தமிழரின் தொன்மை கூறும் கீழடி ஆய்வறிக்கையை கேள்வி எழுப்பும் இந்திய தொல்லியல் துறை - என்ன நடக்கிறது?
BBC Tamil May 24, 2025 05:48 PM
Archaeological Survey of India கீழடி

மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் இந்தியத் தொல்லியல் துறையின் சார்பில் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை அவர் தாக்கல் செய்திருக்கும் நிலையில், சில விளக்கங்களைக் கோரி அந்த ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி என்ன?

982 பக்க அறிக்கை தாக்கல்

மதுரையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி தொல்லியல் தளத்தை 2014-ஆம் ஆண்டுவாக்கில் இந்தியத் தொல்லியல் துறையின் (ஏஎஸ்ஐ) கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் கண்டறிந்தார்.

இதற்குப் பிறகு இந்த இடத்தில் 2014-15, 2015-16 ஆகிய இரண்டு ஆண்டுகளில் அவரது தலைமையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்குப் பிறகு, இந்தியத் தொல்லியல் துறை மேலும் ஒரு முறை அகழாய்வு நடத்தியது. இதன் பின்பு மாநிலத் தொல்லியல் துறை அங்கு தொடர்ந்து அகழாய்வுகளை மேற்கொண்டுவருகிறது.

இந்தியத் தொல்லியல் துறை நடத்திய முதல் இரண்டு அகழாய்வுகளின் ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏஎஸ்ஐயிடம் சமர்ப்பித்தார். இந்த அறிக்கை 982 பக்கங்களுக்கு எழுதப்பட்டிருந்தது.

keeladimuseum.tn.gov.in கீழடி அகழாய்வுத் தளம் - வான்வழிப் பார்வை

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டாண்டுகள் கழிந்துவிட்டாலும் இந்த அறிக்கையை ஏஎஸ்ஐ வெளியிடவில்லை. தற்போது, இந்த அறிக்கை தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி, அறிக்கை அமர்நாத் ராமகிருஷ்ணனிடமே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது.

அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்ப்பித்த அறிக்கையை இரண்டு நிபுணர்களிடம் அனுப்பியதாகவும், அறிக்கையை மேலும் நம்பகத்தன்மையுள்ளதாக ஆக்க, அந்த நிபுணர்கள் சில கேள்விகளை எழுப்பியிருப்பதாகவும் ஏஎஸ்ஐ தெரிவித்திருக்கிறது.

இரண்டு அகழாய்வுகளிலும் கிடைத்த பொருட்களை வைத்துப் பார்க்கும்போது, அந்த இடத்தில் மூன்று பண்பாட்டு காலகட்டம் நிலவியிருக்க வேண்டும் எனக் கருதுவதாக அமர்நாத் ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியிருந்தார். இதில் முதலாவது காலகட்டம் கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும் என்றும் இரண்டாவது காலகட்டம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. முதலாம் நூற்றாண்டின் முடிவு வரை இருந்திருக்கலாம் என்றும் மூன்றாவது காலகட்டம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டின் முடிவிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டையும் தாண்டிச் செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதன் அடிப்படையில் சில கேள்விகள் ஏஎஸ்ஐயால் எழுப்பப்பட்டுள்ளன.

keeladimuseum.tn.gov.in இரண்டு அகழாய்வுகளிலும் கிடைத்த பொருட்களின் அடிப்படையில் மூன்று பண்பாட்டு காலகட்டம் அங்கே நிலவியிருக்க வேண்டும் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையில் கூறியிருந்தார் ஏஎஸ்ஐயால் எழுப்பப்பட்ட கேள்விகள்

1. கீழடியில் நிலவியதாகச் சொல்லப்படும் மூன்று காலகட்டங்களுக்கும் சரியான பெயர்களை (nomenclature) வழங்க வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது.

2. முதலாவது காலகட்டம், கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும் என அறிக்கை கூறும் நிலையில், அதற்கு உறுதியான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மற்ற இரண்டு காலகட்டங்களையும் ஏஎம்எஸ் காலக் கணிப்பு முறைப்படி (Accelerator Mass Spectrometry) உறுதிசெய்ய வேண்டும். முதல் காலகட்டத்திற்கு தற்போது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலக் கணிப்பு மிகக் கூடுதலாகத் தெரிவதாகவும் அதிகபட்சமாக இந்தக் காலகட்டம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் குறிப்படப்பட்டுள்ளது.

3. அறிவியல்ரீதியாக கிடைத்த தேதிகளுக்கு ஆழத்தைக் குறிப்பிடுவது மட்டும் போதுமானதல்ல. பண்பாட்டு அடுக்குகளின் எண்களையும் தரவேண்டும். அப்போதுதான் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.

4. அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள வரைபடங்களுக்குப் பதிலாக மேம்பட்ட வரைபடங்களை வழங்க வேண்டும். கிராமத்தின் வரைபடம் தெளிவில்லாமல் உள்ளது. ஏற்ற இறக்கங்களைக் குறிப்பிடும் வரைபடம், பண்பாட்டு அடுக்குகளின் வரைபடம், எங்கு தோண்டப்பட்டது என்பதைக் குறிப்பிடும் வரைபடங்கள் தேவை என இந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

keeladimuseum.tn.gov.in கீழடி அகழ்வாய்வு தளம் (கோப்புப்படம்) நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம்

இந்தத் தகவல் வெளியான நிலையில், மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். "கீழடியின் உண்மைகளை அதிகாரபூர்வமாக அறிவிக்க ஒன்றிய தொல்லியல் துறை எளிதில் முன்வராது. தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரிகள் யார் என்பதை ஒன்றிய தொல்லியல் துறையின் ஒவ்வொரு செயலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது" என்று அவர் தனது குறிப்பிட்டிருக்கிறார்.

சு. வெங்கடேசன் வேறொரு குற்றச்சாட்டைச் சுமத்துகிறார். "அதாவது, கீழடி ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்பித்த பிறகு, அந்த அறிக்கை எப்போது வெளியிடப்படும் என நாடாளுமன்றத்தில் பல முறை கேள்வியெழுப்பப்பட்டிருக்கிறது. கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் கூட கேள்வி எழுப்பப்பட்டது. விரைவில் சமர்ப்பிப்போம் எனத் தெரிவித்தார்கள்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறதா என்பதை ஆராயும் நாடாளுமன்ற உறுதிக்குழுவின் கூட்டம் வரும் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஊட்டியில் நடக்கவிருக்கிறது. கீழடி அறிக்கையை தாக்கல் செய்யாதது ஏன் என அங்கு பதிலளிக்க வேண்டும் என்பதால் இப்போது கேள்வி எழுப்பியிருக்கின்றனர்," என்கிறார் சு. வெங்கடேசன்.

Su Venkatesan MP/Facebook இந்திய தொல்லியல் துறையின் நடவடிக்கைக்கு சு.வெங்கடேசன் கண்டனம் இது ஒரு வழக்கமான நடவடிக்கையா?

இது குறித்து பிபிசியிடம் பேசிய உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும் Journey of a Civilization: Indus to Vaigai நூலின் ஆசிரியருமான ஆர். பாலகிருஷ்ணன், இது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகத் தெரிவித்தார். "இந்த நடவடிக்கை மிக விசித்திரமானதாக இருக்கிறது. அறிக்கையைத் தாக்கல் செய்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இது நடக்கிறது. இந்த அறிக்கையை உருவாக்கி, பதிப்பிப்பதற்கே நீதிமன்றம் தலையிட வேண்டியிருந்தது. இது பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த அகழாய்வு. இது ஒரு தனித்த நிகழ்வல்ல. ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கைகூட 15 ஆண்டுகள் கழித்துதான் வெளியானது" என்கிறார் அவர்.

மேலும், "எந்த ஒரு நாட்டின் தேசிய வரலாறும் பிராந்திய வரலாற்றுப் போக்குகளை ஒரு அடிப்படைக் கட்டுமானமாகக் கொள்ள வேண்டும். தமிழ்ச் சமூகத்தின் தனித்துவமிக்க பண்பாட்டு ஆழத்தையும் இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் அதற்கான சரியான இடத்தையும் புறக்கணிக்க முடியாது. இது வருத்தத்தை அளிக்கிறது. அறிவியல் கருத்துகள்கூட, கேள்வியெழுப்பப்பட்டு, மதிப்பிடப்பட வேண்டியவைதான். ஆனால், ஓர் அனுபவம் மிக்க தொல்லியலாளரின் அறிக்கை பதிப்பிக்கப்படுவதற்கு முன்பாகவே இம்மாதிரியான ஒரு நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்க வேண்டியதில்லை" என்கிறார் அவர்.

ஆனால், இது ஒரு வழக்கமான நடைமுறைதான் என்கிறார் ஏஎஸ்ஐயின் முன்னாள் கண்காணிப்பாளரான தி. சத்தியமூர்த்தி. "ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகு, அந்த அறிக்கை நிபுணர்களிடம் கருத்துக்காக அனுப்பப்படும். அவர்கள் சில கேள்விகளை எழுப்புவார்கள். அதாவது, தற்போது அகழாய்வுச் செய்யப்பட்ட இடத்தில் கிடைத்த முடிவுகளை வைத்து மட்டும் பார்க்காமல், மற்ற இடங்களோடும் ஒப்பீடு செய்தும் கேள்வியெழுப்புவார்கள். இது வழக்கமான நடைமுறையே தவிர, வேறு இல்லை. எல்லாவற்றையும் தமிழ்நாட்டிற்கு எதிரானதாகப் பார்க்க வேண்டியதில்லை" என்கிறார் தி. சத்தியமூர்த்தி.

கீழடியில் ஏஎஸ்ஐ மேற்கொண்ட அகழாய்வின் ஆய்வறிக்கையை வெளியிட வேண்டுமென தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சு. வெங்கடேசன், து. ரவிக்குமார், கனிமொழி உள்ளிட்டோர் தொடர்ந்து கேள்வியெழுப்பிவந்துள்ளனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. அந்த வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பதிலளித்த ஏஎஸ்ஐ, இன்னும் 9 மாதங்களில் அறிக்கை வெளியிடப்படும் எனக் கூறியது. அப்படிக்கூறி ஒன்றேகால் ஆண்டுகளுக்குப் பிறகு அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் விரும்பவில்லை. அவர் தற்போது மத்தியத் தொல்லியல் துறையின் Antiquity பிரிவின் இயக்குநராக இருந்துவருகிறார்.

R.Balakrishnan/Facebook இந்த நடவடிக்கை மிக விசித்திரமானதாக இருக்கிறது என ஆர்.பாலகிருஷ்ணன் கருத்து அமர்நாத் ராமகிருஷ்ணன் அளித்த கீழடி அறிக்கையில் என்ன தகவல்கள் இடம்பெற்றுள்ளன?

கீழடியில் தான் மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்தார். அந்த ஆய்வறிக்கையில் பின்வரும் முக்கிய முடிவுகள் குறிப்பிடப்பட்டிருந்தன:

1. கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகளிலும் கிடைத்த பொருட்களை வைத்துப் பார்க்கும்போது, இங்கே மூன்று பண்பாட்டு காலகட்டங்கள் நிலவியிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. இதில் முதலாவது காலகட்டம் கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும். இதற்கான தரவுகள் 2 மீட்டர் ஆழத்தில் உள்ள மண் அடுக்கில் கிடைத்திருக்கின்றன. இந்த காலகட்டத்தில், கீழடியில் எளிதில் மட்கிப் போகக்கூடிய (செங்கல் அல்லாத, மரம் போன்ற) பொருட்களால் கட்டுமானங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. கீழடி இரும்புக் காலத்தில் வளரத் தொடங்கியிருக்கலாம் என்ற முடிவுக்கு வர முடியும் என்றாலும்கூட, தொடர்ந்து இந்தத் திசையில் ஆய்வுகளை நடத்த வேண்டும்.

2. கீழடியின் இரண்டாவது காலகட்டம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. முதலாம் நூற்றாண்டின் முடிவுவரை இருந்திருக்கலாம். இதுதான் கீழடி, ஒரு முதிர்ந்த வாழிடப் பகுதியாக இருந்த காலகட்டம். பெரிய மற்றும் சிறிய அளவிலான செங்கல் கட்டுமானங்கள் இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இங்கே கிடைத்த செங்கலால் ஆன மேடைகள், சிக்கலான செங்கல் கட்டுமானங்கள், இரட்டைச் சுவர்களைக் கொண்ட உலைகள் ஆகியவை இந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை. இந்த காலகட்டத்தில் கீழடி நகரப் பண்புகளைக் கொண்ட மிக முக்கியமான இடமாக இருந்திருக்க வேண்டும். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, கீழடி மதுரைக்கு அருகில் இருப்பதும், வரலாற்றுக் கால துறைமுகமான ஆலங்குளத்திற்கு செல்லும் வழியில் இருப்பதும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், மிக முக்கியமாகக் கவனிக்கத்தக்கது இங்கு கிடைத்த கட்டடத் தொகுதிகள்தான். அரிக்கமேடு, காவிரிப்பட்டனம், கொற்கை போன்ற ஒரு சில இடங்களைத் தவிர, தமிழ்நாட்டில் வேறு எங்கு இந்த காலகட்டத்தைச் சேர்ந்த கட்டடத் தொகுதிகள் கிடைத்ததில்லை. இந்தப் பின்னணியில்தான் கீழடியில் கிடைத்த கட்டடத் தொகுதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

3. கீழடியின் மூன்றாவது காலகட்டம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டின் முடிவிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டையும் தாண்டிச் செல்கிறது. இந்த இரு அகழாய்விலும் இங்கு கிடைத்த காசுகள், அதற்கு முன்பாக இங்கு கிடைத்த ராஜராஜன் காலத்து காசுகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, இந்த மூன்றாவது காலகட்டம் பத்தாம் நூற்றாண்டு வரை நீண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆகவே, கீழடியின் காலகட்டம் என்பது கி.மு. எட்டாம் நூற்றாண்டில் துவங்கி கி.பி. பத்தாம் நூற்றாண்டுவரை நீண்டிருக்கிறது.

4. கீழடியில் குதிரையின் எலும்புகள் கிடைத்திருப்பது தென்னிந்திய தொல்லியல் ஆய்வுகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சங்கப் பாடலான பட்டினப்பாலையில் குதிரை குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதன் எச்சங்கள் முதல் முறையாக கீழடியில்தான் கிடைக்கின்றன.

5. இந்திய தொல்லியல் துறை நடத்திய இரண்டு அகழாய்வுகளிலும் 88 கரிம பொருட்கள் கிடைத்தன. இவற்றில் 18 கரிமப் பொருட்கள் ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனலிடிகள் லெபோரட்டரியில் ஏஎம்எஸ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 5 கரிமப் பொருட்கள் புது டெல்லியில் உள்ள இன்டர் யுனிவர்சிடி அக்சலரேட்டர் சென்டரில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

6. இரண்டு அகழாய்வுகளிலும் சேர்த்து மொத்தமாக 2,447 பானை ஓட்டு கிறுக்கல்கள் கிடைத்துள்ளன. பல தமிழ் பிராமி எழுத்துகளும் கிடைத்துள்ளன. 'திசன்' போன்ற பிராகிருத வார்த்தைகளும் கிடைத்துள்ளன. கீழடியில் கிடைத்த பிராகிருத வார்த்தைகள் இலங்கையின் தாக்கத்தில் வந்தவை. இங்குள்ள தமிழ் பிராமி அல்லது தமிழி எழுத்து, அசோக பிராமியின் தாக்கத்தைக் கொண்டதல்ல. மாறாக இலங்கையில் கிடைத்த பிராமி எழுத்துகளோடு ஒத்துப்போகக்கூடியவை என்றது அறிக்கை.

7. வைகை நதிக் கரையில் அமைந்த ஒரு நகர நாகரீகத்தின் ஆரம்பக்கட்டத் தகவல்களை மட்டுமே இந்தத் தொல்லியல் ஆய்வு முடிவுகள் அளித்திருக்கின்றன என்றும் அந்தத் தொல்லியல் தளத்தில் மேலும் பல ஆய்வுகளைச் செய்ய வேண்டுமென்றும் அவர் கூறியிருக்கிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.