கர்நாடக மாநிலத்தில் உள்ள அத்திப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முரளி மோகன் (41). இவர் கடந்த ஜனவரி 25ஆம் தேதி கிருஷ்ணகிரியில் உள்ள தேனி கோட்டை சாலிகிராமத்தில் தனக்கு சொந்தமான பண்ணை வீட்டில் வேலை செய்யும் கூலி ஆட்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக கையில் ரூபாய் 5 லட்சம் பணத்தோடு காரில் வந்துள்ளார். அப்போது பண்ணையில் காரை விட்டு இறங்கி அங்குள்ள வேலையாட்களிடம் சிறிது நேரம் பேசிய பின் சம்பளம் கொடுப்பதற்காக காரில் வைத்திருந்த பணத்தை எடுக்கச் சென்றுள்ளார்.
ஆனால் காரில் பணமும் இல்லை, வண்டியை ஓட்டி வந்த ஓட்டுனர் முகமது யூசுப்பையும்(49) காணவில்லை. இதனை அடுத்து தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி தங்கதுரை தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி ஆனந்தராஜ் ஆகியோர் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் காவலர்கள் ரஞ்சித் குமார், கண்ணன் ஆகியோர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அந்த விசாரணையில், முகமது யூசுப் இதேபோன்று செல்வந்தர்களிடம் வேலைக்கு சேர்ந்து நன்மதிப்பைப் பெற்ற சில மாதங்களில் ஒரு தொகையை மொத்தமாக கொள்ளையடித்து விட்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனை அடுத்து முரளி மோகனிடம் வேலைக்கு சேர்ந்த அவர் கடந்த 4 மாதங்களாக அவரிடம் வேலை பார்த்து நன்மதிப்பை பெற்றுள்ளார்.
அதன் பின் தகுந்த சமயம் பார்த்து ரூபாய் 5 லட்சத்தை திருடி கொண்டு மும்பைக்கு ஓட்டம் பிடித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து 3 மாதங்களாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தற்போது அவர் மைசூருவில் சரக்கு வேன் ஓட்டுவதை கண்டறிந்தனர். இதனை அடுத்து நேற்று முகமது யூசுப் கைது செய்யப்பட்டு தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டார்.
அதன் பின் அவரிடம் நடத்திய விசாரணையில் முகவரி, செல்போன் எண்கள், போட்டோ அடையாளத்தை மாற்றி 10க்கும் மேற்பட்ட ஆதார் கார்டு மற்றும் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவர் இதுபோன்ற செல்வந்தர்களிடம் வேலைக்கு சேர்ந்து அவர்களது நம்பிக்கையை பெற்று தக்க சமயத்தில் பணத்தை திருடி மும்பைக்கு சென்று அங்குள்ள அழகிகளுடன் உல்லாசமான வாழ்க்கையை வாழ்வதை வாடிக்கையாக வைத்துள்ளது தெரியவந்தது.
அதன் பின் பணம் முழுவதும் செலவானதும் மீண்டும் புதிய ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம் மூலம் வேறு பகுதியில் உள்ள செல்வந்தர்களிடம் வேலைக்கு சென்றுள்ளார். இவர் மீது ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
தற்போது முரளி மோகன் அளித்த புகாரின் பேரில் முகம்மது யூசுப் மாட்டிக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து தனிப்படை அமைத்து குற்றவாளியை மும்பை வரை சென்று கண்டுபிடித்த தனிப்படை காவல்துறையினருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.