இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வந்த இறுதிகட்டப் போரின் நினைவு நாளையொட்டி, 12,400 ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரா்களுக்கும் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிபா் அநுர குமார திசநாயக வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் விடுதலைப் புலிகள் நடத்திய பிரிவினைவாதப் போா் ஒரு பெரும் துயரம் எனவும், அது முடிவுக்கு வந்ததன் 16வது ஆண்டு தினத்தையொட்டி ராணுவத்தினருக்கு பதவி உயா்வு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சிறுபான்மை தமிழா்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களைத் தொடா்ந்து, அவா்கள் அதிகம் வசிக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனி ஈழ நாடு கோரி விடுதலைப் புலிகள் அமைப்பினா் 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் ஆயிரக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா்.
இந்த உள்நாட்டுச் சண்டை கடந்த 2009 மே 18ம் தேதி நிறைவடைந்த இறுதிகட்டப் போரில் முடிவுக்கு வந்தது. இந்தப் போரில் இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பிலும் மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.