தட்டையான பாதங்கள் கொண்டவர்கள் இனி தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் வேலையில் சேர முடியாத வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
தட்டையான பாதம் கொண்டவர்கள் பிரேக்கை சரியான நேரத்தில் அழுத்துவதில் தாமதம் ஏற்படுவதாகவும், இதனால் விபத்துகள் ஏற்படலாம் என்ற காரணத்தினால் அவர்கள் ஓட்டுநர் வேலைக்கு தகுதியானவர்கள் அல்ல என்று புதிய வழிமுறைகளை சாலை போக்குவரத்து நிறுவனம் (Institute of Road Transport) வகுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. தற்போது இந்த வழிமுறைகளின் அடிப்படையிலேயே மருத்துவ தகுதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத எலும்பு மூட்டு அரசு மருத்துவர் பேசுகையில், "தட்டையான பாதங்கள் கொண்ட காரணத்தினால் ஒருவரை தகுதி நீக்கம் செய்ய இயலாது. தட்டையான பாதங்கள் கொண்ட அனைவருக்கும் வலி போன்ற அறிகுறிகள் எதுவும் இருக்காது. அவர்களால் தினசரி வாழ்வை எந்த இடையூறும் இல்லாமல் மேற்கொள்ள முடியும்.
ஆனால் சிலருக்கு அறிகுறிகள் ஏற்படலாம். தட்டையான பாதம் கொண்ட ஒருவருக்கு எப்போது அறிகுறிகள் உருவாகும் என்று யாராலும் சொல்ல முடியாது. அப்போது அவர்களால் வாகனம் ஓட்டுவது சிரமமாக இருக்கலாம். ஆனால் காலில் வலி உள்ளிட்ட பிரச்னைகள் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம்" என்கிறார்.
பிரேக் அழுத்துவதில் அவர்களுக்கு தாமதம் ஏற்படுமா என்று அரசு மருத்துவரிடம் கேட்ட போது, அதை விரிவான ஆய்வுகள் மூலமே கூற முடியும் என்றார். "ஒவ்வொரு இயலாமைக்கும் ஒரு இயலும் தன்மை உண்டு. உடலில் எந்த கோளாறும் இல்லாத ஒருவர் வாகனம் ஓட்டுவதற்கே பயப்படுவார். சிலர் வாகனம் ஓட்டும் போது, ஒரு இக்கட்டான சூழலில் துரிதமாக முடிவு எடுக்கும் திறன் இல்லாதவர்களாக இருக்கலாம். எனவே தட்டையான பாதம் கொண்டதாலேயே ஒருவர் வாகனம் ஓட்ட தகுதியற்றவர் என்று கூறுவது சரியாக இருக்காது.
தட்டையான பாதங்கள் கொண்டவர்களுக்கு முக்கியப் பிரச்னை உடல் எடை. அவர்களால் அதிக நேரம் நின்று வேலை செய்வது கடினமாக இருக்கலாம். எனவே பொதுவாக காவல்துறையில் தட்டையான பாதங்கள் கொண்டவர்களை விரும்புவதில்லை. அவர்கள் பணியிலிருந்து விலக்கு கேட்பார்கள் என்று கருதப்படுகிறது. ஆனால் அமர்ந்து வாகனம் ஓட்டும் போது உடல் எடை ஒரு பிரச்னையாக இருக்கப் போவதில்லை." என்று அவர் கூறுகிறார்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திராவிலும் இதே சிக்கல் சில ஆண்டுகளுக்கு முன் எழுந்தது. ஆந்திர பிரதேசத்தில் 2018-ம் ஆண்டு போக்குவரத்துத் துறையில் இருந்த உதவி மோட்டார் வாகன உதவி ஆய்வாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களை மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பி வந்தது.
அந்தப் பதவிக்கு எழுத்துத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தும் நாகேஸ்வரய்யா என்பவர் தேர்வாகவில்லை. அவரது வலது பாதம் தட்டையாக இருந்ததால் அவருக்கு அந்தப் பணி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து நாகேஸ்வரய்யா நீதிமன்றத்துக்கு சென்றார். தட்டையான பாதம் ஒரு உடல் ஊனம் அல்ல என்று அவர் வாதிட்டார்.
எனினும் நீதிமன்றம் அவரது வாதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. தட்டையான பாதம் ஊனம் இல்லை என்றாலும், மோட்டார் வாகன உதவி ஆய்வாளர் பணிகளை முழுமையாக செய்ய அது ஒரு தடையாக இருக்கும் என்று 2022-ம் ஆண்டில் நீதிமன்றம் கூறியது.
பாதங்களின் அடிபகுதியில் குதிகாலுக்கும் விரல்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு வளைவு காணப்படும். இந்த வளைவு உடலின் எடையை கால் முழுவதும் பகிர்ந்து கொடுப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.
நடக்கும் போதும், ஓடும் போது ஏற்படும் அதிர்வுகளை தாங்கவும், தேவைப்படும் சமநிலையை வழங்குவதிலும் இந்த வளைவு முக்கியமானதாகும். இந்த வளைவு பாதத்தில் இல்லாதது 'தட்டையான பாதங்கள்' (pes planus/flat foot) என்ற மருத்துவ நிலையாகும்.
தட்டையான பாதங்கள் பிறவியிலேயே சிலருக்கு இருக்கலாம். குழந்தைகள் வளரும் பருவத்தில் அவர்களுக்கு ஏதேனும் காயங்கள் காரணமாக ஏற்படலாம். நாள்பட்ட சர்க்கரை நோய், நியூரோபதி உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படலாம்.
பெற்றோர்களுக்கு தட்டையான பாதங்கள் இருந்தால் குழந்தைகளுக்கு ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பெரும்பாலானவர்களுக்குத் தட்டையான பாதங்கள் இருப்பதால் வலி ஏற்படுவதில்லை, அவர்களுக்கு எந்த விதமான மருத்துவ சிகிச்சையும் தேவைப்படாது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தட்டையான பாதங்களால் எப்போது உங்களுக்கு வலி, வீக்கம், அசௌகரியம் ஏற்படுகிறதோ, அன்றாட வேலைகளைச் செய்வதில் சிரமம் ஏற்படுகிறதோ அப்போது அதை கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்கிறார் எலும்பு மூட்டு மருத்துவரான பி.சுந்தர் குமார்.
"இப்போது பலரும் தட்டையான பாதங்கள் குறித்து இணையத்தில் படித்துத் தெரிந்து கொண்டு தங்களுக்கும் அது பிரச்னையாக இருக்குமோ என்று நினைத்து பிரத்யேக காலணிகள், உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனர். ஆனால் இது முற்றிலும் தேவையற்றது. தட்டையான பாதங்கள் பலருக்கும் உள்ள மிகவும் பொதுவான மருத்துவ நிலையாகும். அதனால் உடலில் அறிகுறிகள் தென்படும் போது தான் அதை சரி செய்யவோ, சிகிச்சை எடுத்துக் கொள்ளவோ வேண்டும்" என்கிறார்.
எந்த அறிகுறியும் இல்லாமல் தட்டையான பாதங்கள் கொண்டிருப்பவர்களால் 100% இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
"தட்டையான பாதம் கொண்டிருப்பதாலேயே அவர்களுக்கு எந்த இயலாமையும் ஏற்படப் போவதில்லை. அவர்களால் வழக்கம் போல நடப்பது, ஓடுவது என அனைத்து விதமான செயல்களையும் செய்ய முடியும்." என்கிறார் மருத்துவர் சுந்தர் குமார்.
தட்டையான பாதங்கள் கொண்டிருந்தால் வாகனம் ஓட்ட முடியாதா?ஒருவருக்கு தட்டையான பாதங்கள் இருப்பதாலேயே அவரால் வாகனம் ஓட்ட இயலாது என்று கூற முடியாது என்கிறார் மருத்துவர் சுந்தர் குமார்.
"தட்டையான பாதங்கள் கொண்டவருக்கு கூடுதலாக வேறு என்ன பாதிப்புகள் உள்ளன என்று அறிந்துக் கொள்ளவேண்டும், அவர் உடல் பருமனாக இருக்கிறாரா, அவருக்கு வலி, வீக்கம் இருக்கிறதா, எலும்புகள் சிதைந்துள்ளனவா என்று கண்டறிய வேண்டும்."
"இவற்றை கவனிக்காமல் ஒருவருக்கு தட்டையான பாதங்கள் இருப்பதாலேயே அவரால் வாகனம் ஓட்ட இயலாதென்று கூற முடியாது. உலக புகழ்பெற்ற, வேகமான ஓட்டப்பந்தய வீரர் ஹூசைன் போல்ட் தட்டையான பாதங்கள் கொண்டவர். அவருக்கு தட்டையான பாதங்கள் எந்த விதத்திலும் தடையாக இருக்கவில்லை" என்கிறார் மருத்துவர் சுந்தர் குமார்.
ஆரோக்யமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது மிகவும் அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். தட்டையான பாதங்கள் கொண்டவர்களுக்கு உடல் பருமனாகாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகிறது. உடல் எடை அதிகரிக்கும் போது, தட்டையான பாதங்களினால் வலி ஏற்படலாம். அதே போன்று, மந்தமாக இல்லாமல் சுறுசுறுப்பாக இருப்பதும் அறிகுறிகள் தென்படாமல் இருக்க அவசியமானது என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
தட்டையான பாதங்கள் இருப்பதை கண்டறிய முடியுமா?நடக்கும் போது, பாதங்கள் முழுவதுமாக காலில் பதிந்தால் தட்டையான பாதங்கள் இருப்பதாக அறிந்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் பி சுந்தர் குமார். "அல்லது காலை நீரில் நனைத்து பின்பு வறண்ட கான்கிரீட் போன்ற தளத்தில் நடக்கும் போது, அதில் பதியும் கால் தடத்தைப் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். பாதங்கள் இயல்பாக இருந்தால் அந்த தடத்தில் ஒரு வளைவு தெரியும். வளைவு இல்லாமல் கால் பாதம் முழுவதும் தெரிந்தால் தட்டையான பாதங்கள் உள்ளதாக அர்த்தம்" என்கிறார்.
நிறைய குழந்தைகளில் தட்டையான பாதங்கள் காணப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பிறக்கும் போது தட்டையாக இருந்தாலும், வளரும் போது குழந்தைகளுக்குப் பாதத்தில் தேவையான வளைவு ஏற்படும், அதற்கான தசை மற்றும் எலும்பு வளர்ச்சி தானாக ஏற்படும் என்று கூறுகின்றனர்.
"குழந்தைகள் நடப்பத்தில் தாமதம், வித்தியாசமாக நடப்பது, சமநிலையில்லாமல் நடப்பது ஆகியவற்றை கவனித்தால் மருத்துவர்களை அணுகலாம். சில நேரங்க்களில் எலும்புகள் சரியாக பிரிந்து வளராமல் ஒன்றாக ஒட்டிக் கொண்டிருக்கலாம். அது போன்றவற்றுக்கு மருத்துவ கவனம் தேவைப்படும்." என்கிறார் மருத்துவர் சுந்தர் குமார்.
ஏற்கெனவே குறிப்பிட்டது போல தட்டையான பாதங்களோடுச் சேர்த்து அதனுடன் சம்பந்தப்பட்ட அறிகுறி கொண்டவர்களுக்கு மட்டுமே சிகிச்சை தேவைப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
"எலும்புகளில் ஏதேனும் கோளாறு இருந்தால் அதனைச் சரி செய்ய அறுவை சிகிச்சை தேவைப்படலாம். ஆனால் அனைவருக்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமில்லை. சிலருக்குப் பிரத்யேக காலணிகள் பயன்படுத்துவதே வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் சிலருக்கு காலுக்கான சில பயிற்சிகள் சொல்லித்தரப்படும்" என்று மருத்துவர் சுந்தர் குமார் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு