றம் சாட்டி வந்தது, எனினும் அதை அதிமுக மறுத்தது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அரசு வழக்கறிஞர் சுந்தரமோகன், "கைதான 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வயதை காரணம் காட்டி குறைவான தண்டனை வழங்குமாறு குற்றவாளிகள் கேட்டுள்ளனர். அரசுத் தரப்பில் கடுமையான வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது அரிதான வழக்கு. பெண்கள் தொடர்பான இந்த வழக்கில் நீதிமன்றம் கடும் தண்டனை வழங்க வேண்டும்" என தெரிவித்தார்.
இவ்வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 D (கூட்டுப் பாலியல் வன்கொடுமை) மற்றும் 376 (2)(N) (தொடர்ந்து பாலியல் குற்றத்தில் ஈடுபடுவது) ஆகிய இரு முக்கியமான பிரிவுகளில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த வழக்கில் நண்பகல் 12 மணிக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது.
"உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பெண்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்" என தெரிவித்தார் சுந்தர மோகன்.
இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட 48 பேரும் இறுதிவரை பிறழ்சாட்சிகளாக மாறவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சுரேந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
வழக்கில் அழிக்கப்பட்ட ஆதாரங்கள் தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம் மீட்கப்பட்டதாக அவர் கூறினார். விஞ்ஞானப்பூர்வமாக அடையாளம் காணுதல் உள்ளிட்ட பலவற்றுக்கு வழக்கில் தொழில்நுட்பம் உறுதுணையாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
இதுவரை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் 8 பேரை விசாரித்ததாக கூறினார்.
குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாண்டியராஜன், ''இந்த வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். தீர்ப்புக்கு முன் எங்கள் தரப்பில் கருத்து கேட்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் மீதும் வேறு எந்த வழக்குகளும் இல்லை. இவர்கள் அனைவரும் இளைய வயதினர். இவர்களின் வயது, உடல்நிலை மற்றும் இவர்களின் வயதான பெற்றோரைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டுமென்று கோரியுள்ளோம். '' என்றார்.
2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கு.
கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இளம் பெண்களை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை காணொளி ஆக பதிவு செய்து பாதிக்கப்பட்டவர்களை ஒரு கும்பல் மிரட்டி வந்துள்ளது.
இவர்களால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், தனது சகோதரரிடம் அது பற்றி கூறவே, தங்கையை பாலியல் சீண்டல் செய்த இளைஞர்களை சுற்றி வளைத்த அவரது சகோதரர் அவர்களை விசாரித்திருக்கிறார். அப்போது அந்த இளைஞர்கள் வைத்திருந்த செல்போன்களில் ஏராளமான இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துன்புறுத்தப்படும் காணொளிகள் இருந்துள்ளன.
இதையடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டவுடன் திருநாவுக்கரசு, சபரிராஜன் என்கிற ரிஷ்வந்த், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அடித்து துன்புறுத்தப்படும் காணொளிகள், பொதுமக்கள் மத்தியில் பரவி வந்த நிலையில், இதில் அரசியல் கட்சி நிர்வாகிகளின் வாரிசுகளும் ஈடுபட்டிருப்பதாக கூறப்பட்டது.
* பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்த நாள்: 2019 பிப்ரவரி 12
* முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட நாள்: 2019 பிப்ரவரி 24. அதன் அடிப்படையில் சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
* திருநாவுக்கரசு என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவானார். தலைமறைவாக இருந்த அவர், ''தனக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பு இல்லை'' என வீடியோ வெளியிட்டார். 2019 மார்ச் 5 அன்று அவர் கைது செய்யப்பட்டார்.
* திருநாவுக்கரசின் ஐஃபோனில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பதியப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதுவே இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக, திருப்புமுனையாக அமைந்தது.
* வழக்கு பதியப்பட்ட ஒரு மாதத்துக்குள் அதாவது 2019 மார்ச் மாதத்தில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
* வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரான சபரிராஜன் வீட்டில் கைப்பற்றப்பட்ட லேப் டாப் இந்த வழக்கின் மிக முக்கியமான மற்றொரு ஆதார ஆவணமானது.
* 2019 ஏப்ரல் 25 அன்று இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. செல்போன்கள், லேப்டாப் போன்றவற்றில் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் மின்னணு ஆதார ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டன.
* பாதிக்கப்பட்ட 20 பெண்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக கைதான சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோருக்கு எதிராக 2019 மே 24 அன்று முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
* சிபிஐ வசம் வழக்கு வந்தபின்பு, இந்த வழக்கில் அருளானந்தம், ஹெரன்பால் மற்றும் பாபு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டு, அரசியல் அரங்கில் பரபரப்பான பேசுபொருளானது.
* இந்த 3 குற்றவாளிகள் மீதும் 2021 பிப்ரவரி 22 அன்று இரண்டாவது கூடுதல் குற்றப்பத்திரிக்கை, கோவை மகிளா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
* வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பதாவது நபராக அருண்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு, அவர் மீதான குற்றப்பத்திரிக்கை, 2021 ஆகஸ்ட் 16 அன்று, கூடுதல் குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்யப்பட்டது.
* இந்த வழக்கில் 100க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் 48 பேர் மட்டுமே, சிபிஐ அதிகாரிகளால் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டனர்.
* பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவானபோது, காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரகாஷ் முதல் விசாரணை அதிகாரியாக இருந்தார். சிபிசிஐடியிடம் மாற்றப்பட்ட பின்பு, எஸ்பி நிஷா பார்த்திபன் விசாரணை நடத்தினார். அதன்பின் சிபிஐ அதிகாரிகள் விஜய் வைஷ்ணவி, ஆய்வாளர் பச்சையம்மாள் ஆகியோர் விசாரணை நடத்தியுள்ளனர்.
* இவ்வழக்கில் எலக்ட்ரானிக் பொருட்களே முக்கிய ஆதாரங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. ஐஃபோனில் எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் ஆகியவற்றை வைத்து குற்றம் நடந்த தேதி, நேரம் ஆகியவை எடுக்கப்பட்டுள்ளன.
* வாட்ஸ்ஆப் குழுவை தொடங்கி அதில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
* பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் புகார் கொடுக்க அச்சப்பட்டுள்ளனர். இவர்களை அச்சுறுத்துவதற்காக சில ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். விசாரணையின்போது அவை நீக்கப்பட்டன.
* இந்த வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, வழக்கு பதியப்பட்ட நாளிலிருந்து குற்றம் சாட்டப்பட்ட யாருக்கும் பிணை வழங்கப்படவில்லை.
* பாதிக்கப்பட்ட 8 பெண்களில் ஏழு பேர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி சாட்சியம் கூறினர். இவர்களிடம் நீதிமன்ற அறையில் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது.
* குற்றப்பத்திரிகைகளில் இவர்கள் மீது 76 விதமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அரசு தரப்பில் 205 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 12 ஆவணங்கள் குறித்துத் தரப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர்த்து நீதிமன்றம் தானாக 11 ஆவணங்களை எடுத்துக் கொண்டுள்ளது. வழக்கு விசாரைணயில் கைப்பற்றப்பட்ட செல்போன்கள், லேப்டாப், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட முக்கியமான 30 பொருட்கள் ஆதார ஆவணமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
* பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இறுதிவரை பிறழ்சாட்சியாக மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* முதல் குற்றப்பத்திரிகை துவங்கி இறுதிவரை மொத்தம் 1500 பக்கங்களில் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. சாட்சிகளிடம் 236 கேள்விகள் கேட்கப்பட்டு, அவை பதிவு செய்யப்பட்டுள்ளன.
* இந்த வழக்கை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, தொடர்ந்து 5 ஆண்டுகளாக விசாரித்து வருகிறார். இடையில் அவருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டு, உயர் நீதிமன்ற உத்தரவால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.
* இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
9 குற்றவாளிகள் யார்?- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு