பகீர்... குழந்தையை உயிரோடு மண்ணில் புதைக்க முயன்ற மாணவி... புதுக்கோட்டையில் அதிர்ச்சி!
Dinamaalai May 18, 2025 09:48 PM

அட கடவுளே... இப்படியெல்லாமா பண்ணுவாங்க? என்று புதுக்கோட்டை மாவட்டம் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. உயிரோடு பச்சிளம் பெண் குழந்தையை நர்சிங் மாணவி ஒருவர் மண்ணில் புதைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே பனையப்பட்டியைச் சேர்ந்தவர் வினோதா (21). இலுப்பூர் பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ நா்சிங் படித்து வரும் வினோதாவும், அதே கல்லூரியில் படித்து வரும் சிலம்பரசன் எனும் மாணவரும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் அவ்வப்போது தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து உல்லாசமாக இருந்து வந்த நிலையில், வினோதா கர்ப்பமடைந்தார்.

தனது கர்ப்பத்தை மறைத்து வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் மாணவி வினோதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. நர்சிங் மாணவி என்பதால் அவரே தனக்கு சுய பிரசவம் பார்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருமணத்திற்கு முன்பே கர்ப்படைந்து, குழந்தை பிறந்ததால், குழந்தையை கொன்று புதைக்க வினோதாவும், அவரது வீட்டினரும் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து அருகில் உள்ள மயானத்திற்கு குழந்தையை எடுத்து சென்று, அந்த பெண் குழந்தையை உயிரோடு மண்ணில் புதைக்க முயன்றுள்ளனர்.

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், இந்த குடும்பத்தினரின் செயல் குறித்து பனையப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் கவுரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் குழந்தையை மண்ணில் புதைப்பதற்குள் முயற்சித்தவர்களை அக்கம்பக்கத்தினர் தடுத்து நிறுத்தி குழந்தையை மீட்டனர்.

போலீசாரிடம் அந்த குழந்தையை ஒப்படைத்த நிலையில், உடனடியாக பெண் குழந்தையை சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பின்னர், பிரசவித்த தாய் வினோதாவையும் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் தாயும், சேயும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காதலன் சிலம்பரசனை போலீசார் அழைத்து விசாரித்து வருகின்றனர்.

அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் பனையப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் காதலன் சிலம்பரசன் தூண்டுதல் பேரில் அந்த பெண் குழந்தையை காதலி, மண்ணில் புதைத்து கொலை செய்ய முயன்றது தொிய வந்தது. அதன்படி வழக்குப்பதிந்து சிலம்பரசனை கைது செய்து, விசாரணைக்கு பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.