இந்தியா முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பலரும் ஏற்கனவே ஆன்லைனில் முன்பதிவு செய்த ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்துள்ளனர். இவர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோன்று திருப்பதியில் வழங்கக்கூடிய இலவச நேர ஒதுக்கீடு சர்வதரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எந்த வித டிக்கெட்டுகளும் இல்லாமல் நேரடியாக இலவச தரிசனத்தில் வரக்கூடிய பக்தர்கள் வரிசை வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 31 அறைகளும் நிரம்பி சுமார் 2 கிலோ மீட்டருக்கு மேல் கிருஷ்ணதேஜா ஓய்வறையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அவ்வாறு வரிசையில் காத்திருக்கக் கூடிய பக்தர்களுக்கு சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆகும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வார விடுமுறையான நேற்று சனிக்கிழமை காலை 3 மணி முதல் நள்ளிரவு 12:30 மணி வரை 87347 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். 39490 பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.3.13 கோடி காணிக்கையாக செலுத்தி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு இடையே இலவச தரிசனத்தில் சாமி தரிசனத்திற்காக நாராயணகிரி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வரிசையில் பெண்களுக்கு இடையே இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு முத்தி ஒருவருக்கொருவர் தலைமுடியை பிடித்துக் கொண்டு அடித்துக் கொண்டனர்.
யாரும் தடுக்காத நிலையில் இதனை அங்கிருந்த சில பக்தர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதற்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ள நேரத்தில் போலீசார் அல்லது தேவஸ்தான விஜிலன்ஸ் பணியாளர்கள், ஸ்ரீவாரி சேவா தன்னார்வலர்கள் பக்தர்கள் கூட்டம் உள்ள இடங்களில் பாதுகாப்புக்கு இருக்க வேண்டும். அது போன்று யாரும் இல்லாமல் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பூட்டப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களுக்குள் வரிசையில் என்ன நடந்தாலும் யாரும் கேள்வி கேட்பதற்கு ஆட்கள் இல்லாமல் போகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கூட்டம் அதிகமாக உள்ள நேரத்தில் போலீசாரோ அல்லது தேவஸ்தான விஜிலென்ஸ் பணியாளர்களோ பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.