ஏ.ஐ மூலம் வெறும் ரூ.10 லட்சத்தில் தயாரான முழு நீள சினிமா - இனி நடிகர்களே தேவையில்லையா?
BBC Tamil May 21, 2025 06:48 PM
Nutan Audio Kannada செயற்கை நுண்ணறிவின் உதவியால் உருவாக்கப்பட்ட கன்னட மொழி திரைப்படம் 'லவ் யூ'

செயற்கை நுண்ணறிவின் பயன்கள் குறித்து பல்வேறு பட்டியல்கள் போடப்பட்டாலும், வருங்காலத்தில் எந்தெந்த துறைகளில், எத்தனை பேரின் வேலைகள் இந்த தொழில்நுட்பத்தால் பறிபோகும் என்ற அச்சமே ஏ.ஐ (AI) தொடர்பான விவாதங்களின் முக்கிய அம்சமாக உள்ளது.

அப்படியிருக்க, முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவின் உதவியால் உருவாக்கப்பட்ட ஒரு கன்னட மொழி திரைப்படம் கடந்த 16ஆம் தேதி வெளியானது. 'லவ் யூ' எனப்படும் அந்த திரைப்படம், வெறும் 10 லட்சம் ரூபாயில் எடுக்கப்பட்டது. 95 நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப்படத்தில், ஏஐ இசையமைத்த 12 பாடல்களும் உள்ளன. கதாநாயகன், கதாநாயகி உள்பட அனைத்து கதாபாத்திரங்களும் ஏஐ உருவாக்கியவையே.

இந்தியத் திரைப்படங்களில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது புதிதல்ல, ஆனால் முழுக்க முழுக்க ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட ஒரு படத்திற்கு, மத்திய அரசின் தணிக்கைக் குழுவின் U/A சான்றிதழ் வழங்கப்பட்டு, அது பொதுமக்கள் பார்வைக்கு வெளியானது, சில முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

இத்தகைய ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள், திரைப்படத்துறையில் என்ன மாற்றங்களை கொண்டுவரும்? வழக்கமான திரைப்படங்களுக்கு ஈடாக, மக்கள் அதற்கு ஆதரவு அளிப்பார்களா?

முழுக்க 'ஏஐ' மூலம் உருவான திரைப்படம் Nutan Audio Kannada இந்தப் படத்தில் நடிகர்களோ அல்லது வழக்கமான திரைப்பட குழுவினரோ பணிபுரியவில்லை.

'லவ் யூ'- பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வல்லுநர் நூதன் என்பவர் உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர்களோ அல்லது வழக்கமான திரைப்பட குழுவினரோ பணிபுரியவில்லை.

அதற்கு பதிலாக, சுமார் 30 செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களைப் பயன்படுத்தி திரைப்படத்தின் காட்சிகள், கதாபாத்திரங்கள், இசை மற்றும் டிரோன் பாணி காட்சிகளை கூட உருவாக்கியுள்ளனர்.

அதாவது இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர், சண்டைப் பயிற்சி, கலை இயக்குநர் என அனைத்திற்கும் 'ஏஐ' (AI) என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. கதை, திரைக்கதை, பாடல் வரிகள் மற்றும் இறுதி எடிட்டிங் மட்டுமே மனிதர்களால் கையாளப்பட்டது. ஆறு மாதங்களில் 10 லட்சம் ரூபாய் என்ற பட்ஜெட்டில் இந்தப் படம் எடுக்கப்பட்டது.

கடந்த மே 16-ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படத்தின் கதை என்பது, "நூதன் எனும் பாடகர் மணாலிக்கு சுற்றுலா செல்லும்போது, அஷ்வினி எனும் பாடகியைச் சந்திக்கிறார். இருவரும் காதலிக்கிறார்கள், அதைத் தொடர்ந்து அவர்கள் சந்திக்கும் சிக்கல்களும் போராட்டங்களும் தான்" என டைம்ஸ் ஆப் இந்தியா விமர்சனம் தெரிவிக்கிறது.

இந்த ஏஐ திரைப்படத்தில் உள்ள குறைகளையும் அந்த விமர்சனம் குறிப்பிடுகிறது. "தொழில்நுட்ப வரம்புகள் காரணமாக, குறிப்பாக 'லிப் சிங்க்' போன்ற பிரச்னைகளால் வசனங்கள் குறைவாகவே உள்ளன. திரைப்படத்தின் பெரும்பகுதி பாடல்களைச் சார்ந்துள்ளது."

காட்சிகள் யதார்த்தமாகவும் இல்லை, அனிமேஷன் படங்களில் வருவது போலவும் இல்லை என்றும் டைம்ஸ் ஆப் இந்தியா விமர்சனம் கூறுகிறது. 'ஏஐ' மூலம் திரைப்படங்களை உருவாக்கும் போது, நல்ல கதையும் சிறந்த தொழில்நுட்பமும் அவசியம் என அந்த விமர்சனம் கூறுகிறது.

'லவ் யூ' திரைப்படத்தைத் தொடர்ந்து, இன்னும் பத்துக்கும் மேற்பட்ட ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் அடுத்த ஒரு வருடத்திற்குள் வெளியாகும் எனக் கூறுகிறார் முவோனியம் ஏஐ ஸ்டுடியோஸின் தலைமைச் செயல் அதிகாரியான செந்தில் நாயகம்.

இவரது முவோனியம் ஏஐ ஸ்டுடியோஸ், திரைப்படங்களுக்கான ஏஐ தொடர்பான சேவைகளை வழங்கிவருகிறது.

"என்னிடம் ஒரு நல்ல கதை, திரைக்கதை இருக்கிறது என்றால், நான் ஒரு தயாரிப்பாளருக்காகவோ அல்லது நடிகர், நடிகர்களுக்காக காத்திருக்க தேவையில்லை. இந்த ஏஐ தொழில்நுட்பம் மூலம் குறைந்த செலவில் ஒரு முழு படத்தை எடுத்துவிடலாம் எனும்போது இது நிச்சயம் உதவியாக இருக்கும்" என்கிறார் செந்தில் நாயகம்.

தொடர்ந்து பேசிய அவர், "இனி வரும் எல்லா திரைப்படங்களிலும் ஏஐ தொழில்நுட்பத்தின் பங்கு இருக்கும். அது எந்த அளவில் என்பது தான் விஷயம். வருங்காலத்தில், 100 சதவீதம் ஏஐ மூலம் உருவாகும் படங்கள் என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிடும். ஒரு வரி கதையைக் கொடுத்தால், ஏஐ திரைக்கதை எழுதிக் கொடுத்துவிடும் எனும்போது அனைத்தும் சாத்தியம்" என்கிறார்.

செயற்கை நுண்ணறிவு எழுதும் கதை- திரைக்கதைகள் Deepa/Instagram எழுத்தாளர் தீபா

"கதை-திரைக்கதை என்பது தனிமனித அனுபவங்களில் அல்லது எண்ணங்களில் இருந்து உருவாகும் போது தான் அதில் ஒரு தனித்தன்மை இருக்கும். ஏஐ சொல்லும் கதை-திரைக்கதைகள் எல்லாம் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே இருக்கும், அது மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்திவிடும்" என்கிறார் எழுத்தாளர் ஜா.தீபா. இவர் சினிமா குறித்து 'ஒளி வித்தகர்கள்', 'கதை டூ திரைக்கதை' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

இது தொடர்பாக ஒரு உதாரணம் கூறும் அவர், "சில நாட்களுக்கு முன்பாக ஒரு காட்சி ஊடகவியல் (VisCom) கல்லூரிக்கு சிறப்பு வகுப்புகளுக்காக சென்றிருந்தேன். அங்கிருந்த மாணவர்களிடம், ஒரு வரி கதையைக் கொடுத்து, ஒரு முழு கதையாக மாற்றச் சொன்னேன். அரை நாள் நேரமும் கொடுத்திருந்தேன்.

மாலை, அவர்கள் கொடுத்த கதைகளைப் பார்த்தபோது ஏறக்குறைய 10க்கும் மேற்பட்ட கதைகள் ஒரே நபர் எழுதியது போன்று நிறைய ஒற்றுமைகள் இருந்தன. விசாரித்தபோது, மாணவர்கள் பலர் 'சாட்ஜிபிடி'-யிடம் அந்த ஒருவரிக் கதையைக் கொடுத்து, அதை முழு கதையாக மாற்றச் சொல்லியிருக்கிறார்கள் என்பது தெரிந்தது" என்கிறார்.

திரைப்படங்களின் ஒருவரிக் கதைகள் பலவும் நமக்கு பரிட்சயமானவை தான், ஆனால் அதை திரைக்கதையாக மாற்றுவதில் தான் ஒருவரின் தனித்தன்மை வெளிப்படுகிறது, அதுவே மக்களையும் கவர்கிறது. அதை ஏ.ஐ மூலம் ஈடுசெய்ய முடியாது என்கிறார் ஜா.தீபா.

Getty Images ஸ்டுடியோக்களுக்கும் எழுத்தாளர் சங்கத்திற்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, ஸ்கிரிப்ட்களை எழுதவோ அல்லது திருத்தவோ ஏ.ஐ பயன்படுத்தக்கூடாது என முடிவுசெய்யப்பட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டில், அமெரிக்க எழுத்தாளர் சங்கத்தால் (WGA) பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ஹாலிவுட் திரைப்படத்துறை எழுத்தாளர்கள் பலரு ஒன்று திரண்டு, 148 நாட்கள் நீடித்த ஒரு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது போராட்டத்திற்கு முக்கிய காரணம், திரைப்படம்/தொலைக்காட்சி துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு ஆகும்.

ஏ.ஐ மூலம் ஸ்கிரிப்ட்களை எழுதுவது அல்லது திருத்துவது, ஒரு கதையை ஏ.ஐ மூலம் தயார் செய்துவிட்டு பிறகு அதை மெருகேற்ற மட்டும் ஒரு எழுத்தாளரை அழைப்பது, எழுத்தாளர்களின் அனுமதி பெறாமல் அல்லது நஷ்டஈடு வழங்காமல் அவர்களது படைப்புகளைக் கொண்டு 'ஏ.ஐ'-க்கு பயிற்சி அளிப்பது போன்ற செயல்களில் திரைப்பட ஸ்டுடியோக்களும், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களும் ஈடுபடக் கூடாது என்பதே அந்த போராட்டத்தின் பிரதான கோரிக்கையாக இருந்தது.

அதைத் தொடர்ந்து ஸ்டுடியோக்களுக்கும் எழுத்தாளர் சங்கத்திற்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி,

  • ஸ்கிரிப்ட்களை எழுதவோ அல்லது திருத்தவோ செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தக் கூடாது.
  • ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை மூலப் பொருளாகப் பயன்படுத்த முடியாது.
  • எழுத்தாளர்கள் விரும்பினால் ஏ.ஐ உதவியை நாடலாம், ஆனால் ஸ்டுடியோக்கள் அதை கட்டாயப்படுத்த முடியாது.
  • எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்ட உள்ளடக்கத்தில் ஏ.ஐ பயன்படுத்தப்பட்டதா என்பதை ஸ்டுடியோக்கள் முறையாக தெரிவிக்க வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஏ.ஐ திரைப்படங்கள் மக்களை கவருமா? RAVIKUMAR / INSTAGRAM ஏ.ஐ திரைப்படங்கள் மக்களை பெரிதும் கவராது என்கிறார் தமிழ் திரைப்பட இயக்குநர் ஆர். ரவிக்குமார்.

"ஏ.ஐ மனிதர்களின் படைப்புத் திறனுக்கு ஒரு மாற்றாகவே முடியாது. பார்க்காத விஷயத்தை அல்லது தெரிந்த விஷயத்தை புதிய கோணத்தில் பார்ப்பதையே மக்கள் விரும்புவார்கள். ஏ.ஐ தொழில்நுட்பமோ ஏற்கனவே இருப்பவற்றின் அடிப்படையில் தான் காட்சிகளை உருவாக்கப்போகிறது. இதனால், அது மக்களை பெரிதும் கவராது" என்கிறார் தமிழ் திரைப்பட இயக்குநர் ஆர். ரவிக்குமார்.

இன்று நேற்று நாளை, அயலான ஆகிய திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.

முழுக்க முழுக்க ஏ,ஐ மூலம் உருவாக்கப்பட்ட திரைப்படத்தை முதல்முறை பார்க்கும்போது ஒரு ஆச்சரியம் இருக்குமே தவிர அது வழக்கமான சினிமாவுக்கு நிச்சயம் மாற்றாக இருக்காது என்று கூறும் அவர், "இது ஒரு தொழில்நுட்பத்தை தேவையான அளவு பயன்படுத்தலாம். இன்று எல்லோர் கைகளிலும் நல்ல கேமரா கொண்ட கைப்பேசிகள் உள்ளன, ஆனால் எல்லோரும் ஒரு நல்ல புகைப்படக் கலைஞரை போல படமெடுக்க முடியாது அல்லவா. அதேசமயம், ஏ.ஐ. தரும் சில பயன்களையும் புறக்கணிக்க முடியாது. எனவே ஏஐ என்பது ஒரு திரைப்பட இயக்குநருக்கு/கலைஞருக்கு உதவும் ஒரு கருவியாக மட்டுமே இருக்க முடியுமே தவிர, மாற்றாக அல்ல" என்கிறார்.

ஆனால், முழு திரைப்படத்தையும் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுப்பதில் ஒரு மிகப்பெரிய நன்மை இருப்பதாகக் குறிப்பிடுகிறார் முவோனியம் ஏஐ ஸ்டுடியோஸ் தலைமைச் செயல் அதிகாரி செந்தில் நாயகம்.

"கங்குவா போன்ற மிகப்பெரிய பட்ஜெட் படங்களை, முதலில் ஏஐ மூலம் உருவாக்கி, குறிப்பிட்ட சில பார்வையாளர்களுக்கு மட்டும் காண்பித்து அதன் பின் வழக்கமான முறையில் படமாக்கும் போது ஒரு 'மினிமம் கியாரண்டி' கிடைக்கும்" என்கிறார் அவர்.

"ஒரு முழு ஏ.ஐ திரைப்படம் தயாரிக்க 10-15 லட்சம் தான் எனும் போது ஏன் இதை முயற்சி செய்து பார்க்கக்கூடாது. பல அனிமேஷன் தொடர்கள், திரைப்படங்கள் அப்படி உருவாக்கப்பட்டுள்ளன. எல்லா தொழில்நுட்பத்திலும் இரண்டு பக்கங்கள் உண்டு, செயற்கை நுண்ணறிவும் அப்படித்தான்" என்கிறார் செந்தில் நாயகம்.

யாருக்கு பாதிப்பு? sy_gowthamraj திரைப்பட இயக்குனர் கௌதம்ராஜ்

"இந்தியாவில் அனிமேஷன் திரைப்படங்களுக்கு பெரிய சந்தை இல்லை. ஏ.ஐ தொழில்நுட்பத்தால் இப்போதைக்கு அனிமேஷன் திரைப்படங்களில் பணிபுரிகிறவர்களுக்கு தான் ஆபத்து" என்கிறார் திரைப்பட இயக்குநர் கௌதம்ராஜ்.

ராட்சசி, கழுவேத்தி மூர்க்கன் ஆகிய திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.

" நிஜ மனிதர்களை, தத்ரூபமாக உருவாக்கி அதை திரையில் உலாவ விடும் திறன், அதாவது இப்போது நாம் பார்க்கும் திரைப்படங்கள் போலவே கொண்டுவரும் திறன் ஏ.ஐ-க்கு என்று வருகிறதோ, அன்று தான் உண்மையான ஆபத்து" என்கிறார் கௌதம்ராஜ்.

அப்படி ஒரு நிலை ஏற்படுவதன் மூலம், நடிகர்கள் பலரும் வேலை இழப்பது மட்டுமல்லாது 'நாயக பிம்பங்கள்' சரிந்து, கதாபாத்திரங்கள் மட்டுமே மக்கள் மனதில் நிற்கும் என்று குறிப்பிடுகிறார் கௌதம்ராஜ்.

"பேட் மேன், சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போன்ற காமிக்ஸ்- அனிமேஷன் கதாபாத்திரங்களே, அதில் நடித்த நடிகர்களை விட மனதில் இன்றும் நிற்கிறது. ஒருவேளை ஏ.ஐ. அதீத வளர்ச்சி அடைந்தால், வழக்கமான திரைப்படங்களிலும் அது நடக்கும்" என்று கூறுகிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.