இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஸ்டாலின் மாடல் அரசு 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. மேலும், ஸ்டாலின் மாடல் அரசின் காவல் துறை ஏவல் துறையாக மாறி, திமுக நிர்வாகிகள் செய்யும் குற்றங்கள் தொடர்பான புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் கூட பாரபட்சம் காட்டுகின்றன.
கடந்த வாரம் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் பகுதியில் தனியார் கடை ஒன்றில் வேலை செய்து வந்து 34 வயதுடைய பெண் ஒருவர், பணி முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் வழியில், சண்முக பிரபு, பாஸ்கர், பிரகதீஸ்வரன் மற்றும் சரவணன் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தொடர்ந்து அந்த நான்கு குற்றவாளிகளும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம், இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளனர். எனினும் பாதிக்கப்பட்ட பெண் துணிச்சலுடன் தனது குடும்பத்தினருடன், தான் பாதிக்கப்பட்டதை காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சிறுமி முதல் முதியோர் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருவது அதிகரித்துள்ளது. பல பாலியல் தொல்லை சம்பவங்களில், முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யப்படுவதில்லை. குறிப்பாக, திமுக நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றச்சம்பவங்களில், பேச்சுவார்த்தை மூலம் சரி கட்டும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசின் இத்தகைய சர்வாதிகாரப் போக்கிற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2026-ல் அதிமுக அரசு பதவியேற்றவுடன், அண்ணா பல்கலைக் கழக நிகழ்வில், 'யார் அந்த சார்' - குற்றத்தில் சம்பந்தப்பட்ட பிற 'சார்'கள் விவரம் கண்டிப்பாக வெளிக் கொண்டுவரப்பட்டு, உண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத் தரப்படும். அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு, மீண்டும் முழுமையாக விசாரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு நீதி வழங்கப்படும்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணுக்கு உரிய நீதி கிடைத்திடவும்; பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைத்திடவும்; தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் திராணியற்று வேடிக்கை பார்த்து வரும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், அதிமுக தஞ்சாவூர் மாநகரத்தின் சார்பில், மே.23ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி அளவில், தஞ்சாவூர் புதிய தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார் தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளர்களான சு.காந்தி, துரை.செந்தில், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பாரதி மோகன், தஞ்சாவூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ரெத்தினசாமி, தஞ்சாவூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் சேகர், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சேகர், தஞ்சாவூர் மாநகரக் கழகச் செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளும், மாநகராட்சி, நகர, பேரூராட்சி மன்றங்களின் இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்களும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நிர்வாகத் திறனற்ற திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.