உலகம் முழுவதுமே கொடிகள் என்பவை நாடுகளாலும் சமூகங்களாலும் அமைப்புகளாலும் அடையாளத்தைக் குறிக்கும் விதமாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்படி கொடிகளை உருவாக்கிப் பயன்படுத்துவது எப்படித் துவங்கியது?
கொடிகள் எப்படி உருவாயின?கொடிகள் எப்படி உருவாயின என்பதற்கு தெளிவில்லாத வரலாறுகளே உள்ளன. ஆகவே, கொடி என்பது எதனை அர்த்தப்படுத்துகிறது, எப்படி உருவானது என்பதிலிருந்து இதனைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். ஜே.இ. சிர்லாட் தொகுத்த A DICTIONARY OF SYMBOLS என்ற 'குறியீடுகளின் அகராதி', கொடிகளின் அர்த்தத்தை விளக்குகிறது.
"வரலாற்றுப் பார்வையில், கொடி அல்லது பதாகை என்பது பண்டைய எகிப்திலும் மேலும் பல நாடுகளிலும் காணப்படும் புனித அடையாளங்களிலிருந்து (totem) உருவானது. பாரசீகர்கள் நீண்ட கம்பிகளின் மீது விரித்திருக்கும் சிறகுகளுடன் கூடிய தங்கப் பருந்துகளை தம் அடையாளமாக எடுத்துச் சென்றனர்; மீடியர்கள் (பழங்கால இரானியர்கள்) மூன்று கிரீடங்களை அடையாளமாக வைத்திருந்தனர்; பார்தியர்கள் (வரலாற்று துவக்க கால இரானியர்கள்) ஒரு வாள் முனையை தம் அடையாளமாக வைத்திருந்தனர்; கிரேக்கரும் ரோமரும்கூட தங்களுக்கான இலச்சினைகள், முத்திரைகள், பதாகைகளை வைத்திருந்தனர்." என்று அதில் கூறப்பட்டுள்ளது.
உயர்ந்த இடத்தில் உருவங்களை வைக்கும் பழக்கம்"எந்த உருவம் பயன்படுத்தப்பட்டது என்பது இதில் முக்கியமல்ல, ஆனால் அந்தச் சின்னம் எப்போதும் ஒரு தூண் அல்லது கம்பியின் உச்சியில் வைத்திருக்கப்பட்டிருந்தது என்பதுதான் முக்கியமானது. இப்படி உயர்ந்த நிலையில் ஒரு உருவத்தை வைப்பது, ஒரு வகையான அதிகார உணர்வையும், அந்த உருவம் அல்லது விலங்கின் உள்ளார்ந்த அர்த்தத்தை உயர்த்தும் நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. இதிலிருந்தே வெற்றியையும் தன்னம்பிக்கையையும் குறிக்கும் சின்னமாக பதாகை வளர்ந்தது" என்கிறது அந்த அகராதி. அ
தாவது, உருவங்களைத் தூக்கிச் செல்லும் வழக்கத்திலிருந்தே கொடிகள் உருவாகியிருக்க வேண்டும் என்கிறது இந்த அகராதி.
இதுபோல சின்னங்களை ஒரு கம்பியின் உச்சியில் பொருத்தி தூக்கிச் செல்லும் வழக்கம் பழங்கால எகிப்து, பாரசீகம், இரான் போன்ற நாடுகளில்தான் ஆரம்பத்தில் காணப்பட்டாலும், கொடிகள் முதன்முதலில் இந்தியத் துணைக் கண்டத்திலோ, சீனாவிலோதான் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்கிறது கலைக்களஞ்சியமான 'என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா'.
சீனாவில் கி.மு. பதினொன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டு வரை ஆட்சியில் இருந்த சவ் (Zhou) அரச மரபை உருவாக்கிய அரசன் வூ-வின் (King Wu) காலத்தில் கொடிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம் என்கிறது அந்த கலைக்களஞ்சியம். மன்னர் வூ வெளியில் செல்லும் போது அவருடைய பரிவாரங்களுக்கு முன்பாக வெள்ளைக் கொடியை பிடித்துச் செல்வது வழக்கமாக இருந்திருக்கிறது. அதாவது தற்போதிலிருந்து சுமார் 3,100 ஆண்டுகளுக்கு முன்பாக சீனாவில் கொடிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்தியாவிலும் கொடிகள் பயன்படுத்தப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன. "மாபெரும் காப்பியமான மகாபாரதத்தில் பல விதங்களில் கொடிகள் குறிப்பிடப்படுகின்றன. இதுபோல தம்மை அடையாளப்படுத்தும் விதத்தில் கொடிகளைப் பயன்படுத்துவது என்பது அந்த கால கட்டத்தில் துவங்கி, நவீன காலம்வரை நடைமுறையில் இருக்கிறது. எல்லா நாடுகளிலும் எல்லா பண்பாடுகளிலும் இது இருக்கிறது. இதுபோல தம்மை அடையாளப்படுத்தும் விதமாக கொடிகளைப் பயன்படுத்துவது என்பது ஒரு பழங்குடித் தன்மையின் அடிப்படையில் உருவாவது" என்கிறார் ஆய்வாளர் பொ. வேல்சாமி.
மகாபாரதத்தில் வரும் பல முக்கியப் பாத்திரங்கள் தங்கெளுக்கென தனித்த வடிவம் பொருந்திய கொடிகளைக் கொண்டிருக்கின்றன. தங்க நிற நிலா, பனை மரம், அன்னம், யானை, சங்கு என பலவிதமான கொடிகளை மகாபாரதம் குறிப்பிடுகிறது. மகாபாரதத்தைப் பொருத்தவரை சுமார் 2,400 வருடங்களுக்கு முன்பாக முழுமையடைந்ததாகக் கருதப்படுகிறது.
அதேபோல, 2,000 ஆண்டுகளுக்கு முன் தொகுக்கப்பட்ட மனுஸ்மிருதியிலும் கொடி குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. பாடல் எண் 9.285ல், "ஒரு பாலத்தையோ, கோவில் அல்லது அரண்மனையின் கொடியையோ சின்னத்தையோ சேதப்படுத்துபவன் அதனைச் சரிசெய்ய வேண்டும், 500 பணம் (pana) தர வேண்டும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழைப் பொருத்தவரை, Flag என்ற அர்த்தத்தைத் தரும் சொற்கள் பல இருந்தாலும் பழந்தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலும் 'கொடி' என்ற சொல்லே இதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இம்மொழியின் மிகப் பழமையான நூலான தொல்காப்பியத்திலேயே கொடிகளைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. "படையுங் குடையுங் கொடியும் முரசும்/ நடைநவில் புரவியுங் களிறுந்/ தேருந் தாரும் முடியும் நேர்வன பிறவுந்/ தெரிவுகொள் செங்கோல் அரசர்க்கு உரிய" என்கிறது ஒரு பாடல். அதாவது "படை, குடை, கொடி, முரசு உள்ளிட்டவை அரசருக்கு உரியது" என்கிறது இந்தப் பாடல்.
கி.பி. ஒன்றாம் நூற்றாண்டிலிருந்து 5ஆம் நூற்றாண்டிற்குள் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் சங்கப் பாடல்களின் தொகுப்பான புறநானூற்றிலும் கொடிகளைப் பற்றி குறிப்புகள் விரிவாகவே காணப்படுகின்றன. புறநானூற்றின் 362வது பாடலான "ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த" என்ற பாடலில் 'வெற்றியைக் குறிக்கும் வெண்கொடி' எனப் பொருள்படும் "விசய வெண் கொடி" என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் பாடலில் 'வெண் கொடி' எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இதே காலகட்டத்தை ஒட்டி பல நிறங்களில் கொடிகள் இருந்திருப்பதை வேறு பல இலக்கியங்களில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.
புறநானூற்றின் 38வது பாடலில் "வரைபுரையு மழகளிற்றின்மிசை" என்று துவங்கும் பாடலில் "பல நிறத்தையுடையனவாகிய கொடிகள் அசைந்து தோன்றும்" என்ற அர்த்தத்தைத் தரும் "விரவுருவின கொடிநுடங்கும்" என்ற வரிகள் இடம்பெற்றிருக்கின்றன. புறநானூற்றில் மட்டுமல்லாமல், பல மலைபடுகடாம், நெடுநல்வாடை, பரிபாடல், மணிமேகலை போன்ற பழந்தமிழ் தொகுப்புகள் அனைத்திலுமே கொடிகளைப் பற்றிய பல குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.
இதற்குப் பிறகு கி.பி. மூன்றாம் நூற்றாண்டை ஒட்டி இயற்றப்பட்டதாகக் கருதப்படும் சிலப்பதிகாரத்தில் பல இடங்களில் கொடிகள் குறித்த குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. உதாரணமாக ,சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தில் கண்ணகியும் கோவலனும் மதுரைக்குள் நுழைவதற்கு முன்பாக நகரை வெளிப்புறமாகச் சுற்றிவருகின்றனர். அப்போது "போர் உழந்து எடுத்த ஆர் எயில் நெடுங்கொடி/ வாரல் என்பன போல மறித்துக் கைகாட்ட" என்கிறது ஒரு வரி. அதாவது பல பகைவர்களை வென்று, வெற்றிக் கொடியாக மதுரை நகரின் மீது பறந்து கொண்டிருந்த கொடிகள், கண்ணகியும் கோவலனும் அடையப்போகும் துயரத்தை முன்பே உணர்ந்ததைப் போல, வராதே மறித்துக் கைகாட்டின என்கிறது சிலப்பதிகாரம்.
கொடிகளில் சின்னங்களைப் பயன்படுத்துவதும் சங்க காலத்திலேயே இருந்திருக்கிறது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் கொடிகளில் வில், புலி, மீன்கள் இடம்பெற்றிருந்ததை சங்கப் பாடல்கள் சொல்கின்றன.
பெரும்பாலும் அரசர்களுடனேயே கொடிகள் தொடர்புபடுத்தப்பட்டாலும் தமிழில் கடவுள்களின் கொடியை குறிப்பிடும் வழக்கமும் இருக்கிறது. குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலில், "சேவலங் கொடியோன் காப்ப ஏம வைக லெய்தின்றா லுலகே" என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. அதாவது சேவல் கொடியை உடையவன் (முருகன்) காப்பதால் உலகிலுள்ள உயிர்கள் இன்பமான நாட்களை அடைகின்றன" என்கிறது அந்தப் பாடல்.
ஆசியப் பகுதிகளில் இருந்த கொடிகளைப் பயன்படுத்தும் வழக்கம், இஸ்லாத்தைப் பின்பற்ற ஆரம்பித்தவர்களால் ஐரோப்பாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது என்கிறது பிரிட்டானிகா கலைக்களஞ்சியம். இதற்குப் பிறகு ஐரோப்பாவில் தேசியக் கொடிகள் உருவாக்கப்பட்டன. பெரும்பாலும் அந்த நாடுகள், எந்தப் புனிதர் (patron saint) தங்களைக் காப்பதாக கருதுகிறார்களோ, அந்தப் புனிதர்களை மையமாக வைத்து தேசியக் கொடிகளை உருவாக்க ஆரம்பித்தன. கிட்டத்தட்ட 14 - 15ஆம் நூற்றாண்டுகளில் உலகம் முழுக்க கொடிகள் என்பவை நாடுகள், அரசர்கள், அமைப்புகளின் சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட ஆரம்பித்தன.
"சிந்துச் சமவெளி காலகட்டம் என்பது அரசுகளே உருவாகாத காலகட்டம். உள்ளூர் மட்டத்தில் ஏதாவது ஒரு அமைப்பு இருந்திருக்கலாமே தவிர எல்லோரையும் கட்டுப்படுத்திய அரசுகள் இருந்ததாகத் தெரியவில்லை. தவிரவும் சிந்துவெளிக் குறியீடுகள் என்ன குறிக்கின்றன என்பது குறித்த விவாதங்களும் இருக்கின்றன. ஆகவே, அந்த காலகட்டத்தில் கொடிகள் இருந்தனவா என்பதைவிட, அந்த காலகட்டத்துக் குறியீடுகளை ஆராய்வது சுவாரஸ்யமாக இருக்கும்" என்கிறார் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும் சிந்துவெளி ஆய்வாளருமான ஆர். பாலகிருஷ்ணன்.
"சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் சின்னமாக இருப்பது வில், புலி, மீன் ஆகிய சின்னங்கள். தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் இருந்து வெகுதூரத்தில் இருக்கும் சிந்துச் சமவெளியிலும் இந்த மூன்று சின்னங்களும் இருக்கின்றன. அதேபோல, உலகில் சிங்கங்கள் இந்தியாவின் சில பகுதிகளையும் ஆப்பிரிக்காவையும் தவிர வேறு எங்கும் கிடையாது. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது இந்தியாவின் பல அரசுகள் சிங்கத்தை தம் கொடியில் பயன்படுத்தியதில் ஆச்சரியமில்லை. ஆனால், இலங்கையில் சிங்கம் இருந்ததேயில்லை. ஆனால், அந்நாட்டின் கொடியில் சிங்கம் இருக்கிறது. அதேபோல, சிங்கம் வசிக்காத பகுதியான பிரிட்டனின் பல அரச முத்திரைகளில் சிங்கம் இடம்பெற்றுள்ளது. ஆகவே, ஒரு அரசு தம் கொடிக்கான சின்னத்தை எங்கிருந்து எடுத்துக்கொள்கிறது, ஏன் எடுத்துக்கொள்கிறது என்று ஆராய்வது மிக சுவாரஸ்யமானது" என்கிறார் ஆர். பாலகிருஷ்ணன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு