Iphone: ஐபோன் உற்பத்தி இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு மாறினால்... ஏற்படும் விளைவு என்ன?
Vikatan May 21, 2025 12:48 AM

மோடி தான் எனது நண்பர் என அடிக்கடி கூறும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவை ஒரு நட்பு நாடாக கருதவில்லையோ என்பதுதான் அவரின் அறிவிப்பில் நமக்கு தெரிய வருகிறது.

அதாவது இந்தியாவில் ஐபோன் தயாரிப்புகளை நிறுத்தும்படி iphone நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிடம் கூறியதாகவும் அதனை அமெரிக்காவில் தொடங்கும்படியும் ட்ரம்ப தெரிவித்தது வர்த்தக உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கத்தாரில் நடைபெற்ற வணிக மாநாட்டில் பங்கேற்றபோது, ஐபோன் உற்பத்தி குறித்து ட்ரம்ப் பேசியிருந்தார்.

டொனால்ட் ட்ரம்ப்

ட்ரம்ப் பேசியதாவது, ``ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிடம் நான் கூறினேன், `உங்களை நல்ல முறையில் நடத்துகிறோம், சீனாவில் நீங்கள் தொழிற்சாலைகளை கட்டி வருகிறீர்கள், கடந்த ஆண்டுகள் அதற்காக உடன் இருந்தோம்.

ஆனால் நீங்கள் இந்தியா முழுவதும் தொழிற்சாலை அமைப்பதாக கேள்விப்பட்டேன். அதை நான் விரும்பவில்லை’ என ட்ரம்ப் கூறியதாக அந்த வணிக மாநாட்டில் தெரிவித்தார்.

மே இரண்டாம் தேதி ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதே என அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்துமாறு ட்ரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆப்பிள் நிறுவனம், ஐபோன்களை சீனாவிலும் இந்தியாவிலும் உற்பத்தி செய்து வருகிறது.

எஸ்& பி குளோபல் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் தரவுகள்படி, 2024 டிசம்பர் முதல் 2025 பிப்ரவரி வரை 89.9% ஐபோன்கள் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்த விகிதம் 2025 மார்ச் மாதத்தில் 97.6% ஆக உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு 36 லட்சம் ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐபோன் உற்பத்தி

இந்தியாவில் ஐபோன் உற்பத்தி ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலைகளிலும் டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பெகட்ரான் நிறுவனத்திலும் நடக்கிறது.

ஃபாக்ஸ்கான் நிறுவனம் மட்டுமே இந்த ஆண்டுக்குள் இந்தியாவில் ஐபோன் உற்பத்திகளை இரட்டிப்பாக்க முடிவு செய்து அதன் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் பெரிய ஐபோன் உற்பத்தி தொழிற்சாலைகளில் ஒன்று, தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஃபாக்ஸ்கான் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகும்.

ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள இந்த ஆலையில் 40,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இருந்தாலும் ஐபோன் உற்பத்தியில் எண்ணிக்கையில் சீனாவே முன்னிலையில் உள்ளது. கிட்டத்தட்ட 80 சதவீத ஐபோன்கள் அங்கு தான் தயாரிக்கப்படுகின்றன.

forbe அமெரிக்காவிற்கு உற்பத்தியை மாற்றினால் என்ன ஆகும்?

ஐபோன் உற்பத்திகளை அமெரிக்காவிற்கு முற்றிலும் மாற்றினால் இந்தியாவின் ஆப்பிள் விநியோக சங்கிலி, பாதிக்கப்படும், மேலும் தமிழ்நாட்டின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் பாதிப்படையும் என்று தமிழ்நாடு தொழில் துறையை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, iphone உற்பத்தி இடமாற்றம் செய்தால் அதிக தொழிலாளர் செலவு ஏற்படும். இதனால் செல்போனுக்கான லாபத்தை பெரிய அளவில் குறைக்கும். நிச்சயம் செல்போனுக்கான விலை உயர்வு என்பது கட்டாயமாகும்.

அதுமட்டுமில்லாமல் அமெரிக்காவிற்கு உற்பத்தியை மாற்றுவதால் வணிக ரீதியாக ஆப்பிள் நிறுவனம் பல சவால்களை சந்திக்க கூடும். இந்தியாவில் இருக்கும் உற்பத்தி நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று கூறியுள்ளனர்.

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தியை இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு மாற்ற முடிவு செய்தால் , அந்த நிறுவனம் பல சவால்களை சந்திக்க நேரிடும் என்று குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI) நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவஸ்தவா கூறியதாவது, "அமெரிக்காவில் சுமார் 1,000 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படும் ஒவ்வொரு ஐபோனுக்கும், இந்தியாவின் பங்கு 30 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாகவே உள்ளது. இருந்தாலும் வர்த்தக தரவுகளில், 7 பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதி மதிப்பு, அமெரிக்க வர்த்தக பற்றாக்குறையை அதிகரிக்கிறது.

ஐபோன்களை அசெம்பிள் செய்வதன் மூலம் இந்தியாவின் லாபம் குறைவாகவே உள்ளது என்பதை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் ஒவ்வொரு ஐபோனுக்கும் நாடு சுமார் USD 30 சம்பாதிக்கிறது, ஆனால் இந்தத் தொகையில் பெரும்பகுதி அரசாங்கத்தின் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டத்தின் மூலம் ஆப்பிளுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறது” என்று கூறியிருக்கிறார்.

ட்1ரம்பின் கருத்துக்கு பதிலளித்த மராத்தா வர்த்தகம், தொழில்கள், மற்றும் வேளாண்மை சபையின் (எம்சிசிஐஏ) இயக்குநர் ஜெனரல் பிரசாந்த் கிர்பேன் கூறியதாவது,

”இந்தியா, சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளை தவிர்த்து அமெரிக்காவில் ஐபோன்களை தயாரிக்க முடிவு செய்தால் அதன் விலை 3,000 டாலர்களாக அதிகரிக்கும். இது, இந்தியாவில் தயாரிக்கும் செலவுடன் ஒப்பிடும்போது 3 மடங்கு அதிகம். அப்படி தயாரிக்கும் ஐபோனை 3,000 டாலர்களை கொடுத்து அமெரிக்க நுகர்வோர்கள் வாங்க தயாராக இருப்பார்களா? என்பதை ஆப்பிள் நிறுவனமும், அமெரிக்க நிர்வாகமும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்

ஆப்பிளின் உற்பத்தியில் 80 சதவீதம் சீனாவில் நடக்கிறது. இதனால் அங்கு 50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான திட்டங்களை அறிவித்தபோது, விநியோகச் சங்கிலியை பன்முகப்படுத்த சில உற்பத்தி மையங்களை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்ற வேண்டிய நிலை இருந்தது.

எனவே, வேலைவாய்ப்பு, உற்பத்தி சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தன. அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயரவில்லை” என்று கூறியிருந்தார்.

ஆப்பிள் நிறுவனத்தால் அமெரிக்காவில் லாபகரமான உற்பத்தியே தொடர முடியாது என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு முற்றிலும் ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தியை மாற்றுமா என்பது பலரின் கேள்விகளாக உள்ளது. இதனால் ஏற்படும் சவால்களையும் இழப்புகள் குறித்தும் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.. ட்ரம்பின் கருத்து வர்த்தக உலகில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.