ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியான ஷோபியான் மாவட்டத்தில் உள்ள கெல்லர் பகுதியின் ஷுக்ரூ காடுகளில் பாதுகாப்புப் படைகளுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாதுகாப்புப் படைகளுக்கு கிடைத்த துல்லியமான உளவுத்தகவலின் அடிப்படையில் போலீசாரும் இராணுவமும் இணைந்து காடுகளுக்குள் சென்ற போது, மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்புப் படைகளும் பதிலடி கொடுத்ததில் மூவர் உயிரிழந்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்டாலும், அவர்கள் அடையாளம் இன்னும் உறுதியாகவில்லை. அவர்களின் அடையாளம் மற்றும் தொடர்புடைய தகவல்களை கண்டறியும் பணி பாதுகாப்பு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.