2025-ம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸின் கேன்ஸ் நகரில் மே 13 ம் தேதி தொடங்கியுள்ளது. தொடர்ந்து 11 நாள்கள் நடைபெறும் இந்த விழா மே 24 ம் தேதியன்று நிறைவடையவுள்ளது.
உலகின் சிறந்த திரைப்பட விழாக்களில் முதன்மையானதாகக் கருதப்படும் கேன்ஸ் விழாவில் பங்கேற்க உலகம் முழுவதுமிருந்து சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் கலந்துகொண்டனர். அந்த வகையில் இந்தியாவிலிருந்து பல பிரபலங்கள் விழாவில் கலந்துகொண்டாலும் ஒவ்வொரு ஆண்டும் நடிகை ஐஸ்வர்யா ராய் தவறாமல் கலந்து கொள்கிறார்.
ஐஸ்வர்யா ராய் 2023 முதல் உலகஅளவில் பிரபலமான அழகு சாதன பிராண்டான L'Oréal Paris-ன் விளம்பரத் தூதராக இருந்து வருகிறார். இந்நிறுவனம் கேன்ஸ் திரைப்பட விழாவின் அதிகாரப்பூர்வ ஒப்பனை கூட்டாளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. L'Oréal Paris சார்பாக சிவப்பு கம்பள அணிவகுப்பில் (Red Carpet) கலந்து கொள்வது அவரது பொறுப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியப் பண்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் விஷயங்களுக்காகவும் ஐஸ்வர்யா ஒவ்வொரு ஆண்டும் கலந்துகொள்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் விதவிதமான ஆடைகளில் தோற்றமளிக்கும் ஐஸ்வர்யா ராய், இந்த முறை பனாரஸ் புடவையில் நெற்றியில் குங்கும (சிந்தூர்) திலகமிட்டபடி சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தார். ஐஸ்வர்யா ராய் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் பலியானதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை நடத்தியது. அதைக் குறிப்பிடும் வகையிலேயே, ஐஸ்வர்யா இந்தத் தோற்றத்தில் வந்திருப்பார் என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.