தேர்தலில் திமுக அரசிற்கு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள் ... சீமான் காட்டம்!
Dinamaalai May 21, 2025 05:48 PM

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசுக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், குற்றவாளிகள் மீது இதுவரை எவ்வித கைது நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவியை அரக்கோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க இளைஞர் அணி துணை அமைப்பாளர் தெய்வச்செயல், திருமணம் என்ற பெயரில் ஏமாற்றி பாலியல் துன்புறுத்தல் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின.  இதேபோன்று  20 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி தவறாக பயன்படுத்தி  வருகிறார் என்ற செய்தியும் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. திமுக இளைஞரணி அமைப்பாளர் தெய்வச்செயலின் மோசடிச்செயல் குறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி   புகார் அளித்தும், தமிழ்நாடு காவல்துறை தொடர்புடைய குற்றவாளிகள் மீது  இதுவரை  எவ்வித நடவடிக்கையும்  எடுக்காதது ஏன்?  குறைந்தபட்சம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கைக்கூட பதிய மறுப்பது ஏன்?


 
பாதிக்கப்பட்ட பெண்  காவல்துறையிடம் அளித்த ஆதாரங்களில் உள்ள தகவல்கள் திமுக தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளரின் கைகளுக்கு சென்றது எப்படி? குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, துணிச்சலுடன் புகாரளித்த பெண்ணை  மிரட்டுவதும், அவரையே குற்றவாளிபோல நடத்துவதும் அப்பட்டமான எதேச்சதிகாரப்போக்காகும். யாரை காப்பாற்ற, யாருடைய உத்தரவின்பேரில் காவல்துறை இப்படி ஒருதலைபட்சமாக செயல்படுகிறது?  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஐந்து ஆண்டுகால தாமதத்திற்குப் பிறகு,   குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தண்டனைக்கு தாங்கள்தான் காரணம் என்று பெருமை பேசிய திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள், அரக்கோணம் மாணவி அளித்துள்ள பாலியல் புகார் குறித்து வாய் திறவாமல் அமைதி காப்பது ஏன்?

 
அண்ணா பல்கலை மாணவி முதல் அரக்கோணம் கல்லூரி மாணவி வரை இளம்பெண்களைக் குறிவைத்து, ஆட்சி அதிகாரத்தில் உள்ள திமிரில் திமுக நிர்வாகிகள் தொடர்ச்சியாக பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதும், காவல்துறையும், அரசதிகாரமும் அவர்களைக் காப்பாற்ற துணைபோவதும் வெட்கக்கேடானது.  சொந்த கட்சிகாரர்கள் என்பதால் இதுபோன்ற கொடுங்குற்றவாளிகளைக் காப்பாற்றி இன்னும் எத்தனை பெண்களின் வாழ்க்கையை திமுக அரசு சீரழிக்கப்போகிறது? இதற்கு பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் திமுக கட்டிக்காக்கும் பாலியல் சமத்துவமா? பெற்றுதந்த பெண்விடுதலையா? என்ற கேள்விகள் எழுகிறது. ஆகவே, திமுக இளைஞரணி அமைப்பாளர் தெய்வச்செயல் மீது, அரக்கோணம் கல்லூரி மாணவி அளித்துள்ள புகார் குறித்து எவ்வித அரசியல் குறுக்கீடோ, அதிகார அழுத்தத்திற்கோ இடமளிக்காது விரைந்து நீதி விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்து கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென தமிழ்நாடு காவல்துறையை வலியுறுத்துகிறேன். திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக தொடரும் இதுபோன்ற பாலியல் தாக்குதல்களை இனியேனும் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வரும் தேர்தலில் திமுக அரசிற்கு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள் எனவும் எச்சரிகை விடுக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.