ஆந்திர மாநிலம் கூடூா் பகுதியில் வசித்து வரும் தம்பதி பிரகாஷ் ஏனாதி -அங்கம்மாள் . இவர்களது 9 வயது மகன் வெங்கடேஷ் . இத்தம்பதி, ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியைச் சோ்ந்த முத்து - தனபாக்கியம் தம்பதியிடம் ரூ.15000 கடனாக பெற்றிருந்தனர். இவர்களால் இந்த கடனையோ அதற்கு வட்டியோ கூட கட்டமுடியவில்லை.
இந்நிலையில் வெங்கடேஷை அவரது பெற்றோா், முத்து- தனபாக்கியம் தம்பதியிடம் கடனைத் திருப்பிச் செலுத்தும் வரை வாத்துகள் மேய்க்க வைத்துக் கொள்ளும்படியும், கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகு மகனை திரும்ப அழைத்துக் கொள்வதாகவும் கூறி, குத்தகைக்கு விட்டுச் சென்று விட்டனர்.
முத்து - தனபாக்கியம் தம்பதியும், வெங்கடேஷும் காஞ்சிபுரம் அருகே வெண்பாக்கம் பகுதியில் வாத்து மேய்த்துக் கொண்டிருந்தனா். தொடா்ந்து 10 மாதங்களாக வெங்கடேஷ் வாத்து மேய்த்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென அவருக்கு உடல் நலம் சரியில்லை. உடனடியாக வெண்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின. அதே நேரத்தில் சிறுவனின் உயிரிழப்பை அவரது பெற்றோருக்குத் தெரிவிக்காமல் இருந்துள்ளனா்.
இந்நிலையில், சிறுவனின் பெற்றோா், கடன் ரூ.15 ஆயிரத்தைத் திருப்பிச் செலுத்தி மகனை மீட்க வந்த போது, மகனைப் பற்றிய விவரங்களை கூறினர். சிறுவனின் பெற்றோர் கதறி துடித்தனர். அத்துடன் சிறுவனின் தந்தை பிரகாஷ், ஆந்திர மாநிலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சிறுவன் மஞ்சள் காமாலை நோயால் இறந்து விட்டதால், காஞ்சிபுரம் அருகே பாலாற்றில் புதைத்து விட்டோம் எனத் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, ஆந்திர போலீசா காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினரின் உதவியுடன் காஞ்சிபுரம் பாலாற்றில் சிறுவன் புதைக்கப்பட்ட இடத்தில் சடலத்தைத் தோண்டி எடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.சிறுவனின் உயிரிழப்பை பெற்றோருக்கு தெரிவிக்காமல் ஆற்றில் புதைத்த முத்து - தனபாக்கியம், இவா்களுடைய மகன் ராஜசேகா் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.