உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோவில், சிபிஐ அலுவலகம் அருகே வில்லும், அம்பும் கொண்டு நபர் ஒருவர் ஒரு உதவி ஆய்வாளரை தாக்கிய அதிர்ச்சி சம்பவம் மே 23ஆம் தேதி நடந்துள்ளது. சிசிடிவி காட்சியில் பதிவான இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
பீஹாரைச் சேர்ந்த 55 வயது தினேஷ் முர்மு என அடையாளம் காணப்பட்ட நபர், திடீரென சிபிஐ அலுவலக வளாகத்துக்குள் நுழைந்து, அம்பைப் பாய்ச்சியுள்ளார். இதில் உதவி ஆய்வாளர் வீரேந்திர சிங் மார்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
ஆய்வாளர் சிங்கின் கத்தும் சத்தத்தை கேட்டு வெளியே வந்த பிற சிபிஐ அதிகாரிகள், உடனடியாக தாக்குதல் நடத்தியவரை கட்டுப்படுத்தினர். அவரை கம்பியால் அடித்து கீழே தள்ளினர். பின்னர் உடனடியாக ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டு, காயமடைந்த சிங்கை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகின்றார். அந்த தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர், தினேஷ் முர்முவை போலீசார் கைது செய்து, கொலை முயற்சி வழக்கில் கைதுசெய்தனர்.
விசாரணை நடத்தியதில், கடந்த 1993-ஆம் ஆண்டு ரயில்வே ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணையில் தினேஷ் முர்மு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதற்காக பழிவாங்கும் நோக்கத்தில் அவர் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. சிபிஐ அதிகாரி வீரேந்திர சிங், அப்போது அந்த வழக்கை விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் சிபிஐ அலுவலகங்களில் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், அதிகாரிகளை தாக்கும் செயலில் ஈடுபட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகவலை தளங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.