#featured_image %name%
ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முடிவெடுக்க உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்து இருந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பி கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், தமிழக ஆளுநர் ரவி காலம் தாழ்த்துவதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ”மசோதாவை ஆளுநர்கள் அனுப்பி வைத்தால், அதன் மீது குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்’ என, கால நிர்ணயம் செய்தது.
மசோதா விஷயத்தில் முடிவெடுக்க குடியரசுத் தலைவர்க்கு, உச்ச நீதிமன்றம் இது போல் காலக்கெடு நிர்ணயித்தது, இதுவே முதல் முறை. இந்த விவகாரம் தொடர்பாக, இன்று (மே 15) உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசனைக் கருத்தை பெறும் வகையில் 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பினார்.
குடியரசுத் தலைவர் அதிகாரமான 143ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விளக்கம் கேட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயிக்க முடியுமா?
அரசியல் சாசனம் காலவரம்பை நிர்ணயிக்காத நிலையில் உச்சநீதிமன்றம் எப்படி நிர்ணயிக்க முடியும்?
குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கான அதிகாரத்திற்கு மாற்றாக உச்சநீதிமன்றம் 142ஐ பயன்படுத்தலாமா? – உள்ளிட்ட 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு எழுப்பியுள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தின் விவரம்…
இந்திய அரசியலமைப்பின் 143வது பிரிவின் (1)-வது பிரிவின் மூலம் எனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு என்ற நான், பின்வரும் கேள்விகளை இந்திய உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்காகவும், அதன் கருத்தைத் தெரிவிப்பதற்காகவும் இதன் மூலம் பரிந்துரைக்கிறேன், அதாவது:-
1. இந்திய அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் ஒரு மசோதா, ஆளுநருக்கு சமர்ப்பிக்கப்படும்போது, அவருக்கு முன் இருக்கும் அரசியலமைப்பு வாய்ப்புகள் என்ன?
2. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 200-ன் கீழ் ஒரு மசோதா தாக்கல் செய்யப்படும்போது, அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனைகள் ஆளுநரைக் கட்டுப்படுத்துகிறதா?
3. இந்திய அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் ஆளுநர் அரசியலமைப்பு வழங்கும் வாய்ப்பை பயன்படுத்துவது, நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டதா?
4. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 200 இன் கீழ் ஆளுநரின் நடவடிக்கைகளை நீதித்துறை ஆய்வு செய்வதற்கு பிரிவு 361 முழுமையான தடையை விதிக்கிறதா?
5. அரசியலமைப்பில் காலக்கெடு நிர்ணயிக்கப்படாவிட்டாலும், பிரிவு 200 இன் கீழ் ஆளுநர்கள் தங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்தும்போது, பின்பற்ற வேண்டிய நடைமுறைகளில், நீதிமன்றங்கள் காலக்கெடுவை விதிக்க முடியுமா, மற்றும் பரிந்துரைக்க முடியுமா?
6. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 201 இன் கீழ் குடியரசுத் தலைவர் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டதா?
7. அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு மற்றும் குடியரசுத் தலைவர் அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறை இல்லாத நிலையில், இந்திய அரசியலமைப்பின் 201 வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவரின் விருப்புரிமையைப் பயன்பாட்டுக்கான காலக்கெடு மற்றும் நடைமுறைத் தேவைகளை நீதிமன்றங்கள் அமைக்க முடியுமா?
8. குடியரசுத் தலைவரின் அதிகாரங்களை நிர்வகிக்கும் அரசியலமைப்புத் திட்டத்தின் வெளிச்சத்தில், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 143-ன் கீழ், குடியரசுத் தலைவர் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகவோ அல்லது வேறுவிதமாகவோ ஒதுக்கும்போது, உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்று, உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெற வேண்டுமா?
(ஆளுநர் ஒதுக்கிய மசோதாக்கள் குறித்து முடிவெடுக்கும்போது பிரிவு 143 இன் கீழ் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெற வேண்டுமா?)
9. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 200 மற்றும் பிரிவு 201 இன் கீழ் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் எடுக்கும் முடிவுகள், சட்டம் அதிகாரபூர்வமாக அமலுக்கு வருவதற்கு முந்தைய கட்டத்தில் நியாயப்படுத்தப்படுமா? ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, எந்த வகையிலும் அதன் உள்ளடக்கங்கள் மீது நீதிமன்றங்கள் நீதித்துறை தீர்ப்பை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறதா?
10. இந்திய அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ், அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துவதையும், குடியரசுத் தலைவர்/ஆளுநர் உத்தரவுகளையும் எந்த வகையிலும் நீதித்துறை மாற்றியமைக்கவோ அல்லது மீறவோ முடியுமா?
11. இந்திய அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டபடி, ஒரு ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம், நடைமுறைக்கு வருமா?
12. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 145(3)-ன் விதிமுறையைக் கருத்தில் கொண்டு, இந்த மாண்புமிகு நீதிமன்றத்தின் எந்தவொரு அமர்வும், அரசியலமைப்பின் விளக்கம் தொடர்பான கணிசமான சட்டக் கேள்விகளை உள்ளடக்கியதா என்பதை முதலிலேயே முடிவு செய்து, குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அதை பரிந்துரைப்பது கட்டாயமில்லையா?
13. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 142 இன் கீழ் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் நடைமுறைச் சட்டம் அல்லது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 142 தொடர்பான விஷயங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளதா? அல்லது,
அரசியலமைப்பின் அல்லது நடைமுறையில் உள்ள சட்டத்தின் தற்போதைய அடிப்படை அல்லது நடைமுறை விதிகளுக்கு முரணான, அல்லது முரண்பாடான உத்தரவுகளைப் பிறப்பித்தல்/ஆணைகளைப் பிறப்பித்தல் என்பது வரை நீட்டிக்கப்படுகிறதா?
14. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 131 இன் கீழ், ஒரு வழக்குத் தொடருவதைத் தவிர, வேறு எந்த வழியிலும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான மோதல்களைத் தீர்க்க அரசியலமைப்பு உச்ச நீதிமன்றத்தை அனுமதிக்கிறதா?
குடியர்சுத் தலைவர் எழுதியுள்ள இந்தக் கடிதத்தின் மூலம், குறிப்பிட்ட இந்தக் கேள்விகளை எழுப்புவதன் மூலம், நிர்வாக மற்றும் நீதித்துறை அதிகாரத்தின் அரசியலமைப்பு எல்லைகள் குறித்து குடியரசுத் தலைவர் தெளிவுபடுத்த முயல்கிறார். இது தேசிய விஷயங்களில், நீதித்துறை விளக்கத்தின் தேவையை இன்று வலுப்படுத்துகிறது.
இதற்கு, தமிழக ஆளுநர் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் இரு நபர் அமர்வு தன்னிச்சையாக அளித்த தீர்ப்பு காரணமாகிறது,. அதற்கு, சுயநலன் சார்ந்து அரசியல் ரீதியாக முறைகேடுகளை ஊக்குவித்து, முறைகேடுகளையே சட்ட ரீதியாக மேற்கொள்ளும் தமிழக அரசின் ஆளும் திமுக.,வின் நடவடிக்கைகள் காரணமாகிவிட்டன என்பது சட்ட வல்லுநர்களின் கருத்தாக அமைந்திருக்கிறது.
News First Appeared in