கோவையில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்சேர்ப்பு நடத்தியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாத அமைப்புகளின் நடமாட்டத்தை கண்காணிக்கத் தவறிய திமுக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரபுக் கல்லூரியில் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) அமைப்பு உட்பட தீவிரவாத இயக்கங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தியதாக அக்கல்லூரியின் முதல்வர் உட்பட இருவரை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தொடர்புடையதாக கூறி தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தேசிய புலனாய்வு முகமையால் அடுத்தடுத்து கைது செய்யப்படுவதன் மூலம், அச்சம்பவத்தை சாதாரண விபத்து எனக்கூறி மூடி மறைக்க முயன்ற திமுக அரசின் உண்மையான முகம் அம்பலப்பட்டுள்ளது.
1998 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் திரு மு.கருணாநிதி அவர்கள் ஆட்சிக்காலத்தின் போது நாட்டையே உலுக்கிய கோவை குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்படுத்திய துயரம் இன்றும் நீங்காத நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டில் அவரின் புதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக்காலத்திலும் நடைபெற்றிருக்கும் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தீவிரவாத அமைப்புகள் தலைதூக்குகிறதா ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே, தமிழகத்தில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்ற நிலையில், காவல்துறையை செயல்படவிடாமல் முடக்கி வைத்திருப்பதாக எண்ணத் தோன்றும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்கும் அளவிற்கு கொண்டு சென்றிருக்கும் திமுக அரசு, தற்போது, தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் நடமாட்டத்தையும் கண்காணிக்க தவறியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஆட்சி நிறைவடையும் தருவாயிலாவது விழிப்புடன் செயல்பட்டு தீவிரவாத செயல்கள் வேரூன்றாத வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும். திமுக அரசின் அலட்சியம் இனியும் தொடருமேயானால் 2001 ஆம் ஆண்டு மக்களே வெகுண்டெழுந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது போலவே, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் ஆட்சி மாற்றத்தை மக்களே ஏற்படுத்துவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.