வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகள் கொள்ளை... பெண் கைது!
Dinamaalai May 21, 2025 05:48 PM

 


வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 சவரன் தங்கநகைகளை கொள்ளையடித்த பெண்மணியைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. தையல்காரராக பணியாற்றி வரும் இவர் கடந்த மே 16ம் தேதி காலை 11 மணியளவில் தனது மகள் சுகந்தியையும் அழைத்துக் கொண்டு புத்துக்கோவில் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். 

அதன் பின்னர் இவரது மனைவி ராஜேஸ்வரி வீட்டை பூட்டி விட்டு பசு மாட்டை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

கோவிலுக்கு சென்று விட்டு, முனுசாமியும், அவரது மகள் சுகந்தியும் பிற்பகல் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் உட்புற தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. பின்னர் பின்பக்கம் வழியாக உள்ளே சென்று பார்த்த போது அறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்த நிலையில் பொருட்கள் எல்லாம் வீட்டினுள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்பக்க வழியாக வீட்டிற்குள் வந்த மர்ம நபர் பீரோவில் இருந்த 20 சவரான் தங்க நகைகளையும், ரூ.14,000 ரொக்கத்தையும் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. 

இந்த சம்பவம் குறித்து முனுசாமி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை அடித்த மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில், முனிசாமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கீதா என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், முனிசாமி குடும்பத்தினருடன் வெளியே சென்றிருப்பதை அறிந்த கீதா, அவரது வீட்டின் பின்பக்க கதவை இரும்பு கம்பியால் உடைத்து உள்ளே சென்று 20 சவரன் தங்கநகைகளையும், ரூ.14,000 பணத்தையும் கொள்ளையடித்தது சென்றுள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை வாணியம்பாடியில் உள்ள அடகுகடையில் அடகு வைத்து பணம் பெற்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இதனை தொடர்ந்து கீதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.