அதிர்ச்சி... சாய ஆலை கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு!
Dinamaalai May 21, 2025 02:48 AM

திருப்பூர் மாவட்டத்தில் சாய ஆலை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்துக் கொண்டிருந்த போது விஷவாயு தாக்கியதில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விஷவாயு தாக்கி பாதிக்கப்பட்ட 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பூர் அருகே கரைப்புதூரில் சாயப்பட்டறை உள்ளது. இதன் உரிமையாளர் நவீன். இங்கு சுமார் 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். சுமார் 7 அடி ஆழமுள்ள சாயக் கழிவுநீர் தொட்டி யை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்களான சுண்டமேட்டை சேர்ந்த சரவணன் (30), வேணு கோபால் (31), ஹரி (26) மற்றும் சின்னச்சாமி (36) ஆகியோர் திங்கள் கிழமை ஈடுபட்டனர். அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில், 4 தொழிலாளர்களும் மயக்கம் அடைந்தனர்.

இதையடுத்து அங்கிருந்த தொழிலாளர்கள் அவர்களை மீட்டு, திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பரிசோதித்தபோது சரவணன், வேணு கோபால் ஆகியோர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. ஹரி (26), சின்னச்சாமி (36) ஆகிய 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டனர். இதையடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ் ஆகியோர் நேரில் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து உரிய விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, இறந்தவர்களின் சடலங்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப் பட்டன. இந்த விபத்து தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.