கடந்த வாரம் குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பயங்கர விபத்துக்குள்ளானது. விமானம், பிஜே மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த விடுதியின் மீது மோதி வெடித்தது.
இந்த சோகமான சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில் ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார்; மற்ற 241 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விடுதியில் உணவருந்திக் கொண்டிருந்த 5 மாணவர்களும் உயிரிழந்தனர். பலர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தருணத்தில், விமான விபத்துகள் குறித்து ஆய்வு செய்யும் முன்னாள் அமெரிக்க கடற்படை விமானி கேப்டன் ஸ்டீவ் ஷீப்னர், இந்த விபத்து குறித்த வீடியோக்களை ஆராய்ந்து அதற்கான சாத்தியமான காரணங்களை வெளிக்கொணர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், விமானத்தின் இரண்டும் எஞ்சின்களும் செயலிழந்திருக்கக்கூடும் எனத் தெரிவித்தார். அதேபோல், பறவை மோதல், எரிபொருள் குறைபாடு அல்லது லேண்டிங் பிளாப் பிழை போன்றவையும் இதற்குக் காரணமாக இருக்கலாம் எனவும் கூறினார்.
ஸ்டீவ் ஷீப்னர் மேலும் கூறுகையில், விமானத்தில் ராம் ஏர் டர்பைன் (RAT) இயக்கப்பட்டதற்கான வீடியோ மற்றும் ஒலித் தடங்கள் இருப்பதாகவும், இது இரட்டை எஞ்சின் செயலிழப்பு ஏற்பட்டதை உறுதிப்படுத்தும் எனவும் தெரிவித்தார். RAT என்பது எமர்ஜென்சி சக்தி வழங்கும் கருவி. பொதுவாக இது விமான சக்தி முற்றிலும் போய்விட்ட பிறகே இயக்கப்படும். விமானம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே RAT இயக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், விமானம் 400–500 அடி உயரத்தில் சக்தி இழந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும், அந்த உயரத்தில் எஞ்சினை மீண்டும் இயக்க முயற்சி செய்வது சாத்தியம் இல்லை என்றும் ஸ்டீவ் கூறினார்.
இந்நிலையில், இந்த விமான விபத்தின் பின்னணி குறித்து மேலும் விரிவான விசாரணை மத்திய அரசால் மற்றும் விமானப் பாதுகாப்புத் துறையால் தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது. நாடு முழுவதும் இந்த விபத்து குறித்து கவலை மற்றும் பாதுகாப்பு சீர்திருத்த கோரிக்கைகள் எழுந்துள்ளன.