அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த கண்டிராதீர்த்தம் கிராமத்தில் வசித்து வருபவர் வேதியராஜ். இவரது மகள் 20 வயது லாரா . லாராவுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இருப்பினும் 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேதியராஜ் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் கடந்த 5 நாட்களாக சிகிச்சையில் உள்ள வேதியராஜை பார்ப்பதற்காக அவரது மனைவி மற்றும் மகள் லாரா இருவரும் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
இதனையடுத்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவறைக்கு லாராவும், அவரது தாயும் சென்றனர். அங்கு லாரா மட்டும் கழிவறைக்குள் சென்ற நிலையில், அவரது தாய் வெளியில் நின்றிருந்தார். கழிவறைக்கு சென்ற லாரா அங்கேயே 3 மணி நேரம் இருந்துள்ளார். அப்போது தனக்குத்தானே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பின்னர் அந்த குழந்தையை கழிவறையின் உள்ளே தலை உள்ளே செல்லுமாறு அழுத்தியுள்ளார்.
இதில் அந்த குழந்தையின் உடல் முழுவதும் உள்ளே செல்லாமல் கால்கள் மட்டும் வெளியில் நீட்டிக்கொண்டு இருந்துள்ளது. அப்போது திடீரென மருத்துவமனையில் வேலை செய்யும் பெண் துப்புரவு பணியாளர் ஒருவர் கழிவறைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு கழிவறை பேஷனில் கால்கள் மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருந்ததை பார்த்த அவர் சந்தேகம் அடைந்தார். உடனே மருத்துவமனையில் பணியில் இருந்த போலீசார் மற்றும் ஊழியர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.
இதனால் அங்கு கூட்டம் திரண்டது. கதவை திறந்து பார்த்தபோது கழிவறை கோப்பையினுள் திணித்த நிலையில், குழந்தை உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உடனடியாக அரியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கழிவறை கோப்பையை உடைத்து குழந்தையின் சடலத்தை வெளியில் எடுத்தனர்.
உடனடியாக பிரேத பரிசோதனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. லாராஅங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்தார். அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து தற்போது லாரா அரியலூர் பழைய அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து அரியலூர் நகர போலீசார், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
லாரா கர்ப்பத்திற்கு யார் காரணம்? குழந்தையை கொல்ல என்ன காரணம் என்பது உட்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனக்குத்தானே குழந்தையை பெற்றெடுத்து அதனை கழிவறை கோப்பையில் அழுத்தி பெற்ற குழந்தை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.