நீதிபதிகள் மீது திமுக.,வினர் சாதிய வசை பாடுவது நியாயமா?
Dhinasari Tamil May 23, 2025 07:48 PM

%name%

திமுக என்ன கட்டளையிடுகிறதோ, அதை அப்படியே எல்லா நீதிமன்றங்களும் தீர்ப்பு எழுதிட வேண்டுமா? – என்று கேள்வி எழுப்பியுள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி. குறிப்பாக, நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் மீது திமுகவினர் சாதிய வசைபாடுவது எவ்விதத்தில் நியாயம்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட சமூகத் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது…

திடீர் சமூகநீதிப் பிரியர்கள் மாஞ்சோலை தீர்ப்பின் போது எங்கே சென்றார்கள்.?

அண்மையில் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்த துணைவேந்தர்களை நியமிக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் வழங்கிய சட்டப்பிரிவுக்கு தடை விதித்து நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பை தாங்கிக் கொள்ள முடியாத திமுக அடிவருடிகள் நீதிபதிகளின் புகைப்படங்களை வெளியிட்டும், அவர்களை சாதி ரீதியாகவும் வசைபாடியுள்ளனர்.

இது திமுக மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் வக்கிரப்புத்தியைக் காட்டுகிறது. இவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை அப்படியே எல்லா நீதிமன்றங்களும் தீர்ப்பு எழுதிட வேண்டும். இல்லையேல், அது பார்ப்பனிய நீதிமன்றம் ஆகிவிடும். இதற்கும் இது மக்கள் பிரச்சனை சார்ந்தது அல்ல; பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் சம்பந்தப்பட்டது.

அனைத்து பல்கலைக்கழகங்களும் மானியக் குழுவிடம் நிதி பெற்றே இயங்குகின்றன. மாநில அரசின் நிதி அளிப்பு மிகக் குறைவு. எனவே யூஜிசி மற்றும் ஆளுநர் அனுமதி இல்லாமல் துணைவேந்தர்களை நியமனம் செய்ய வழி இல்லை. ஆனால் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை அனைத்து அம்சங்கள் – சட்ட சிக்கல்களை கணக்கிலே கொள்ளாமல் ஆளுநரின் காலதாமதத்தை மட்டுமே கணக்கில் கொண்டு ஆளுநருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு கொடுத்து விட்டனர். அதுவும் தற்போது ஜனாதிபதியால் உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில்., அவசர அவசரமாக தமிழ்நாடு அரசு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சரே வேந்தர் எனவும், துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் எனவும் அரசாணை பிறப்பித்தது. இது தற்போது நடைமுறையில் துணைவேந்தர்களை நியமனம் செய்யும் சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது.

உச்ச நீதிமன்றம் சென்றால் உடனடியாக அதற்கு தடை ஆணை பெற இயலாது. அதன் ஆத்திரத்திலே திமுகவின் ரூபாய் 200 கூலிப்படை மற்றும் அதன் அடிவருடிகள் நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோரை அவர்களின் சாதிகளைக் குறிப்பிட்டு வசை பாடுகிறார்கள். திமுகவின் இந்த கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

திடீர் மனிதநேய சமூகநீதிப் பிரியர்கள் கடந்த 2024 டிசம்பர் 3 ஆம் தேதி மாஞ்சோலை மக்களின் நூறாண்டு கால வாழ்வுரிமை பறிக்கக் கூடிய வகையில் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத் சக்கரவர்த்தி தீர்ப்பு எழுதினார்களே?

அப்போது இவர்கள் எங்கே சென்றார்கள்.? – என்று கேள்வி எழுப்பியுள்ளார் டாக்டர் க. கிருஷ்ணசாமி.

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.