வங்கதேச நாட்டில் வசித்து வருபவர் பிரபல நடிகை நுஸ்ராத் பரியா. 31 வயதான இவர் 2023ம் ஆண்டு, பிரபல மறைந்த இயக்குநர் ஷியாம் பெனிகல் இயக்கத்தில் வெளிவந்த முஜிப்: தி மேகிங் ஆப் எ நேசன் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தவர். இந்தப் படத்தின் மூலம் ரசிகர்கள் மற்றும் அந்நாட்டு மக்களிடையே புகழ் பெற்றவர்.
2024 ஜூலையில் ஹசீனாவுக்கு எதிராக உள்நாட்டில் கலவரம் வெடித்து பரவியது. இதில் கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்காக பரியாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், தாய்லாந்து நாட்டுக்கு செல்வதற்காக டாக்காவில் உள்ள ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார்.
அப்போது அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தில், ஹசீனா பதவி விலகியதுடன், இந்தியாவுக்கு வந்து தஞ்சம் புகுந்துள்ளார். பரியாவின் கைது நடவடிக்கையை பட்டா மண்டல உதவி ஆணையாளர் சபிகுல் இஸ்லாம் உறுதி செய்துள்ளார். பரியா, வங்காளதேச மற்றும் இந்திய படங்களிலும் நடித்துள்ளார்.