சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதி 5 பேர் பலி... 27 பேர் படுகாயம்!
Dinamaalai May 18, 2025 09:48 PM

கரூர் அருகே சுற்றுலா வேன் மீது ஆம்னி பஸ் மோதியதில் கோவில்பட்டியைச் சேர்ந்த தந்தை-மகன் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் இந்த விபத்தில் 27 பேர் படுகாயமடைந்தனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து தனியார் ஆம்னி பஸ் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டு நாகர்கோவில் நோக்கி வந்தது. இந்த பஸ்சில் 22 பேர் பயணம் செய்தனர். இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 6 குடும்பத்தினர், கோவில்பட்டியில் இருந்து ஒரு வேனில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்றனர்.

இந்த வேனை கோவில்பட்டியை சேர்ந்த சசிகுமார் (52) என்பவர் ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை 5 மணியளவில் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கரூரை அடுத்த செம்மடை அருகே ஆம்னி பஸ் சென்றது. அப்போது முன்னால் அதே பகுதியை சேர்ந்த முருகன் (55) என்பவர் ஓட்டிச்சென்ற டிப்பருடன் கூடிய டிராக்டர் மீது திடீரென ஆம்னி பஸ் மோதியது. இதனால் டிராக்டர் கவிழ்ந்தது.

இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ் சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரை தாண்டி சென்று, எதிரே சசிகுமார் ஓட்டி வந்த வேன் மீது பயங்கரமாக மோதியது. இதனால் வேனில் இருந்தவர்களும், பஸ்சில் வந்த பயணிகளும் அய்யோ, அம்மா, காப்பாற்றுங்கள் என்று அலறினர்.

மேலும் பஸ் மோதிய வேகத்தில் வேன் முற்றிலும் உருக்குலைந்தது. இதனால் வேனில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். பஸ்சின் முன்பகுதியும் சேதமடைந்தது. இதனைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள், தீயணைப்பு துறையினருக்கும், வாங்கல் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வேன் மற்றும் பஸ்சில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அருகே உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் வேன் டிரைவர் சசிகுமார் மற்றும் வேனில் வந்த கோவில்பட்டியை சேர்ந்த எண்ணெய் நிறுவன உரிமையாளரான அருண் திருப்பதி (45), அவரது மகன் காமாட்சி அஸ்வின் (10), விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சரவணக்குமாரின் மகள் எழில்தக்சனா (12) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்தவர்களில் 14 பேர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 13 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்களில் ஒருவர் மட்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் மகள் ஹேமவர்ஷினி (20) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5 மணியளவில் பரிதாபமாக இறந்தார்.

இதனால் பலி எண்ணிக்கை 5 ஆனது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், இந்த விபத்தில் உயிரிழந்த அருண் திருப்பதிதான் சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா வேன் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் தந்தை-மகன் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.