IPL 2025: 'தேறிய' அந்த நான்கு அணிகள்!
Dhinasari Tamil May 23, 2025 04:48 PM

%name%

ஐ.பி.எல் 2025 – லக்னோ vs குஜராத்
அகமதாபாத் – 22.05.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி (235/2, மிட்சல் மார்ஷ் 117, நிக்கோலஸ் பூரன் ஆட்டமிழக்காமல் 56, எஉடன் மர்க்ரம் 36, ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 16, அர்ஷத் கான், சாய் கிஷோர் தலா ஒரு விக்கட்), குஜராத் டைடன்ஸ் அணியை (202/9, ஷாருக் கான் 57, ரூதர்ஃபோர்ட் 38, ஷுப்மன் கில் 35, ஜாஸ் பட்லர் 33, சாய் சுதர்ஷன் 21, வில் ஓ ரூர்கே 3/27, ஆவேஷ் கான் 2/51, ஆயுஷ் பதோனி 2/4, ஆகாஷ் சிங், ஷாபாஸ் அகமது தலா ஒரு விக்கட்) 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற குஜராத் டைடன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் எய்டன் மர்க்ரம் (24பந்துகளில் 36 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) 10 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்கவீரரான மிட்சல் மார்ஷ் (64 பந்துகளில் 117 ரன், 10 ஃபோர், 8 சிக்சர்), நிக்கோலச் பூரன் (27 பந்துகளில் 56 ரன், 4 ஃபோர், 5 சிக்சர்) மற்றும் ரிஷப் பந்த் (6 பந்துகளில் 16 ரன், 2 சிக்சர்) உடன் இணைந்து வெகுவேகமாக அணியின் ஸ்கோரை 20 ஓவருக்கு 2 விக்கட் இழப்பிற்கு 235 ரன் என்ற நிலைக்குக் கொண்டுவந்தார். குஜராத் அணியின் பந்துவீச்சாளர்கள் மார்ஷ் மற்றும் பூரன் இருவரின் அதிரடி ஆட்டத்தால் நிலைகுலைந்து போனார்கள்.

236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணியின் முதல் ஐந்து மட்டையாளர்கள் சிறப்பாக ஆடினார்கள். சாய் சுதர்ஷன் (16 பந்துகளில் 21 ரன், 4 ஃபோர்) மற்றும் ஷுப்மன் கில் (20 பந்துகளில் 35 ரன், 7 ஃபோர்) ஆகிய இருவரும் சுமாரான தொடக்கம் தந்தனர்.

பின்னர் வந்த ஜாஸ் பட்லர் (18 பந்துகளில் 33 ரன், 3 ஃபோர், 2சிக்சர்), ரூதர்ஃபோர்ட் (22 பந்துகளில் 38 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்), ஷாருக் கான் (29 பந்துகளில் 57 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) ஆகியோர் வேகமாக ரன் சேர்க்க முயன்றனர். நீண்ட நாள்களுக்குப் பிறகு இன்று தமிழக வீரர், ஷாருக் கான் ரன் அடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவர் கடைசி வரை இருந்து வெற்றிக்கு வழிவகுக்காமல் 18.5 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

ஆனால் அதற்கு முன்னரே ராகுல் திவாத்தியா (2 ரன்), அர்ஷத் கான் (1 ரன்) ஆகியோர் ஆட்டமிழந்து விட்டதால் குஜராத் அணியின் தோல்வி உறுதியாகிவிட்டது. இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.

லக்னோ அணியின் மிட்சல் மார்ஷ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியால் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் தனது முதலிடத்தை இழக்கவில்லை. இருந்தாலும் இது ஒரு பின்னடைவு.

ஏற்கெனவே நேற்றைய மும்பை-டெல்லி போட்டியின் முடிவில் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் நான்கு அணிகள் முடிவாகிவிட்டன. அவை குஜராத், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகளாகும்.

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.