'பழைய தலைவர் என்பதை மறந்துவிட்டு இன்னும் தலைவராக நீடிப்பதாக நினைத்துக் கொண்டு அண்ணாமலை பேசி வருகிறார். தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரனா, அண்ணாமலையா என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும்' - மே 6 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இவ்வாறு கூறினார்.
ஈரோட்டில் வயதான தம்பதி படுகொலை சம்பவத்தில் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளதாக, அண்ணாமலை கூறியதற்கு இந்தக் கருத்தை திருமாவளவன் வெளிப்படுத்தியிருந்தார்.
அண்ணாமலையின் சமீபத்திய செயல்பாடுகளால், 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க வாக்குகள் மடைமாறுவதில் சிக்கல் வரலாம் எனக் கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். தமிழக பா.ஜ.க-வில் என்ன நடக்கிறது?
தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதியன்று நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக, அ.தி.மு.க உடன் கூட்டணியையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி செய்தார்.
முன்னாள் தலைவர் அண்ணாமலையின் திறன்களை தேசிய அளவில் பா.ஜ.க பயன்படுத்திக்கொள்ள உள்ளதாகவும் அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
'மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுகிறார்' என்பதை அ.தி.மு.க-வுக்கு உணர்த்திய பிறகே கூட்டணியை அமித் ஷா அறிவித்ததாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
இதற்கு செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்த அமித் ஷா, "இதில் சிறிதளவும் உண்மை இல்லை. மாநில தலைவராக என் பக்கத்தில் தான் அண்ணாமலை அமர்ந்திருக்கிறார்," என்றார்.
தற்போது பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினராக இருக்கும் அண்ணாமலை, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்கும் கூட்டங்களைத் தவிர்ப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
கோவை காளப்பட்டியில் நயினார் நாகேந்திரனுக்கு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியன்று பா.ஜ.க பொறுப்பாளர்கள் வரவேற்பு கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்பட பலரும் பங்கேற்றனர்.
அண்ணாமலையின் வீட்டுக்கு அருகில் நிகழ்ச்சி நடந்தாலும், அவர் பங்கேற்கவில்லை. தொடர்ந்து, கட்சி சார்பில் நடைபெற்ற சில கூட்டங்களிலும் அவர் பங்கேற்கவில்லை.
இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை வரவேற்று மே 14 ஆம் தேதியன்று பல்வேறு இடங்களில் மூவர்ணக் கொடி பேரணியை பா.ஜ.க நடத்தியது.
சென்னையில் நடைபெற்ற பேரணியில் அண்ணாமலை பங்கேற்கவில்லை. ஆனால், பேரணி தொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவை மட்டும் பகிர்ந்திருந்தார்.
அதேநேரம், தனியார் நிகழ்வுகளில் அண்ணாமலை தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இதுதொடர்பான காணொளி காட்சிகளும் அவரது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டு வருகிறது.
"திமுக அரசைக் கடுமையாக தாக்கி விமர்சனம் செய்தவர், தற்போது தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பேசுகிறார். தலைவர் பதவி மாற்றத்தை அண்ணாமலை விரும்பவில்லை. அது அவர் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
"தமிழக பா.ஜ.க-வுக்கு செல்வாக்கை வளர்த்துக் கொடுத்ததில் அண்ணாமலைக்கு முக்கிய பங்கு உண்டு. மேற்கு மண்டலம் உள்பட சில பகுதிகளில் இடைநிலை சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கணிசமான அளவு ஆதரவு கொடுத்தனர். தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்கியதை அவர்கள் ஏற்கவில்லை" என்கிறார், அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.
2026 சட்டமன்றத் தேர்தலின்போது இதை பா.ஜ.க தலைமை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது முக்கியம் எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"கட்சியைத் தாண்டியும் அண்ணாமலைக்கு ரசிகர் கூட்டம் உள்ளது. அவரது அரசியல் செயல்பாட்டுக்குக் கூட்டம் உள்ளது. பா.ஜ.க தலைவரைவிட செல்வாக்குமிக்க பதவி கிடைத்தால் அவர் கட்சியில் நீடிப்பார். அவரது சமீபகால நடவடிக்கைகள் அதைத்தான் உணர்த்துகிறது" என்கிறார், ஷ்யாம்.
ஆனால், இந்தக் கருத்தை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழக பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், "தலைவராக பதவியில் இருந்தபோது வெளிநாடு செல்வது, கல்லூரி நிகழ்வுகளில் பங்கேற்பது என அண்ணாமலை செயல்பட்டு வந்தார்" என்கிறார்.
இதுபோன்ற நிகழ்வுகளில் செய்தியாளர் சந்திப்புகளும் நடந்ததால் அது கட்சி சார்ந்த விவகாரமாக பார்க்கப்பட்டதாக அவர் கூறுகிறார். "தற்போதைய மாநில தலைவருக்கு அவர் ஒத்துழைப்பைக் கொடுத்து வருகிறார். மற்றபடி கூட்டங்களை புறக்கணிப்பதாக கூறும் தகவலில் உண்மையில்லை" என்கிறார், எஸ்.ஆர்.சேகர்.
கோவையில் நடைபெற்ற கூட்டம், சென்னை பேரணி ஆகியவற்றின்போது உள்ளூரில் இருந்திருந்தால் நிச்சயமாக அண்ணாமலை பங்கேற்றிருப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழக பா.ஜ.க தலைவராக 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் அண்ணாமலை நியமிக்கப்பட்டார். தி.மு.க ஆட்சிக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து அவர் செயல்பட்டு வந்தார்.
தி.மு.க அரசு ஊழல் செய்வதாகக் கூறி சில காணொளிகளை வெளியிட்டார். ஆட்சி மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்ததால் பா.ஜ.க வட்டாரத்தில் அவரின் செல்வாக்கு அதிகரித்தது. ஒருகட்டத்தில், 'அ.தி.மு.க ஆட்சியின் ஊழல்களைப் பற்றியும் பேசுவேன்' எனக் கூறினார்.
தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவையும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கடுமையாக விமர்சித்திருந்தார். இது, அதிமுக வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் முறிவு ஏற்பட்டது.
கூட்டணி முறிவை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.ஏ.செங்கோட்டையன் போன்றவர்கள் வரவேற்றனர். தொடர்ந்து, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க, அ.ம.மு.க ஆகிய கட்சிகளுடன் பா.ஜ.க கூட்டணி அமைத்தது. இதில் 9 தொகுதிகளில் பா.ஜ.க இரண்டாம் இடம் பிடித்தது.
'மீண்டும் அ.தி.மு.க - பா.ஜ.க இடையே கூட்டணி உருவாகலாம்' என்ற பேச்சுகள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கின. மார்ச் 25 அன்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
ஏப்ரல் 11 அன்று கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக, அமித் ஷா அறிவித்தார். அ.தி.மு.க-வை கடுமையாக விமர்சித்து வந்த என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.
கூட்டணி உடன்பாட்டுக்காக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்குவதாகக் கூறப்பட்ட தகவலை உள்துறை அமைச்சர் அமித் ஷா மறுத்திருந்தார்.
அதேநேரம், அண்ணாமலையின் அண்மைக்கால பேச்சுகள் பேசுபொருளாக மாறியுள்ளன.
ஈரோட்டில் மே 5ம் தேதி செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, "தி.மு.க-வை வீழ்த்துவோம் என்பது வேறு விஷயம். அதை வீழ்த்திவிட்டு எப்படிப்பட்ட ஆட்சியைக் கொடுப்போம் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். எந்தக் கட்சியாக இருந்தாலும் எப்படிப்பட்ட ஆட்சியை கொடுக்கப் போகிறோம் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும்" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசும்போது, " தமிழ்நாட்டில் அரசியல் என்பது திறந்தவெளி மைதானமாக (open field) உள்ளது. இங்கு நிறைய வீரர்கள் (players) உள்ளனர். தி.மு.க அரசு மீது மக்களுக்கு வெறுப்பு உள்ளது. புதியவர்கள் வந்தால் வரவேற்பு உள்ளது," எனக் கூறினார்.
அ.தி.மு.க வலிமையான கட்சியாக உள்ளதாகக் கூறிய அண்ணாமலை, அமைப்புரீதியாக பா.ஜ.க வலிமையாக உள்ளது என்றும் பா.ம.க, தினகரன் ஆகியோர் அவரவர் பகுதிகளில் வலிமையுடன் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
அரசியல் என்பது வெளிப்படையாக உள்ளது, அரசியல் கட்சிகள் சுதாரித்து முன்னேற வேண்டும் எனவும் அவர் கூறினார்.
"தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வர முடியும் என்ற சூழல் உள்ளதாக பார்க்கிறேன். மக்கள் அனைவரையும் பார்க்கிறார்கள். சீமான், விஜய் ஆகியோரை பார்க்கிறார்கள். பா.ஜ.க-வை பார்க்கிறார்கள். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க-வை பார்க்கிறார்கள். களம் வெளிப்படையாக உள்ளது" எனவும் அண்ணாமலை பேசினார்.
இதைக் குறிப்பிட்டுப் பேசும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "தமிழக அரசியலில் பரபரப்பாக இயங்கிய அண்ணாமலை, முதலமைச்சர் ஆக வேண்டும் எனத் தீர்மானித்தால் தனிக்கட்சி தான் ஒரே தீர்வாக இருக்க முடியும். மைதானம் வெளிப்படையாக உள்ளதாகக் கூறுவதை இந்தப் பின்னணியில் பார்க்கிறேன்" என்கிறார்.
இதே கருத்தை முன்வைக்கும் மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம், "அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்கு சாதகமாக அவர் நடந்து கொள்கிறார் என நான் கருதவில்லை. கட்சிக் கட்டுப்பாட்டுக்காக ஆதரவாக நடந்து கொள்வதைப் போன்ற தோற்றம் கொடுப்பதாக பார்க்கிறேன்" என்கிறார்.
"தனி மனிதராக பதவி மாற்றத்தை அவரால் ஏற்க முடியவில்லை. இவை சில காலத்துக்கு இருக்கும். பிறகு பிரதான அரசியல் தளத்துக்குள் அவர் வரலாம்" எனவும் ஜென்ராம் குறிப்பிட்டார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க, த.மா.கா, அ.ம.மு.க, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக்கட்சி, ஓ.பன்னீர்செல்வம் அணி ஆகியவை இடம்பெற்றன. அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. எஸ்.டி.பி.ஐ ஆகிய கட்சிகள் அங்கம் வகித்தன.
தேர்தல் முடிவில் 12 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டாம் இடம் பிடித்தது. ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம், தேனியில் டி.டி.வி.தினகரன், தருமபுரியில் சௌமியா அன்புமணி ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்தனர்.
தென் சென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, வேலூர், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளில் பா.ஜ.க இரண்டாம் இடம் பிடித்தது. 26 தொகுதிகளில் அ.தி.மு.க இரண்டாம் பிடித்தது.
2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் வாக்குகள் மடைமாறும்போது, பா.ஜ.க-வுக்கு கணிசமான வெற்றி கிடைக்கும் என பா.ஜ.க கருதுகிறது.
"நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்த தொகுதிகளில் அண்ணாமலைக்கான தனிப்பட்ட வாக்குகள் எவ்வளவு என்பது முக்கியமானது" எனக் கூறுகிறார் ஷ்யாம்.
"அ.தி.மு.க பா.ஜ.க அணியில் வாக்குகள் மடைமாறுவது சவாலானது. சென்னையில் பா.ஜ.க அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. இது அ.தி.மு.க பக்கம் மாறுமா?" எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
அண்ணாமலை வந்த பிறகே பா.ஜ.க-வின் செல்வாக்கு அதிகரித்ததாகக் கூறும் ஷ்யாம், "ஆர்.எஸ்.எஸ் கோட்பாடுகள் மீது நம்பிக்கை வைத்து அண்ணாமலை வரவில்லை. தி.மு.க-வை விமர்சிக்க அவர் சரியான நபராக பா.ஜ.க தலைமைக்கு தெரிந்தார்" என்கிறார் ஷ்யாம்.
அதேநேரம், இதுதொடர்பாக பேசும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, "கூட்டணியில் இடப்பங்கீடு வரும்போது தன் நிலைப்பாட்டை அண்ணாமலை முன்வைப்பார். இரு கட்சிகளின் பலத்துக்கு ஏற்ப பங்களிப்பு இருந்தால் வாக்குகள் மடைமாறுவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது" எனக் கூறுகிறார்.
பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, "அப்படியொரு கேள்வியே அவசியமற்றது" என்று மட்டும் பதில் அளித்தார்.
"இரு கட்சிகளுக்கும் இடையே வாக்குகள் பரிமாறுவதில் எந்த சிக்கலும் இருக்காது. கூட்டணிக்கு வலு சேர்க்கும் வகையில் செயல்படக் கூடிய கட்சியாக அ.தி.மு.க உள்ளது" என்கிறார், அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் காசிநாதபாரதி.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு