ஹரியானாவின் பஞ்ச்குலா நகரத்தில் பயங்கர சம்பவம் ஒன்று வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டேராடூனைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பெற்றோர், மூன்று சிறுவர்கள் மற்றும் மூத்த குடும்பத்தினர்கள் காரில் அமர்ந்தபடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பாகேஷ்வர் பாபாவின் ஹனுமான் கதா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்த இக்குடும்பம், நிகழ்ச்சிக்குப் பிறகு டேராடூனுக்கு திரும்பும் வழியில் தங்கள் உயிரை மாய்த்தனர்.
இந்த சம்பவம் திங்கட்கிழமை இரவு பஞ்ச்குலா பகுதியில் நிகழ்ந்தது. இரவு 11 மணிக்கு காரில் சந்தேகத்திற்கிடையாக சிலர் இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காரிலிருந்த 7 உடல்களையும் மீட்டனர். உடனடியாக அந்த உடல்களை தனியார் மருத்துவமனையின் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.
விசாரணையின் போது, பிரவீன் மிட்டல் என்பவர் டேராடூனில் சுற்றுலா மற்றும் பயண சேவை தொழிலை தொடங்கியிருந்தார். தொழிலில் ஏற்பட்ட பெரிய நஷ்டம் மற்றும் கடனில் சிக்கிய சூழ்நிலை காரணமாக, வாழ்க்கை பெரும் சிரமமானது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவரும், அவரது குடும்பமும் தற்கொலைக்கு உடன்பட்டதாக போலீசார் கூறினர். மேலும், சம்பவ இடத்தில் இருந்து தற்கொலைக் குறிப்பு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சோகமான சம்பவம் மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.