பகல்காம் பயங்கரவாதிகள் எங்கே? இதுவரை ஏன் பிடிக்கவில்லை? ஒரு மாதமாகியும் பிடிக்காதது ஏன்?: ஜெயராம் ரமேஷ்!
Top Tamil News May 22, 2025 01:48 PM

பகல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த மாதம் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடைபெற்று ஒரு மாதமாகும் நிலையில், பயங்கரவாதிகள் கைது செய்யாதது குறித்தும், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் கூட்டாதது குறித்தும் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளை ஜெய்ராம் ரமேஷ் எழுப்பியுள்ளார்.
அவர் பேசியதாவது:-

வெளிநாடுகளுக்கு எம்பிக்களை அனுப்பி ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக எடுத்துரைக்கும் நிகழ்வானது, பிரச்னைகளை திசைதிருப்பும் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தி.

பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள், சீனா மற்றும் பாகிஸ்தான் பற்றிய உண்மையான பிரச்னைகளை நாங்கள் எழுப்பி வருகிறோம். நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டாதது ஏன்?

பகல்காம் தாக்குதல் நடந்தது முதல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தக் கோரினோம். ஆனால், பிரதமரின் பங்கேற்பில்லாமல் இரண்டு கூட்டங்கள் மட்டுமே நடந்துள்ளது. அரசியல் ரீதியில் எழும் பிரச்னைகள் தொடர்பாக விவாதிக்க கார்கேவும் ராகுலும் தொடர்ந்து மோடிக்கு கடிதம் எழுதி வருகின்றனர்.

இதனிடையே சீன விவகாரம் தொடர்பாக பிரச்னை எழுப்பியபோது, சாதிவாரி கணக்கெடுப்பை அறிவித்து திசைதிருப்பினார்கள். அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும், நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்திற்கும் நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அனைத்து அரசியல் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழுவை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அரசு அறிவித்தது” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, பாகிஸ்தானுக்கு ராகுல் காந்தி ஆக்ஸிஜன் அளிப்பதாக பாஜக எம்பி சம்பித் பத்ராவின் விமர்சனத்துக்கு பதிலளித்த ரமேஷ் ஜெய்ராம், ”பகல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைப் பிடித்தாக வேண்டும். பாகிஸ்தானுக்கு சீனா ஆக்ஸிஜன் வழங்குகிறது. சீனாவின் உதவி இல்லாமல் பாகிஸ்தானால் தாக்குதல் நடத்தியிருக்க முடியாது.

ஜின்னாவை புகழ்ந்தது ஜஸ்வந்த சிங், லாகூர் பேருந்து யாத்திரையில் பங்கேற்றது வாஜ்பாயி, நவாஸ் ஷெரீஃபுடன் உணவு அருந்தியது மோடி. தாக்குதல் நடந்து ஒரு மாதம் ஆகிறது. பகல்காம் பயங்கரவாதிகள் எங்கே? இதுவரை ஏன் பிடிக்கவில்லை? எனத் தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.