ஜூலை 1ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், பொதுமக்கள் இப்போதில் இருந்தே மின் கட்டண உயர்வு செய்தி குறித்து தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஜூலை 2023ல் 2.18 சதவீதம், ஜூலை 2024ல் 4.83 சதவீதம் என அடுத்தடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதங்களில் மின் கட்டண உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வருடம் 2025 ஜூலை மாதத்திலும் 3.16 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வரும் ஜூலை 1ம் தேதி முதல் வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் மின் கட்டண உயர்வு பொருந்து என்று கூறப்படுகிறது. இது குறித்து இதுவரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகாத நிலையில், 2025-26 நிதியாண்டில் மின் பயன்பாட்டு கட்டணம் மட்டுமின்றி இதர கட்டணங்களின் மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிப்பதிலும் தமிழ்நாடு மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.