தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள், 1947ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் விதி 15-ன் படியும், உணவு நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள், 1958ம் ஆண்டு தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் விதி 42(பி)ன் படியும் அமைக்கப்படுதல் வேண்டும்.
மேலும் 1948ம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் 113ன் படி தொழிற்சாலைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் அமைக்கப்படுதல் வேண்டும்.
குறிப்பாக வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் முதன்மையானதாகவும், பெரிதாகவும், பின்னர் ஆங்கிலத்திலும், அதன் பின்னர் இதர மொழிகளிலும் முறையே 5:3:2 என்ற விகிதத்திலும் அமைக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு அரசின் உத்தரவின் படி, மேற்படி நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைப்பதை உறுதி செய்யும் பொருட்டு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தமிழ் வளர்ச்சித் துறை, உள்ளாட்சி அமைப்புகள், வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகள், உணவு நிறுவன உரிமையாளர்களின் சங்கப் பிரதிநிதிகள், வேலையளிப்பவர் சங்கங்களின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுவினரால் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் தமிழில் பெயர்ப்பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து, விழிப்புணர்வினை ஏற்படுத்தவும், 2025-ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதிக்குள் 100 சதவீதம் தமிழில் பெயர்ப்பலகை அமைப்பதை உறுதி செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அனைத்து கடைகள், உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் பெயர்ப்பலகைகளை தமிழில் முதன்மையானதாக பெரியளவில் அமைத்திட மே மாதம் 15ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. இக்கால அவகாசத்திற்குள் நிறுவனங்களில் பெயர்ப்பலகைகள் தமிழில் அமைத்திடுவது தொடர்பான வழிமுறைகளை கடைபிடித்திட தொடர்புடைய அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மே 15ம் தேதிக்குப் பின்னரும் சட்ட விதிகளின்படி, தமிழில் பெயர்ப்பலகை அமைக்காத உரிமையாளர்களிடம்/ பொறுப்பான நபர்களிடம் மறு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகளில் தமிழில் பெயர்ப்பலகைகளை சட்டவிதிகளின்படி அமைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிடவும், அபராதம் செலுத்துவதை தவிர்க்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.