பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தனியார் மதுபான நிறுவன நிர்வாகி மேகநாதன், தொழிலதிபர் தேவக்குமார், தொழிலதிபர் ரத்தீஷ் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. 2 நாட்கள் நடந்த சோதனையின் முடிவில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல் வெளி வந்தது.
அதேபோல் டாஸ்மாக் முன்னாள் மண்டல மேலாளர் சுமன் மற்றும் டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் ஆகியோரிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதனிடையே டாஸ்மான் மேலாண் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் ரத்தீஷ் ஆகியோர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள். அதிலும் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் முன் நின்று நடத்தி கொடுத்தனர்.
இந்த நிலையில் அமலாக்கத்துறை சோதனைக்காக ரத்தீஷ் வீட்டிற்கு அதிகாரிகள் வருவதற்கு முன்பாக, அவர் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார். இரவு 10 மணி வரை ரித்தீஷ் வருகைக்காக காத்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், பின்னர் வீட்டிற்கு சீல் வைத்து அதன் சாவியை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பராக அறியப்படுபவர் ரத்தீஷ்.
அதேபோல் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனும் வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் தலைமறைவாகி உள்ள நிலையில், அமலாக்கத்துறை அவர்களின் வெளிநாடு பயணம் தொடர்பான தகவல்களை சேகரித்து வருவதாக தெரிகிறது. இதனால் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்தடுத்த முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கு அமலாக்கத்துறை தயாராகிவிட்டதாக சொல்லப்படுவதால், முக்கிய அரசியல் புள்ளிகளும் சிக்கலாம் என்று கூறப்படுகிறது.