தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் படி தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் வாழும் மீன்களின் இனப்பெருக்க காலத்தைக் கருத்தில் கொண்டும், மீன்வளத்தினை பாதுகாத்திடும் பொருட்டும், கிழக்கு கடற்கரைப் பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை 61 நாட்கள் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலமாக கடலில் மீன்பிடிப்பதற்கு ஆண்டுதோறும் தடைவிதித்து தமிழக அரசால் ஆணை வழங்கப்பட்டு வருகிறது.
இக்காலங்களில் சீலா, சாளை, நெத்திலி, முரல், சூரை, கேரை, அயிலை பாறை, ஊளி போன்ற கடலின் மேற்பரப்பில் வாழும் மீன்களின் இனப்பெருக்க காலமாக இருப்பதால், மீன்வளத்தின் பாதுகாப்பினை உறுதிசெய்திட ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடித்தடைக்காலம் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் படி, தூத்துக்குடி மீன்பிடித்துறைமுகத்திலிருந்து இயக்கப்படும் இழுவலை மீன்பிடி விசைப்படகுகள் தொழில்புரியும் நாட்களில் காலை 05:00 மணிக்கு கடலுக்கு சென்று அன்றிரவு 09:00 மணிக்கு கரை திரும்பும் வழக்கத்தைக் கடைபிடித்து வருகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகுகள் அனைத்தும் தங்களது அறிவிக்கையிடப்பட்ட தங்குதளத்தில் இம்மீன்பிடித் தடைக்காலங்களில் தொழிலுக்கு செல்லாமல் கரையில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீன்பிடித்தடைக்காலத்தில் மேற்கு கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மீன்பிடி விசைப்படகுகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதிகளில் தொழில் புரிவதாக தூத்துக்குடி மாவட்ட மீன்பிடி விசைப்படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்களால் தொடர் புகார்கள் முன்வைக்கப்பட்டு வந்தது.
எனவே, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்ட கடற்பகுதியில் மீன்பிடித்தடைக்காலத்தில் மீன்பிடித்தொழில் மேற்கொள்ளும் மீன்பிடி விசைப்படகுகளைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, கடலோர அமலாக்கப்பிரிவு, கடலோர காவல் குழுமம் காவலர்கள் மற்றும் மீனவப் பிரதிநிதிகளுடன் டிரான்ஸ்பாண்டர் கருவி பொருத்தப்பட்ட இரு விசைப்படகுகளின் மூலம் நேற்று மாலை 6:00 மணியளவில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ரோந்துப்பணிக்கு செல்லப்பட்டது.
அவ்வாறு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருக்கும் போது இரவு 12:30 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து கிழக்காக 32 கடல்மைல் தொலைவில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மீன்பிடி விசைப்படகு IND-KL-07-MM-7788 மற்றும் அதனுடன் இருந்த கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தைச் சேர்ந்த சிறிய நாட்டுப் படகுIND-TN-15-MO-4956 ஆகிய இரு படகுகளில் 16 நபர்கள் கடலில் தொழில் புரிந்தது கண்டறியப்பட்டது. அப்படகுகளை இன்று 16.05.2025 அதிகாலை 4:40 மணியளவில் தூத்துக்குடி மீன்பிடித்துறைமுகம் கொண்டு வரப்பட்டது.
மேற்படி, மீன்பிடித்தடையினை மீறி தொழில் புரிந்த படகுகளை தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அப்படகுகளில் இருந்த 1732 கிலோ எடையுள்ள மீன்கள் மற்றும் வளர்ச்சியடையாத சிறிய மீன்கள் 110 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, பொது ஏலத்தில் விடப்பட்டது. மேலும், இவ்விரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டு தொழில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடித் தடைக்காலங்களில் தொழில் புரியும் மேற்கு கடற்கரையைச் சேர்ந்த விசைப்படகுகளின் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன்படி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல் மேற்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கும்போது கிழக்கு கடற்கரையினைச் சேர்ந்த மீன்பிடி படகுகள் மேற்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுப்படக் கூடாது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.