தொழில்நுப்டம் நாளுக்கு நாள் பெருகி வரும் அதே வேளையில் மனித நேயம் மங்கி வருகிறது. இதனை நிரூபிக்கும் வகையில் அடிக்கடி நிகழ்வுகள் நமக்கு காட்டுகின்றன. அந்த வகையில் மத்திய பிரதேசம் ஜபல்பூர் எல்லை அருகே அமைந்துள்ளது கட்னி மாவட்டத்தின் சாப்ரா கிராமம். இந்த கிராத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஜபல்பூரிலிருந்து ஹசாரிபாக் நோக்கி மதுபானங்களுடன் சென்ற ஒரு லாரி திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்துவிட்டது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநரும், கிளீனரும் காயமடைந்தனர். கவிழ்ந்த லாரியில் இருந்த ஏராளமான பீர் மற்றும் மதுபான பாட்டில்கள் சாலையில் சிதறிவிட்டன. அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காயமடைந்த ஓட்டுநரையும் கிளீனரையும் கண்டுகொள்ளாமல் பீர் பாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த வீடியோ , சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் மக்கள் பீர் பாட்டில்களையும் பெட்டிகளையும் கைப்பற்றி பைகளில் அடைத்து, தோளில் சுமந்து ஓடுகிற காட்சிகள் பதிவாகியுள்ளன. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அகிலேஷ் தஹியா தலைமையில் போலீசார் மற்றும் கலால் துறை அதிகாரிகள் விரைந்து வந்து மீதமுள்ள பாட்டில்களை பாதுகாப்பதில் ஈடுபட்டனர். இருப்பினும், பெரும்பாலான பாட்டில்கள் ஏற்கனவே பொதுமக்களால் எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன.
மதுபான ஒப்பந்ததாரர், இந்த விபத்தால் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, வைரலான வீடியோவில் காணப்படும் நபர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.