Dinamaalai May 28, 2025 03:48 AM

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் வசித்து வருபவர் விக்கி யாதவ். இவர் மதுபான கடத்தல் வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதன்படி 150 லிட்டர் மதுபானம் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.  மதுபான கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணவனை சந்திக்க, அவரது மனைவி வத் சாவித்திரி விரத நாளில் காவல் நிலையம் வரை சென்றார். அங்கு, திலகம் இட்டு, பாதுகாப்பு நூல் கட்டி, அவரது பாதங்களைத் தொட்டு ஆசிபெற்ற சம்பவம் பெரும் நெகிழ்ச்சியையும், சுற்றியுள்ளவர்களை உணர்ச்சிவசப்படுத்தியுள்ளது.

விக்கியுடன் சேர்ந்து சுமித் யாதவ் என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தார். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டிய நிலையில், விக்கியின் மனைவி காவல் நிலையத்துக்குச் சென்று, வத் சாவித்திரி விரத வழிபாட்டை செய்ய அனுமதி கேட்டார். அவரது உண்மையான பக்தியையும், நம்பிக்கையையும் மதித்த காவல் நிலைய பொறுப்பாளர், மனிதாபிமான அடிப்படையில் சிறிது நேரம் வாய்ப்பு வழங்கினார்.


அந்தப் பெண், தனது கணவனை உணர்வுப்பூர்வமாக  வரவேற்று, திலகம் இட்டு, பாதுகாப்பு நூல் கட்டினார். பின்னர், அவரது கால்களைத் தொட்டு ஆசிபெற்றார். இந்தக் காட்சியைக் கண்டு காவல் நிலையத்தில் இருந்தவர்களும் மௌனமாக நின்று கொண்டிருந்தனர் . கணவரான விக்கி யாதவ், தனது மனைவியின் அன்பையும், நம்பிக்கையையும் கண்டு உணர்ச்சிவசப்பட்டு, கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். இச்சம்பவம் குறித்த  வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.