3 மாடி கட்டிடத்தில் திடீர் தீவிபத்து... குழந்தைகள் பெண்கள் உட்பட 17 பேர் பலி!
Dinamaalai May 18, 2025 10:48 PM

 

ஹைதராபாத்தில்  சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து காரணமாக  4  குடும்பங்கள் கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டன. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தரும்  தகவல்கள் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர்களில் 3 பெண்களும் 3 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதும் அருகில் இருந்தவர்களிடம் இருந்து தகவல் கிடைத்ததும் உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள், கட்டிடத்தில் இருந்து 16 பேரை மீட்டனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


11 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்  ஈடுபட்டு வருகின்றனர்.  கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என  அதிகாரிகள் கூறுகின்றனர்.  3 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இச்சம்பவம் குறித்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

அத்தோடு, கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை துரிதப்படுத்த  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.படுகாயமடைந்தவர்கள் உஸ்மானியா, யசோதா (மலக்பேட்டை), டிஆர்டிஓ மற்றும் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.