தென் அமெரிக்காவில் கொலம்பியா நாட்டின் குகுடா பகுதியில் வசித்து வருபவர் மரியா ஜோஷ் இஸ்துபின் சென்சிஸ் . 22 வயதான இவர் மாடலிங் துறையில் பணிபுரிந்து வருகிறார். பல்வேறு மாடல் அழகி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். அதேபோல், சமூகவலைதளத்திலும் மிகவும் பிரபலமாக இருந்து வந்தார். இந்நிலையில், மரியா மே 15ம் தேதி தனது வீட்டில் இருந்தபோது ஆன்லைன் பொருளை டெலிவரி செய்வது போல் அவரது வீட்டிற்கு ஒரு நபர் வந்திருந்தார்.
மரியா வீட்டின் கதவை திறந்தபோது அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அவரை திடீரென சுட்டார். இதில், கழுத்து, வயிறு பகுதியில் படுகாயம் அடைந்த மரியா அலறி துடித்தார். துப்பாக்கி சூடு நடத்திய நபர் தப்பியோடி விட்ட நிலையில் விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் மரியாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மரியா கடந்த 2018ம் ஆண்டு தனது முன்னாள் காதலன் மீது குடும்ப வன்முறை வழக்குப்பதிவு செய்திருந்தார். அந்த வழக்கில் மரியா வெற்றிபெற்றார். அதில் அவருக்கு சுமார் 6 லட்ச ரூபாய் (இந்திய மதிப்பில்) இழப்பீடு வழங்க முன்னாள் காதலனுக்கு உத்தரவிடப்பட்டது. தற்போது மரியா மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இதில் அவரது முன்னாள் காதலனுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.