விட்டமின் பி12 உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான ஒன்றாக இருக்கிறது. இதன் குறைபாட்டால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. பொதுவாக சைவ உணவுகளில் இந்த விட்டமின் இருப்பதில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
விட்டமின் பி12 பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்னைகள் என்ன? வாழ்வில் எந்தெந்த காலகட்டத்தில் விட்டமின் பி12-ன் தேவை அதிகமாக இருக்கிறது? விட்டமின் பி12 அதிகமாக உள்ள உணவுகள் என்னென்ன?
சைவ உணவை உட்கொள்ளும் நபர்கள் எவ்வாறு தங்களுக்கான விட்டமின் பி12 வை பெற்றுக் கொள்ள இயலும்? அதற்கான பதில்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.
விட்டமின் பி12 என்றால் என்ன?கோபாலமின் (Cobalamin) என்று அழைக்கப்படும் விட்டமின் பி12 என்பது விட்டமின் பி குடும்பத்தில் இடம் பெற்றுள்ள ஒரு முக்கியமான விட்டமின். இது அதிகமாக விலங்கு சார் உணவுகளில் மட்டுமே காணப்படுகிறது.
நீங்கள் சைவ உணவு உண்ணும் பழக்கத்தைக் கொண்டவர்களாக இருப்பீர்கள் எனில், உங்கள் உடலுக்குத் தேவையான விட்டமின் பி12-ஐ சப்ளிமெண்ட்கள் (supplements) மூலமே பெற்றுக் கொள்ள இயலும் அல்லது பி12 விட்டமினுடன் செறிவூட்டப்பட்ட உணவு உங்களுக்கு கைகொடுக்கலாம்.
உடல் ஆரோக்கியத்துக்கு விட்டமின் பி12-ன் பங்கு என்ன?"உடலில் உள்ள இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை சீராக வைக்கிறது விட்டமின் பி12. இரத்த சிவப்பு அணுக்கள் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வதில் மிக முக்கிய பங்காற்றுகிறது.
மேலும், உங்கள் உடலின் நரம்பு மண்டலம் சீராக செயல்படுவதையும் உறுதி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது விட்டமின் பி12.
இது மட்டுமின்றி, "டி.என்.ஏ. உருவாக்கத்துக்கும், சேதமடைந்த டி.என்.ஏவை சரி செய்வதற்கும் விட்டமின் பி12 அதிக அளவில் தேவைப்படுகிறது," என்று தெரிவிக்கிறார் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் ஊட்டச்சத்து துறையில் பணியாற்றும் மருத்துவர் மீனாட்சி பஜாஜ்.
2020-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பின் படி, பிறந்த குழந்தை முதல் 3 வயதான குழந்தைகள் வரை, நாள் ஒன்றுக்கு 1.2 மைக்ரோ கிராம் விட்டமின் பி12 ஊட்டச்சத்தை உணவில் கொண்டிருக்க வேண்டும்.
ஆறு முதல் 18 வயதினருக்கு இந்த ஊட்டச்சத்து நாள் ஒன்றுக்கு 2.2 மைக்ரோ கிராம் என்ற அளவில் இருக்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு விட்டமின் பி12-ன் தேவை அதிகமாக இருக்கலாம் என்று கூறுகிறார் மீனாட்சி.
யார் விட்டமின் பி12 பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள்?யார் விட்டமின் பி12 பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள் என்று பிபிசி தமிழிடம் விளக்கினார் மருத்துவர் மீனாட்சி.
"நரம்பு மண்டலம் மற்றும் இரத்த சிவப்பு அணுக்களின் சீரான வளர்ச்சிக்கு உதவும் மிக முக்கியமான ஊட்டச்சத்தாக விட்டமின் பி12 இருப்பதால், இதன் பற்றாக்குறை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்," என்று எச்சரிக்கிறார் மருத்துவர் மீனாட்சி.
"நான்கு முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் பி12 குறைபாடு மற்றவர்களைக் காட்டிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது," என்று கூறுகிறார் அவர்.
ஃப்ராண்டியர்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள, என்ற ஆய்வறிக்கையில், இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில், விட்டமின் பி12 பற்றாக்குறையால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை 70 முதல் 74% ஆக உள்ளது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, கர்நாடகாவில் இந்த பற்றாக்குறையால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை 51% ஆகவும் இருக்கிறது என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"பி12 பற்றாக்குறையால் இரத்த சோகையில் பெர்னிசியஸ் அனீமியா (pernicious anemia) என்ற பிரச்னை ஏற்படும்.
நரம்பியல் சார்ந்த பிரச்னைகள், சமநிலையற்ற தன்மை, தலைசுற்றல், பலவீனம் அடைதல், மூச்சுப் பிரச்னைகள் போன்றவை ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
மேலும், இதன் பற்றாக்குறை மிகவும் தீவிரமாக இருக்கும் போது, இரத்தத்தில் ஹோமோசிஸ்டெய்ன் (homocysteine) அளவு அதிகமாகும். அளவுக்கு அதிகமாக ஹோமோசிஸ்டெய்ன், ஹைப்பர்ஹோமோசிஸ்டெய்னீமியா (hyperhomocysteinemia) என்ற குறைபாடு ஏற்படும். இதனால் கார்டியோ வாஸ்குலர் என்ற இருதய நோய் ஏற்படக் கூடும்," என்றும் எச்சரிக்கை செய்கிறார் அவர்.
உணவு இல்லாமல் மருந்து மாத்திரைகள் மூலமாக பி12 பற்றாக்குறையை நிவர்த்தி செய்து கொள்ளும் மக்கள், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை நிறுத்திக் கொள்கின்றனர். ஆனால் அப்படி செய்யக் கூடாது. தொடர்ச்சியாக பி12 சப்ளிமெண்டுகளை எடுத்துக் கொள்வது இது போன்ற அபாயங்களில் இருந்து மக்களை காப்பாற்றும், என்றும் மீனாட்சி விளக்கம் அளித்தார்.
காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றில் விட்டமின் பி12 கிடையாது. விலங்குகளில் இருந்து பெறப்படும் உணவுப் பொருட்களில் விட்டமின் பி12 அதிகமாக காணப்படுகிறது.
எந்தெந்த உணவுகளில் விட்டமின் பி12 அதிகமாக உள்ளது என்பதைப் பற்றி விளக்கிய மருத்துவர் மீனாட்சி, அதனை பின்வருமாறு பட்டியலிட்டார்.
வீகன் உணவு முறையைப் பின்பற்றுபவர்கள், செரல்கள் போன்ற செறிவூட்டப்பட்ட உணவுகளை உட்கொள்ளலாம். மாட்டுப்பால் இல்லாத இதர பால் வகைகளை (non-dairy milks) உட்கொள்ளலாம். மேலும், நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செயலிழக்கப்பட்ட ஈஸ்ட்டைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஃப்ளேக்ஸை உணவாக உட்கொள்ளலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர் லாரா டில்ட், குறிப்பிடுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு