இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. மேலும், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து இருநாடுகளும் ஏவுகணை, டிரோன் மூலம் தாக்குதல் நடத்தின. இந்த மோதல் தற்போது தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் எல்லையை தவறுதலாக எல்லை தாண்டி சென்ற இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பூர்ணம் குமார் ஷாவை பாகிஸ்தான் வீரர்கள் சிறைபிடித்தனர். முன்னதாக கொல்கத்தாவைச் சேர்ந்த பூர்ணம் குமார் ஷா என்பவர் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் பாகிஸ்தான் எல்லையில் 182-வது பட்டாலியனில் பணியாற்றி வருகிறார். இவர் வெயில் அதிகம் இருந்ததால் அங்கிருந்த விவசாயிகளுடன் சேர்ந்து நிழலில் அமருவதற்கு சென்றதாக தெரிகிறது. அப்போது பூர்ணம் குமார் ஷா எல்லை தாண்டியதாக குற்றம்சாட்டி பாகிஸ்தான் ராணுவத்தினர் அவரை கைது செய்தனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனைத்தொடந்து 17 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் பூர்ணம் குமார் ஷாவை மீட்பதற்காக ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் வசமுள்ள இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரரை விரைந்து மீட்க அவரது மனைவி மற்றும் மேற்கு வங்காள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி ராஜஸ்தானில் சர்வதேச எல்லையை தவறுதலாக கடந்து பாகிஸ்தானின் பிடியில், கடந்த 20 நாட்களாக உள்ள எல்லைப் பாதுகாப்பு படை வீரரை மீட்பதில் தாமதம் நீடித்து வரும்நிலையில், தனது 'கணவரை மீட்டு, தனது குங்குமத்தை மீட்டுத் தருமாறு எல்லைப் பாதுகாப்பு படை வீரரின் 7 மாத கர்ப்பிணி மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.