தமிழகத்தில் 50க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவும் வரை காத்திருக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக முடுக்கிவிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் உருவெடுத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் 50க்கும் அதிகமானவர்களுக்கு அத்தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் குறைந்தது தான் என்றாலும் கடந்த காலங்களில், அவற்றால் இழந்த உயிரிழப்புகளையும், ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு உரிய பரிசோதனைகளை மேற்கொள்வதுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான தனி வார்டுகளை அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்படுத்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி மாவட்ட தலைமை மருத்துவமனை வரை நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சுகாதாரத்துறையை வலியுறுத்தும் அதே நேரத்தில் பொதுமக்களும் கொரோனா தொற்று தடுப்பு குறித்து அரசின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.