உலகின் முதல் AI மருத்துவமனை… 21 துறைகளில் 42 ஏஐ மருத்துவர்கள்… எங்கு தெரியுமா?…!!!
SeithiSolai Tamil May 18, 2025 11:48 PM

தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் சீனா, மருத்துவ துறையில் கூட வரலாற்றின் முதன்மையான புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. உலகின் முதல் முழுமையான AI மருத்துவமனை சீனாவில் தொடங்கப்பட்டுள்ளது.

இது, பீஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகத்தின் AI தொழில் ஆராய்ச்சி பிரிவின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. “Agent Hospital” என அழைக்கப்படும் இந்த மருத்துவமனையில், 21 துறைகள் மற்றும் 42 AI மருத்துவர்கள் இருக்கின்றனர்.

பிரத்தியேகமாக இந்த மருத்துவமனையின் சிறப்பம்சம் என்னவெனில், எந்த மனித மருத்துவரும், ஊழியரும் அங்கு இல்லை. அனைத்து பணியையும் AI முகவர்கள் தான் மேற்கொள்கின்றனர். வார்டுகள் இல்லாத இந்த மருத்துவமனை, ஒரு நாளில் சுமார் 3,000 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் திறன் கொண்டது.

நோயறிதல், நோயாளிகளுடன் உரையாடல், சிகிச்சை முடிவுகள் என அனைத்தும் மிக உயர்ந்த தரத்தில் உருவகப்படுத்தப்பட்ட AI செயலிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. பொதுவான காய்ச்சல் முதல், சிக்கலான நோய்கள் வரை கண்டறியும் திறனை இந்த AI மருத்துவர்கள் பெற்றுள்ளனர்.

இந்த AI மருத்துவர்கள், வெறும் மெஷின் போல் செயல்படுவதில்லை. அவர்கள் உணர்வு மற்றும் அனுதாபம் கொண்ட பேச்சு முறை மூலம் நோயாளிகளுடன் தொடர்பு கொள்ளும் திறனை கொண்டுள்ளனர். மருத்துவ அனுபவத்தை, மனிதர்கள் சுருக்கமான காலத்தில் கற்றுக்கொள்பவையாக இந்த AI செயலிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தற்போதைய கட்டத்தில், இந்த மருத்துவமனை உருவகப்படுத்தப்பட்ட சிகிச்சைச் சூழலில் இயங்குவதாகவே தெரிகிறது. ஆனால் இது, எதிர்காலத்தில் மனித மருத்துவர்களுக்கு துணை போகும் புதிய புரட்சி என நிபுணர்கள் மதிப்பீடு செய்கிறார்கள். AI தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட நடைபாதையாக இந்த முயற்சி கருதப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.