கோவை தனியார் மருத்துவக் கல்லுாரியில் படித்து வந்த பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவி பவபூரணி கழிவறையில் உயிரிழந்து கிடந்தது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இந்த மரணம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமாக முன் வந்து கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, 5 நாட்களுக்குள் இதுபற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், மருத்துவ மாணவி மூச்சுத்திணறலால் (asphyxia) உயிரிழந்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாகவும், அதற்கான காரணம் குறித்து உடற்கூறு ஆய்வக முடிவுகள் வந்த பின்பே தெரியவருமென்றும் கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.
மீண்டும் படிக்க வந்த பவபூரணிநாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டியைச் சேர்ந்த கந்தசாமியின் மகள் பவபூரணி (வயது 29), கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லுாரியில் மயக்க மருந்தியல் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஜூலை 6 ஞாயிற்றுக்கிழமையன்று காலையில், பவபூரணி இறந்துவிட்டதாக அவருடைய தந்தைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 5 ஆம் தேதி சனிக்கிழமையன்று இரவு, அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சைப் பிரிவில் பவபூரணி பணியாற்றி வந்ததாகவும், மறுநாள் காலை 6 மணியளவில் பணி மருத்துவர் அறையிலுள்ள கழிவறையில் இறந்து கிடந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பவபூரணியின் தந்தை கந்தசாமி, கூலித்தொழிலாளி. தாயார் இறந்து விட்டார். பவபூரணி மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லுாரியில் கடந்த 2014–2020 ஆம் ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ். முடித்த பின்பு, அதே மருத்துவமனையில் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, கோவை பி.எஸ்.ஜி. கல்லுாரியில் சேர்ந்துள்ளார் என்று பவபூரணியின் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர்.
பவபூரணியின் மரணம் தொடர்பாக, பீளமேடு காவல் நிலையத்தில் மர்ம மரணம் என்ற பிரிவில் (CRPC 174) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த பின், குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையில் வெளிக்காயம் எதுவுமில்லை என்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அவருடைய உடற்கூறு மாதிரிகள், ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் பீளமேடு போலீசார் தெரிவித்தனர்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் அர்ஜூன், ''கழிவறைக்குச் சென்ற அவர் வெகுநேரமாக வரவில்லை என்றதும் சக மாணவிகள் சென்று பார்த்துள்ளனர். கழிவறை கதவை உடைத்துத் திறந்தபோது, அவர் உள்ளே கீழே விழுந்து கிடந்துள்ளார். அவருக்கு அருகில் ஒரு சிரிஞ்சும், மருந்து பாட்டிலும் இருந்துள்ளது. அவரை வெளியே கொண்டு வந்து பரிசோதித்தபோது, அவர் இறந்துவிட்டது தெரியவந்துள்ளது. '' என்றார்.
பவபூரணியின் மரணம் குறித்து தங்களுக்கு தாமதமாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், தாங்கள் வரும் முன்பே அவரின் நகைகள் உள்ளிட்ட உடைமைகளை காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியதில் சந்தேகம் எழுவதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பவபூரணி தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் கூறும் நிலையில், அவர் தற்கொலை செய்து கொள்ள முகாந்திரமே இல்லை என்கின்றனர் பவபூரணியின் உறவினர்கள்.
பிபிசி தமிழிடம் பேசிய பவபூரணியின் சித்தப்பா கோவிந்தராஜ், ''எங்களுக்கு முதலில் தகவல் தெரிவித்த போது, பாத்ரூமில் வழுக்கி விழுந்து இறந்து விட்டதாகக் கூறினர். ஆனால் நேரில் சென்றபோது வெவ்வேறு விதமாகத் தகவல் தெரிவித்தனர். முதல் நாள் இரவு பவபூரணி, மருத்துவமனையில் பணியில் இருந்துள்ளார். அவருடன் கூடவே 2 பெண் டாக்டர்கள் இருந்துள்ளனர். அதிகாலை 3 மணியளவில் பவபூரணி, கழிவறை சென்றிருக்கிறார். அதன்பின் அவர் வரவேயில்லை. வேறு ஒரு நோயாளி இரவில் வந்ததால் அவர்கள் கவனிக்கவில்லை என்றும், 6 மணிக்குதான் கழிவறையில் சென்று பார்த்ததாகவும் கூறினர்.'' என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், ''கழிவறையை தட்டியபோது திறக்கவில்லை என்றும், பின்னாலுள்ள கண்ணாடி வழியாக பார்த்தபோது அவர் கீழே விழுந்து கிடந்ததாகவும், அதன் பின் கதவைத் தள்ளித் திறந்ததாகவும் உடனிருந்த பெண் டாக்டர்கள் கூறினர். ஆனால் காலை 8:30 மணிக்குதான் எங்கள் அண்ணனுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். நாங்கள் சென்றபோது அவர்கள் கூறிய தகவல்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால் சிசிடிவி கேமரா காட்சிகளைக் கேட்டோம். அவர்கள் காண்பிக்கவில்லை.'' என்றார்.
அதன்பின் காவல்துறையினர் அவர்களின் மொபைலில் சில காட்சிகளைக் காண்பித்தனர் என்று கூறிய கோவிந்தராஜ், அவர்கள் காண்பித்த காட்சியில் பவபூரணியும், மற்றொரு பெண்ணும் நடந்து செல்வது மட்டும்தான் தெரிந்தது என்றும், கழிவறை கதவை உடைத்தது, அவரைத் தூக்கி வந்தது, பரிசோதித்தது போன்ற எந்தக் காட்சிகளையும் காண்பிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இதே கருத்தைத் தெரிவித்த பவபூரணியின் தம்பி பத்ரி நாராயணன், ''முதல் நாள் இரவு 7 மணிக்கு, 'நான் டூட்டியில் இருக்கிறேன். ரூமுக்கு வந்து பேசுறேன்' என்றார். அதுதான் அவர் என்னிடம் கடைசியாகப் பேசியது. அப்போது அவர் இருந்த மனநிலைக்கு, அவர் மறுநாள் காலையில் இப்படி இறந்திருப்பது பல விதமான சந்தேகங்களை எழுப்புகிறது.'' என்றார்.
பவபூரணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சந்தேகம் எழுப்புவதற்கு முன்பே, இந்த மரணம் குறித்து பல்வேறு தரப்புக்கும் புகார் மனுக்கள் சென்றுள்ளன.
பட்டியலினத்தைச் சேர்ந்த பவபூரணியின் மரணம் குறித்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமாகவே முன் வந்து விசாரணை மேற்கொண்டு, இதுபற்றி விசாரித்து 5 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது.
பவபூரணியின் மரணம் குறித்து தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள சமூக ஊடகப்பதிவில், ''மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய காரணம் என்னவென்று மருத்துவமனை நிர்வாகம் கூற மறுப்பதாகவும் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். மாணவியின் மர்மமான மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து இதுபோல் இனியொரு மரணம் நடக்காத வகையில் அதற்கேற்ற உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.'' என்று கூறியுள்ளது.
இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய சங்கத்தின் நிர்வாகி மது, ''மருத்துவமனை நிர்வாகமும் தெளிவான காரணத்தைச் சொல்ல மறுக்கிறது. காவல்துறை சார்பிலும் சரியான தகவல்களைத் தர மறுக்கிறார்கள். அதனால்தான் இந்த விஷயம் பற்றி சமூக ஊடகத்தில் பகிரங்கமாக எங்கள் பதிவை வெளியிட்டோம். நியாயமான விசாரணை நடக்க வேண்டுமென்பதே எங்கள் கோரிக்கை.'' என்றார்.
அதேபோன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளும், கோவை மாவட்ட ஆட்சியரிடம் இதுதொடர்பாக மனு கொடுத்துள்ளன. இதுபோன்று உயர் கல்வி படிக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து மரணிப்பது பற்றி விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று அவர்கள் அந்த மனுக்களில் வலியுறுத்தியுள்ளனர்.
பிபிசி தமிழிடம் பேசிய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி தினேஷ் ராஜா, ''எய்ம்ஸ் உட்பட பல்வேறு மருத்துவக் கல்லுாரிகளிலும் பட்டியலின மாணவர்கள், மாணவிகள் மர்மமான முறையில் இறப்பது தொடர்ந்து வருகிறது. இந்த மரணத்திலும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது இயற்கை மரணமா அல்லது தற்கொலையா என்பதை காவல்துறை நியாயமான விசாரணையில் உறுதி செய்யவேண்டும். முக்கியமாக பிரேத பரிசோதனை அறிக்கையை வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.'' என்றார்.
தனது சகோதரியின் மரணத்தில் தங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால், அதில் தேசிய மனித உரிமை ஆணையம் தலையிட வேண்டுமென்று மெயில் அனுப்பியிருப்பதாகத் தெரிவித்தார் பவபூரணியின் தம்பி பத்ரி நாராயணன்.
''எனது அக்கா இரவு ஒன்றே முக்கால் மணிக்கு வார்டிலிருந்து வெளியே வந்ததாக சிசிடிவி காட்சியில் தெரிகிறது. அதன்பின் காலை 6 மணி வரை அந்த கழிவறையை யாருமே பயன்படுத்தவில்லை என்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது. அது டாக்டருக்கான தனி அறை என்றனர். ஆனால் வேறு சில படுக்கைகளும் அதில் இருக்கின்றன. பணியில் இருக்கும் டாக்டர் பல மணி நேரமாக வராமல் இருப்பதை ஏன் யாருமே சென்று பார்க்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.'' என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் பத்ரி நாராயணன்.
தனது அக்கா விழுந்து கிடந்த கழிவறையை திறந்து பார்த்த சக மாணவியான மற்றொரு பெண் டாக்டருக்கும், தன்னுடைய அக்காவுக்கும் இடையில் வாக்குவாதம் நடந்ததாக அங்கிருப்பவர்கள் கூறியதாகத் தெரிவிக்கிறார் பத்ரி நாராயணன். மற்ற மாணவர்களுக்கு இருப்பது போல தனது அக்காவுக்கும் நிர்ணயிக்கப்பட்டதை விட 3 மடங்கு அதிகமான பணி அழுத்தம் இருந்த விஷயமும் தனக்குத் தெரியுமென்று கூறினார்.
பவபூரணி யாரையும் காதலிப்பதாகவோ, திருமணம் செய்ய விருப்பமுள்ளதாகவோ தங்களிடம் எந்த விஷயத்தையும் பகிர்ந்தது இல்லை என்று அவரது கோவிந்தராஜ் கூறுகிறார்
பவபூரணியின் மரணம் குறித்து பல்வேறு தரப்பிலும் எழுப்பப்படும் சந்தேகங்கள் குறித்து, கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லுாரி நிர்வாகத்திடம் கருத்து கேட்க பிபிசி தமிழ் முயன்றது. இதுகுறித்து நிர்வாகத்தரப்பு பதிலை கேட்டுச் சொல்வதாக மக்கள் தொடர்பு அலுவலர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எந்த பதிலும் தரப்படவில்லை.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர், ''மாணவி விழுந்து கிடந்த கழிவறையில் அவருக்கு அருகில் இருந்த சிரிஞ்ச்சில் இருந்த மருந்தை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். பிரேத பரிசோதனையில், முதற்கட்டமாக பவபூரணியின் மரணத்துக்கு மூச்சுத்திணறலே (asphyxia) காரணமென்று தெரியவந்துள்ளது. ஆனால் மூச்சுத்திணறலுக்கு ரத்த அழுத்தம் போன்ற உடல்ரீதியான பாதிப்பு காரணமா அல்லது அவர் எடுத்த ஊசி மருந்து காரணமா என்பது தெரியவில்லை.'' என்றார்.
பவபூரணியின் இதயம், நுரையீரல், மண்ணீரல் உள்ளிட்ட பல்வேறு உடல் பாகங்களின் மாதிரிகளும் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்த காவல் ஆணையர் சரவணசுந்தர், அது வருவதற்கு சில வாரங்களாகலாம் என்பதால் அவற்றின் முடிவு வரும் வரை இறப்புக்கான காரணம் குறித்து எந்த முடிவுக்கும் வரமுடியாது என்றும் கூறினார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு